தொடர்கள்
அழகு
தாய் நாடா தந்தை நாடா ?? - பால்கி

20240409173001688.jpg


தாய்

தாய்மை

இச்சொற்களின் உண்மையான அர்த்தத்தை நமது பாரதத்தின் பண்டைய புராணங்களிலேயே காணக் கிடைக்கும்.

இதனால் தான் இப்படி பாடினார் மஹாகவி பாரதியார்;

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனி சிறந்தனவே

இது ஏதோ இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்று எண்ணவேண்டாம்.

ஜனனீ ஜன்மபூமிஸ் ச ஸ்வர்காதபி கரீயஸீ என்று ராமர் தனது தம்பி லக்ஷ்மணனுக்கு சொல்வதாக த்ரேதா யுகத்தில், அதாவது, வேத கணக்குப்படியே சுமார் எட்டு லட்ஷத்து எண்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னம் நடந்தேறிய ராமாயணம் கூறுகிறது.

இதிலிருந்தே, வேதங்களில் தாயின் உயர்ந்த நிலை, அவதாரங்களும் தாயைப் போற்றியதும் தெரிய வருகிறது.

பெற்ற தாயோடு பிறந்த நாட்டை ஒப்பிட்டதிலிருந்தே தாய் போன்றவள் தான் நாடும் என்பது எளிதில் விளங்குகிறது. ஏனெனில், தாயின் நிலை அவ்வளவு உத்தமமானது.

இன்னும் ஒரு படி மேலே சொல்வதானால், உலகிலேயே நம் நாட்டைத் தவிர வேறெந்த நாடும் இந்த தத்துவததைப் பின்பற்றுவதில்லை. உலகின் மற்ற நாடுகள் அனைவரும் தம் நாட்டை தந்தையர் நாடு என்றே சொல்கிறார்கள். நாம் மட்டும் தான் பிறந்த நாட்டை தாய் நாடு என்று நேசிக்கிறோம்.

20240409173801843.jpg

இந்த மாறுபட்ட குறியீடுகளுக்கு அணுகுமுறையிலேயே அடிப்படையான வித்தியாசமுள்ளது.

அவர்கள் அவர்களது, தந்தை, பாட்டனாரும், முந்தையரும் வாழ்ந்தார்கள் என்ற காரணத்தாலேயே தந்தையர் நாடு என்கிறார்கள்.

அதே சமயம், நாம், நமது தாய்மார்களும் பாட்டிகளும் வாழ்ந்த காரணத்தால் மட்டும் தாய்நாடு என்று அழைக்கவில்லை. நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இந்த பூமியையே தாயாகப் பார்க்கிற மனோ பாவத்தை நமது முன்னோர்கள் நமக்குக் கொடுத்திருந்ததால் தான் நாம் நம் நாட்டை தாய் நாடாகக் கண்டோம், காண்கிறோம்.

வந்தேமாதரம் என்போம் – எங்கள்

மாநிலத்தாயை வணங்குதும் என்போம்

மஹாகவி பாரதியார்

உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்போது தான் உறவுகள் உண்டாகிறது. உறுதியாகிறது. காலங்காலமாய் அப்படித்தான் தாய் தந்தை, அண்ணன் அக்காள், தங்கை, கணவன், மனைவி என்பன போன்ற உறவுகள் பிறந்துள்ளன. இந்த உணர்வுகளை விஞ்ஞானத்தால் விளக்க முடியாது.

அப்படி உணர்வகளுக்கு மதிப்பளித்து உயர்ந்து நிற்கும் உறவு தான் தாய் உறவு.

ஈரைந்து மாதங்கள் கருவோடு நம்மை தாங்கிப் பெற்றெடுத்து, சீராட்டி, பாலூட்டி, வளர்த்து, ஆளாக்கிய பெருமை பெற்ற தாய்க்கு எத்தனை ஜென்மங்கள் எடுத்து உழைத்தாலும் அவள் நமக்கு செய்ததை ஈடு செய்யவே முடியாது. அது போலத்தான் நமது தாய்நாடும்.

பசுத்தாய், கங்காமாதா, காவிரித்தாய், பூமாதா, பிருந்தா(துளஸி)மாதா, கடல் அம்மா, பேச்சியம்மன்(கலைமகள்), செல்லியம்மன்(அலைமகளாகிய செல்வத் திருமகள்), மலைமகள் (பார்வதி), கீதா மாதா (பகவத் கீதை), தமிழன்னை, பாரதமாதா, என அனைத்தையும் தாயாகப் பார்க்கின்ற பாவனை உலகில் நம்மைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

ஆதி தெரியாத வேதமும், மாதா பூமி; புத்ரோஹம் ப்ருதிவ்யா; என்றே முழங்குகின்றது. பூமி நமது தாய். நாமனைவரும் பூமித்தாயின் புதல்வர்கள் என்பது தான் அதன் விளக்கம்.

பாரத நாட்டில் மட்டும் தான் தன்னை ஈன்றெடுத்த பெண்ணை மட்டும் தாயாகப் பார்க்காமல் உலகிலுள்ள மற்ற பெண்களையும் தாயாகப் பார்க்கும் கண்ணோட்டம் இயல்பாக இருக்கிறது. இதனாலேயேதான் நம் பண்பாடு மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்வானதாகக் கருதப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் ஆற்றிய உரையில் சொன்னது இது தான்

“உங்கள் நாட்டின் பண்பாட்டிற்கும் எங்கள் நாட்டின் பண்பாட்டிற்கும் ஒரு சிறு வித்தியாசமே உள்ளது.

உங்கள் நாட்டின் ஆடவர்கள் தன்னை ஈன்றெடுத்த தாயைத் தவிர மற்ற எல்லாப் பெண்களையும் மனைவிகளாகப் பார்க்கின்றனர்.

ஆனால் எங்கள் நாட்டின் ஆடவர்கள் தனது சொந்த மனைவியைத்தவிர மற்ற எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்கின்றனர். இது நம் அணுகுமுறையிலேயே அடிப்படையான மாற்றத்தை உண்டு பண்ணுகிறது”.