தொடர்கள்
கதை
மறு பிறவி 1 கி.ரமணி

20240230080423288.jpeg

(டிசம்பர் 3 2023 காலை 6-30 மணி )

கண் விழித்த போது, தான் கல்லூர் பக்கம் உள்ள வேலிக்காத்தான் முள்ளுக்காட்டுக்குள் படுத்துக் கிடந்ததை உணர்ந்தான் அவன் .

எப்போ திரும்பினோம் என்று அவனுக்கு ஞாபகம் இல்லை.
காலை நன்கு விடிந்து விட்டது.

சூரியன் கிழக்கு தொடுவானத் திலிருந்து மேலே கிளம்பி ஏழு மணி நிலையை எட்டியிருந்தான்.

ஏகப்பட்ட சோர்வுடன் சோம்பலை கொஞ்சநேரம் முறித்து வேட்டியை உதறி மடித்துக் கட்டி விட்டுக் கொண்டான். நினைவுகள் கொஞ்சம் விழிக்க, ரதி சென்றுவிட்டாள் என்று உணர்ந்து கொஞ்சம் சோகமானான். பின் திடீர் அதிர்ச்சியுடன்,தன் சிறிய பழைய டிரங்க் பெட்டியை, எங்கேபோச்சு,என்று, அவசரமாக,ரத்தஅழுத்தம்200 க்கு எகிறத் தேடினான். இருந்தது.

அள்ளி எடுத்து அக்குளுக்குள் அணை த்துக்கொண்டு( எடை அதிகம் )நல்லூர் போகும் வழியில் நடக்க ஆரம்பித்தான்.
வழியெல்லாம் ஒரே ஆச்சர்யம் அவனுக்கு.

. இது என்ன மாயம். இங்கே .?.. இந்தச் சின்ன ஆல மரம் அதற்குள் இப்படி இவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கு . ஏகப்பட்ட விழுதுகள் வேற விட்டிருக்கு.

தெருவெல்லாம் புதுசா கருப்பா மழ மழன்னுட்டு தார் போட்டிருக்கு, பட்டணத்து தெரு போல .? நம்ம ஊருக்கெல்லாம் நாம் இதை நினைத்துப் பார்த்ததே இல்லையே.

நேர நடந்தா பெரிய வாய்க்கால். ஆனா திடீர்னு குறுகிப்போச்சு.கொஞ்சம் தான் தண்ணி ஓடுது. பாலம் புதுசா.? அதுக்குள்ள எப்படி கட்டினாக.?

ரெடிமேடா பாலம் செஞ்சு கொணாந்து வெச்சாங்களா?

கடைசியா பாத்தப்ப இடிஞ்சு போன, சுண்ணாம்புக் காரைல கட்டின, புராதன பாலம் தானே இருந்தது!

வயலெயெல்லாம் இப்போ எவ்வளவு கரும்பு முளைச்சிருக்கு? நேத்து இங்கெல்லாம் நெல்லு தானே வெளைஞ்சிருந்தது.?

பக்கத்து தாமரைக்குளம் எப்படி இவ்வளவு சின்னதாக மாறி விட்டது.ஒரே சேறும் சகதியும். இது ஒரு குட்டை. இல்லையா?
நம்ம பழைய தாமரைக் குளம் எங்க போச்சு.? எவ்வளவு பெரிசா அழகா இருக்கும்.

தெற்கே நம்ம தெரு. முதல் வீடு கிச்சா வீடு. ஏன் இப்படி இடிஞ்சு பாழா மாறிக் கிடக்கு?

அடுத்தது சடகோபன் வீடு. என்ன அதிசயமா இருக்கு! இது ரெண்டு மாடி வீடா மாறிவிட்டது.

ரோட்ல ரெண்டு பக்கமும் ஏகமா புது வீடுகள். பழைய வீடுகள் எங்கே மாயமாக மறைந்தன? சில நல்ல பெரிய வீடுகள் எல்லாம் பாழ் வீடுகள் ஆகிவிட்டன.

நம்ம சுப்புவுடைய மாட்டுக்கொட்டாய் எங்க.?இருபது மாடு நிக்குமே.அங்கேயும் புது மாடி வீடு.நடக்க நடக்க அவனுக்கு ஆச்சரியம்.

சரி ஒருத்தன் ஒரு நாள் ஊர்ல இல்லைனா ஊரே தல கீழா மாறிடுமா?
என்ன நடக்கிறது இங்கே?

ம்..பெருமாள் கோவில் வந்தாச்சு. இது என்ன ஆச்சரியம். எப்படி திடீர்னு இவ்வளவு பெரிய கலர் கலரா பெயிண்ட் அடிச்ச கோபுரம் இங்கே வந்தது...

...வயிறு வேற ரொம்ப பசிக்கிறது... கடைசியா எப்ப சாப்பிட்டோம். எங்கே? எவ்வளவு நாள் முன்பு?
யோசித்தான். ஒன்றும் சரியா ஞாபகமில்லை.

ஒண்ணும் புரியல.

பேய்ப்பசி...வீட்டுக்கு போக இன்னும் ஒரு ஃபர்லாங் இருக்கும். இந்த காலை நேரத்தில் அங்க என்ன இருக்கும். ஒண்ணும் இருக்காது.

செல்லம்மா என்னைப் பார்த்தால் கத்துவாள்.
ஒரு நாள் எங்க காணாமப் போய் தொலைஞ்சே.. என்று.

முதல்ல கோவிலுக்கு உள்ளே போனால் ஏதாவது பொங்கல், ததியோனம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ....
என்று எண்ணியபடி டிரங்குப் பொட்டியைஅணைத்துக்கொண்டு
கோவிலுக்குள் சென்றான். எப்படியும் கொஞ்சம் பொங்கல் கிடைக்க வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையுடன்.

கோவில் அலுவலக அறைக்குள் பெரிய சைஸ் மாச காலண்டர் ஆணியில் தொங்கியது.

அலட்சியமா அதைப் பார்த்தவன் திடுகிட்டுப் போனான்.பின் அவனுக்கு ஒரே குழப்பம். காலண்டர், வருஷம் 2023,மாசம் டிசம்பர் என்று காட்டினதால்.!!


(தொடரும் )