தொடர்கள்
ஆன்மீகம்
நாச்சியார் கோயில் அதிசய கல் கருடன்!! - சுந்தரமைந்தன்.

Nachiyar temple  miraculous stone garudan!!

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த சிற்றூர் நாச்சியார்கோவில், இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 கோயில்களில் ஒன்றாகவும் முக்தி தரும் 12 ஸ்தலங்களில் 11 ஆவது ஸ்தலமாகவும் இருக்கிறது.
இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமணக் கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றனர். அதனால் தாயாருக்கு எனத் தனி சந்நிதி இல்லை. இங்குத் தாயாருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், தாயாரின் பெயரிலேயே இத்தலம் நாச்சியார்கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் அனைத்தும் தாயாரிடம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தாயாருடைய இடுப்பில் சாவிக்கொத்து தொங்குகிறது.

Nachiyar temple  miraculous stone garudan!!


கோச் செங்கட் சோழ நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் சிவபெருமானது திருவருளினாலே முன்னைப்பிறப்பின் உணர்வோடு பிறந்து சைவத்திருநெறி தழைக்கத் தம் நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டினார். இவர் கனவில் தோன்றிய திருமால், தனக்குக் கோயில் கட்டும்படி பணித்தார், அதன்படி சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், மாடக்கோயில் அமைப்பில் கி.பி 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருமாளுக்காக ஒரே ஒரு கோயிலான திருநறையூர் நாச்சியார்கோவிலை இவர் கட்டியுள்ளார். இக்கோயில் தமிழ்நாட்டின் ஒன்பது வைணவ நவக்கிரக கோவில்களில் ஒன்றாகவும் செவ்வாய்க் கிரகத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது.
பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும் கருட வாகனம் மரத்திலோ அல்லது உலோகத்திலோ தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் ஒன்பது நாகங்களை ஏந்தியவாறு ஐந்தடி உயரத்தில், நான்கு டன் எடையுடன் கூடிய கல்லால் ஆன கருட வாகனத்திற்குத் தனி சந்நிதி உள்ளது. தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் இங்குள்ள கல் கருட வாகனத்தைக் கோச் செங்கட் சோழ நாயனார் கட்டளையின் படி, தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்று, முப்பத்திரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் பாடமாக அறிந்தவரும், ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் நல்ல முறையில் கற்ற மயூரசன்மன் வடித்த காற்றைச் சுவாசிக்கும் கல் கருடன் சிலை இக்கோயிலின் மிக முக்கியமான அம்சமாகும். இந்த கல் கருடனை 48 நாட்கள் வழிபட்டால், எல்லாவிதமான நோய்களும் விலகும். நினைத்த காரியம் நடக்கும். திருமணத் தடைகள் விலகும். சர்ப்ப தோஷங்கள் விலகும்.

Nachiyar temple  miraculous stone garudan!!


இந்த கல் கருடன் பங்குனி மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் கருட சேவையின் போது, சந்நிதியில் இருந்து வெளியே கொண்டு வரப்படும். அப்போது சந்நிதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல கருடனின் எடை கூடும் எனவும், திரும்பவும் சன்னதிக்கு உள்ளே எடுத்துச் சொல்லும் போது கல் கருடன் எடை குறையும் என ஆச்சரியமாகக் கூறப்படுகிறது. இது இக்கோவிலின் அதிசய நிகழ்வு. பெருமாள் புறப்பாட்டின்போது கல் கருடனைத் தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் மட்டுமே இருப்பர். பின்னர், கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி, படிப்படியாகக் குறைந்து நிறைவாக, 4 பேர் மட்டுமே அவரை சந்நிதியில் அமர்த்துவர். அதுமட்டுமின்றி, கோயிலை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது. இந்த எடை கூடுதலும் குறைதலும் எப்படி நடக்கிறது என்பது இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குத் தெய்வ சக்தி காரணமா இல்லை, அந்த கல் அவ்வாறு வடிவமைக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. ஒரு வேளை காற்று காரணமாகவோ, புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து நிறுவப்பட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த கல் கருட வாகனம். ஆன்மிகத்திற்கும், அறிவியலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நம் முன்னோர்கள் அறிவியல் நுண்ணறிவு படைத்தவர்களாகவும் உலக மக்கள் அனைவருக்கும் தலை சிறந்த முன்னோடிகளாக வாழ்ந்துள்ளனர்

கோயில் திறந்திருக்கும் நேரம்:
கோயில் காலை 06.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்குச் செல்லும் வழி:
இக்கோயில் கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நாச்சியார் கோயிலில் நின்று செல்லும். அருகில் உள்ள ரயில் நிலையம் கும்பகோணம்.

அற்புதமான நாச்சியார் கோயில் கல் கருட சேவை தரிசனம் செய்தது, திருமால் மற்றும் கருட பகவானின் பேரருளையும் பெறுவோம்!!!

https://youtu.be/aMuM5ByZcsk?si=S0Vg1iAeiqfW0dWN