அன்புள்ள அம்மா,
நலம் நலம் அறிய ஆவல்.உன்னை விட்டு வெகு தொலைவில் வசிக்கும் நான், என் வாழ்க்கையின் அத்தியாயங்களை தனிமையில் இருக்கும்போது, நிறைய புரட்டிப் பார்க்கிறேன்.உன்னை பற்றி நினைக்கும் போது,என் மனதில் நிறைய ஆச்சரியங்கள் ஏற்படுகின்றன.
உன்னிடம் நிறைய கேள்விகள் கேட்க தோன்றுகிறது.
அம்மா,அப்பாவியான நீ ஒரு சில வார்த்தைகளில் பெரிய அர்த்தத்தை உணர வைப்பாய். நான் சிறு வயதாக இருக்கும்போது அப்பா வாங்கி கொடுத்த நவீன உடையை அணிந்து கொண்டிருந்தேன்.அப்போது வீட்டு பெரியோர்கள்,”அந்த உடைகளை நான் அணிய நீ அனுமதிக்க கூடாது“என்று உன்னிடம் சொன்னார்கள்.அதற்கு நீ ஒரே வாக்கியத்தில் மிகவும் இயல்பாக ‘அவளுக்கு அந்த உடைகள் அழகாக இருக்கின்றன’ என்றாய்; உன்னுடைய வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
நான் படித்து முடித்த உடனே, எனக்கு வந்த ஒரு வெளிநாட்டு வரனை முடிக்க வேண்டுமென அப்பா கருதினார். படித்து முடித்த உடனே வெளிநாட்டிற்கு போக நான் விருப்பப்படவில்லை.நான் ஒரு நாள் முழுவதும் என் அறையிலேயே இருந்து,அழுது கொண்டே இருந்தேன்.அம்மா என்னிடம் “உனக்கு பிடிக்கவில்லை என்றால் அப்பா முடிவு கொடுக்க மாட்டார்;அதற்கு ஏன் வீணாக அழுது கொண்டிருக்கிறாய்?” என்பதை மட்டும் தான் சொன்னாய். நீ சொன்னபடியே நான் செய்தேன்,அப்படியே நடந்தது.
தற்போது என்ன முயற்சி செய்தாலும்,இன்றைய காலத்துப் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்றபடி, நான் சொல்ல நினைப்பதை ஒற்றை வரியில் வலுவாக எடுத்து சொல்வதற்கு முடிவதில்லை.
அம்மா, உன்னால் மட்டும் எப்படி மிகவும் சுருக்கமாக சொல்ல முடிந்தது?
அம்மா உனக்கு என்ன பிடிக்கும்,பிடிக்காது என எதுவுமே எனக்கு தெரியாது..ஒருமுறை உன்னை வெளியே அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தேன்.நீ ரசித்து ரசித்து சாப்பிட்ட போது தெரிந்து கொண்டேன்;உனக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று.
அம்மா வேறு என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும்? இப்போதாவது சொல்வாயா?
அம்மா,பொறுமையின் சிகரம் நீ. அப்பாவுக்கு ,பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அனுப்பி , தொடர்ந்து மதிய உணவு சமைக்க தொடங்குவாய் . அதனால் காலை உணவை சாப்பிடாமல் தவற விடுவாய். சில மணித்துளி ஒய்வு எடுப்பதற்குள் மச்சினர்கள் சாப்பிட வர அவர்களுக்கு பரிமாற செல்வாய். இப்படியே மாலை சிற்றுண்டி ,இரவு உணவு என்று தொடர்ந்த வேலைகளை சிரமத்தைக் காட்டிக் கொள்ளாமல் அக்கறையுடன் அனைத்தும் செய்தாய்
அம்மா, எப்படி உன்னால் அனைவரிடமும் முகம் கோணாமல் அன்புடன் இருக்க முடிந்தது?
அம்மா,எனக்குத் தெரிந்த அன்றைய அவ்வை சண்முகி நீதான்.கணவர்,ஐந்து பிள்ளைகள்,மாமியார்,நாத்தனார்,மாமியாருக்கு மாமியார்,மச்சினர்கள் என அத்தனை பேருக்கும் உணவு சமைப்பது,பரிமாறுவது,பூஜை செய்வது,பிள்ளைகளை கோயில்களுக்கு அழைத்துப் போவது என எதனையும் விட்டுவிடாமல் சிறப்பாக செய்தாய்.புத்தகங்களுக்கு அட்டை போடுதல் முதற்கொண்டு , கடைக்கு அழைத்துச் செல்வது வரை எல்லா வேலைகளையும் மறுக்காமல் செய்தாய்.
