தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் , பிரிவோம் -2 அமெரிக்க அனுபவங்கள் - பொன் ஐஸ்வர்யா

20240227155759149.jpg

இந்த வாரம் டாம்பா நகரைச் சுற்றிப் பார்க்க ,உங்களை அழைத்துச் செல்கிறேன்.

"போர்டோஃபினோ" (Porofino) புது டாம்பா (New Tampa) மத்தியில் 75 ஏக்கரில் அமைந்த ஒரு சமூகக் குடியிருப்பு (Residential Community). இயற்கை அழகு சூழ்ந்த வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகள். இரண்டு பகுதிகளிலும் நேர்த்தியாய் எழுப்பப்பெற்ற நீண்ட நடைபாதைகளோடு கூடிய பத்து பன்னிரண்டு குடியிருப்புகள். ஒவ்வொன்றிலும் 24/48 வீடுகள்.

அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று பல கண்டங்களைப் பூர்வீகமாய்க் கொண்ட பறவைகள் ஒன்றாய் வாழும் கூடுகள். வீடுகளின் முன்புறம் டென்னிஸ் விளையாட்டு மைதானம், குழந்தைகள் பூங்கா. பின்புறம் முழுவதும் செயற்கையாய் உருவாக்கிய ஏரி (Lakeview) தொடர்ந்து அடர்ந்த மரங்கள் (Woodsview) என்பதான அழகிய அமைப்பு.

போர்டோஃபினோவிலிருந்து டாம்பா சிட்டி டௌன் டவுன் (DownTown) பதினெட்டு மைல் தூரம். காரில் ஏறி ஐ-275 ஹைவேயை பிடித்தால், இருபது நிமிடத்தில் டாம்பா சிட்டி சென்டர். "டாம்பா" புளோரிடா மாகாணத்தில் நம்பர் ஒன் பெரிய நகரம், அமெரிக்காவின் இருபத்திரண்டாவது பெரிய நகரம் என்கிறார்கள். அமெரிக்க நகரங்களுக்கே உரித்தான ஆகாயம் தொடும் அழகிய கட்டிடங்கள். அவற்றினுள் இயங்கும் "பேங்க் ஆப் அமெரிக்கா" , "பிஎன்சி" போன்ற பெரும் நிறுனங்களின் அலுவலகங்கள். முறையாக திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, நேர்நேரான அகன்ற வீதிகள். வீதிகளின் இருபுறமும் செவ்வக செவ்வகமாய் கட்டமிடப்பட்ட கட்டணக் கார் பார்க்கிங்.

20240227160304337.jpg

காரை நிறுத்த ஆகும் பார்க்கிங் கட்டணம், கார் ஓட்ட ஆகும் பெட்ரோல் செலவை தூக்கி சாப்பிடும். ப்ரீமியம் பார்க்கிங் என்றால் இருபது டாலர், இந்தியப் ரூபாயில் ஆயிரத்து எழுனூறு. சாதாரண பார்க்கிங்கில் இரண்டு மணி நேரத்திற்கு ஏழு டாலர். பார்க்கிங் டோக்கன் போட ஆள் தேள் கிடையாது. காலி ஸ்லாட்டை தேடிக் கண்டு பிடித்து அதில் காரை கச்சிதமாய் நிறுத்தி விட்டு, அருகில் நிற்கும் பார்க்கிங் தூணில் க்யூ.ஆர் குறியீட்டைப் பார்த்து, அதற்கான மொபைல் ‘ஆப்’பில் ஸ்கேன் செய்து, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். பணம் செலுத்திய நொடியில் இருந்து "கவுன்ட் டவுன்" (Countdown) தொடங்கி விடும்.

இரண்டு மணி நேரத்திற்குள் வந்த வேலை முடியவில்லை என்றால், அடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இருந்த இடத்திலிருந்தே மணிக்கு மூன்றரை டாலர் வீதம் ஆன்லைனில் பணம் செலுத்தி பார்க்கிங் நேரத்தை நீட்டிக்க வேண்டும், தவறினால் பெருந்தொகையை அபராதமாக நோட்டீஸ் விட்டு பறித்து விடுவார்கள்.

ங்காங்கே வரலாற்றுக் குறிப்புகளோடு பொழுதுபோக்குப் பூங்காக்கள். அவற்றில் குழந்தைகளுக்கான விதவிதமான விளையாட்டுக் உபகரணங்கள். குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து மகிழும் காட்சிகள்.

டாம்பா நகரின் சிறப்புகளில் ஒன்று "ரிவர் வாக்" எனப்படும் ஆற்று நடைபாதை. நகரத்தினூடே நெளிந்து செல்லும் "ஹில்ஸ்பொரொ" (Hillsborough) ஆறு. அதன் கரை நெடுக, நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட நடைபாதைதான் "ரிவர் வாக்" என்பது. இதில் நடந்தபடியே ஹில்ஸ்பொரொ நதியையும் குறுக்கும் நெடுக்குமாய் மிதந்து செல்லும் படகுகளையும் கண்டு மகிழலாம். மாலை வேளைகளில் நம்ம ஊர் மெரினா பீச் போன்று இது ஒரு பொழுதுபோக்கு இடம். நெடுக கொறிக்க குடிக்க ஏகப்பட்ட துரித உணவுக் கடைகள். அன்றாட வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்பது முக்கிய அங்கம் என்பதை நன்கு உணர்ந்த மக்கள்.

20240227155919286.jpg

மெரிக்க மக்கள் தங்கள் பாரம்பரிய பண்டிகைகள், விழாக்களை வீதிகளில் வாகன ஊர்வலம் நடத்தி கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆண்கள் பெண்கள் இருபாலரும் பாரம்பரிய உடையில் கழுத்தில் வண்ண வண்ண மணிகளை அணிந்து, பேண்ட் வாத்தியங்கள் போன்ற இசைக்கருவிகளை இசைத்து ஆடிப்பாடி அலங்கார ஊர்திகளில் ஊர்வலம் செல்வது பெரும் திருவிழா. அதைக் கண்டு கூடியிருக்கும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிப்பதும், அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகளில் இருந்து மணி மாலைகளை வீசி எறிவதும், அவற்றைத் தாவிப் பிடித்து மக்கள் கூட்டம் குதூகலிப்பதும் பார்க்க நல்ல வேடிக்கைதான். ஆராவரித்துச் செல்லும் ஊர்வலத்தை யாருக்கும் இடையூறு இல்லாமல் ஒழுங்கு படுத்தி நடத்திக் கொடுக்கும் இவ்வூர் காவலர்களின் பணி வியக்க வைக்கிறது. ஆடிப் பாடும் கொண்டாட்டங்களை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்து விடும் கட்டுப்பாடு இவர்களின் உயர்வுக்கு கட்டியம் கூறுகிறது.

20240227160014353.jpg

மேலும் பல சுவையான தகவல்கள் உங்களிடம் பகிர இருக்கிறது !

பயணம் தொடரும்....