அப்பா தன் தம்பிகளின் படிப்பு, வேலை என்று உதவி செய்த போது தோள் தந்தாய் அம்மா,இது எப்படி சாத்தியம் உனக்கு?
நடுநிலைப்பள்ளி படிப்பு வரை படித்திருக்கும் நீ,நாட்டு நடப்பெல்லாம் நன்றாக தெரிந்து கொள்வாய்.இவ்வளவு வேலைகளுக்கு நடுவில் தினந்தோறும் செய்தித்தாள் படிப்பாய்; வாராந்திர மற்றும் மாதாந்திர புத்தகங்களை படிப்பாய்;தொலைக்காட்சியில் செய்திகள் கேட்பாய்;
சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பாய் பெரும்பாலும் அந்த காலத்து பெண்கள் இதையெல்லாம் செய்ததில்லை. அம்மா,நீ எப்படி செய்தாய் என்று அதிசயமாகவும் பெருமிதமாகவும் இருக்கின்றது.
அம்மா,எப்படி உன்னால் எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடிந்தது?
வீட்டு விசேடங்களில் என்னால் பங்கெடுக்க முடியாத போது என் சூழ்நிலையை புரிந்துக் கொண்டாய் .ஈகோ என்பதே உனக்கு கிடையாது;அது உனக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.
நான் உன்னுடன் செலவு செய்யும் நேரம், உனக்கு மிகவும் பிடித்தமானது என்றாலும் அதிக நாட்கள் உன்னுடன் இருக்க வேண்டுமென நீ வற்புறுத்தியதே இல்லை; ‘உன்னுடைய வேலைகளை பாரு’ என்று தான் சொல்வாய்.
அம்மா,நீ எப்போதும் பிள்ளைகளாகிய எங்களுக்கு எந்த சிக்கலும்,தொந்தரவும் இருக்கக் கூடாது என்றே நினைப்பாய்.எங்களுக்காக நிறைய உழைத்திருக்கிறாய்,ஆனாலும் எங்களிடம் ஒரு சிறு எதிர்பார்ப்பு கூட வைக்கவில்லை.
அன்புள்ள அம்மா,நீ வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இப்போது உன் உடல் நலன் மற்றும் அவசிய தேவைகள் அனைத்தும் என்னாலும், உடன் பிறந்தவர்களாலும் பூர்த்திசெய்யப்படுகிறது.ஆனால் உன் மனத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதா? தெரியவில்லை…
நீ இத்தனை வளைந்து கொடுப்பவராக இல்லாமல் இருந்திருந்தால் உன் தேவைகள் என்ன என்று எனக்கு தெரிந்திருக்கும்.
உன் அருகில் இருந்த போது ,உன் மனத்தேவைகளைப் பற்றி என்னால் சிந்திக்க முடியவில்லை;இப்போது பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் போது அதனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
உனக்கு என்ன தேவை?
எது உன்னை சந்தோஷப்படுத்தும்?
இது உனக்கு அவசியம் இல்லாதது போல தோன்றலாம்.
உன்னுடைய தேவைகள், ஆசைகள் எப்போதுமே கனவுகளாக மட்டுமே இல்லாமல், அந்த கனவுகளை நனவாக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்.அது சிறிய விஷயமாக இருந்தால் கூட பரவாயில்லை.ஐஸ்கிரீம் சாப்பிடுவதா?பிரத்யேகமான கோயிலுக்கு போவதா? தியேட்டருக்கு போய் சினிமா பார்ப்பதா? ஏதாவது சுற்றுலா தலத்திற்கு செல்வதா ? எது ? எது ?? எது ஆசைப்படுகிறாயோ சொல்லும்மா…
அம்மா ஐ மிஸ் யூ வெரி மச்.
அடுத்த விடுமுறையில், இந்தியாவிற்கு வரும்போது உனக்காக மட்டுமே அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
உன் கனவு மெய்ப்பட ஆசைப்படுகிறேன்,அதற்கு நீ உதவுவாயா ?
இப்படிக்கு
உன் அன்பு மகள் சரளா.
Leave a comment
Upload