தொடர்கள்
பொது
சநாதன தர்மம் "வர்ண தர்மம் எல்லோருக்கும் கல்வியை மறுத்ததா?" - ஆர் சங்கரன்

20240228220610241.jpg

வர்ண தர்மத்தின்மீது சுமத்தப்படும் ஒரு பெரும் குற்றச் சாட்டு, அது அந்தணர்களைத் தவிர மற்ற எல்லாவருக்கும் கல்வியை மறுத்தது என்பதாகும். சநாதனத்தின் நூல்களைச் சரியாக முழுவதுமாகப் படிக்காததாலும் கண்முன்னே காணும் உண்மையை ஏற்க மறுப்பதாலுமே இந்த குற்றச் சாட்டு எழுகின்றது.

மேலே நாம் கண்டவாறு ஒரு நாட்டில் ஒரு சமுதாயத்தில் பற்பல செயல்கள், தொழில்கள் உள்ளன. காலம் எப்படி மாறினாலும் எந்த வித தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டாலும் எல்லா மனிதர்களும் ஒரே தொழிலைச் செய்வார்கள் என்ற நிலை வரவே வராது. பலவித தொழில்களில் பலவிதமான மனிதர்கள் ஈடுபடுவதுதான் இயற்கை.

ஆக சநாதனம் இதை மறுக்கவோ மறைக்கவோ இல்லை. நாட்டின் எல்லாப் பிரிவினரும் அவரவர் தொழிலைச் செவ்வனே செய்தே வந்தனர். விவசாயியும், தச்சனும், கொல்லனும், நெசவாளனும், தேரோட்டியும், வணிகனும் என்று எண்ணற்ற பலரும் அன்றும் நாட்டில் இருந்து வந்தனர். அவர்களது கைவினைத் திறன் இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. அப்படியானால் அவர்கள் எதுவுமே கற்கவில்லை என்று எப்படிச் சொல்வது? கல்வி அறிவே இல்லாமல் அந்த காலத்தில் எல்லோரும் பிறக்கும்போதே ஒரு பெரும் அறிவோடு பிறந்தார்கள் என்று சொல்லலாமா?

இரும்பையும் செம்பையும் அதன் தாதுவிலிருந்து பிரித்து பயன்படுத்தும் திறன் அவர்களுக்குக் கல்வியில்லாமல் வந்ததா? தங்கமும் வெள்ளியும் வைரமும் மற்ற ரத்தினங்களும் கல்வியறிவில்லாத தொழிலாளர்களால் கையாளப்பட்டது என்று நாம் நம்புவோமா? பெரும் நகரங்களை வடிவமைத்தவர்க்குக் கல்வி அறிவே கிடையாது என்பதைச் சொல்வோமா? இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் மனிதர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கலையும் இலக்கியமும் இசையும் நாட்டியமும் கல்வியே இல்லாத பாமரர்களின் கைவண்ணம் என்று யாராவது சொல்வார்களா? அல்லது இத்தனை அதிசயத்தையும் சாதித்தது கல்வியைத் தம் சொத்தாக மறைத்து வைத்திருந்த அந்தணர்கள் என்று சொல்வார்க்ளா?

இல்லை. அன்றும் மக்கள் எல்லோரும் கல்வி கற்றார்கள். ஆசிரம தர்மத்தில் முதல் ஆசிரமம் கல்வி கற்கும் பருவம். அது எல்லோருக்கும் சமம். தமக்குத் தேவையான, தமக்குப் பயன்தரும் கல்வியை எல்லோரும் கற்றனர். ஒவ்வொருவரின் கல்வி கற்கும் திறன் மாறுபடும். அதற்கேற்ப அவர்கள் தத்தம் துறையில் கல்வி பயின்று வந்தனர். இன்று மெக்காலேவின் கல்வி முறைப்படி எல்லாரும் எல்லாமும் கற்க முயற்சித்து பலருக்கும் பலதும் தெரியாமல் போகும் நிலை அன்று இல்லை. ஒரு கைத்தொழிலைச் சீராகக் கற்று அதன் மூலம் வாழ்வாதாரத்தைத் தேடும் ஒருவன் நேர்நேர் தேமா என்று யாப்பிலக்கணம் கற்கும் நிலை அன்று இல்லை. மொழியியல் கற்று ஆராய்ச்சி செய்ய விரும்பும் மாணவன் (a+b)2 எவ்வளவு என்று தனது மூளையைக் கசக்கும் நிலை அன்று இல்லை. கல்வி என்பது அவரவர் திறனுக்கும் பயனுக்கும் ஏற்றதாக இருந்ததே தவிர ஆட்சியாளர்களின் காட்சிப் பொருளாக இருக்கவில்லை.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான யஜுர்வேதத்தில் முக்கட் பரமனைத் துதிக்கும் பகுதியில் அவனைத் தேர் செய்யும் தச்சனாகவும், தேரோட்டியாகவும், குயவனாகவும், கொல்லனாகவும், வேடனாகவும், வில் முதலிய ஆயுதங்கள் செய்பவனாகவும் இன்னும் பல தொழில்களைச் செய்பனாகவும் சொல்லி வழிபடுகிறது. இன்றளவும் மெத்தப் படித்த அந்தணர்கள் கூட அந்தப் பகுதியைச் சொல்லியே இறைவனை வழிபடுகிறார்கள். அப்படியானால் எந்தத் தொழிலும் இழிந்ததல்ல என்பது, எல்லாம் அந்த இறைவனின் வடிவமே என்றும் சநாதனம் கொண்டாடியது ஏன் இந்த ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியாமல் போகிறது. அப்படிப் பல தொழில்களையும் கற்று அதில் தேர்ச்சி பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட்டது அன்றைய கல்வி முறை.

ஆயினும், குற்றம் கூறுபவர்க்கு ஒரு பிடி அவல் உள்ளது. வேதங்களைப் பயில்வதும் பயிற்றுவிப்பதும் அந்தணர் பிரிவிற்கு மட்டுமே உரித்தானதாகச் சொல்லப் பட்டது. வேதம் என்பது செவி வழியாகக் கேட்டு மனனம் செய்து வழிவழியாக நம் வரை வந்துள்ளது. அதனாலேயே அதற்கு எழுதாக் கிளவி என்ற பெயர் தமிழிலும் வழங்கியது. அது மிகவும் கடினமான முயற்சி. வேறு சிந்தனைகள் இல்லாமல் கற்றால் மட்டுமே தவறில்லாமல் அதனைக் காக்க முடியும் என்பதால் அவ்வித வாழ்க்கைமுறை உள்ளவரிடம் அதன் பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. ஆனால் ஒன்று, அவ்விதம் வேதத்தைக் கற்று கற்பித்த அந்தணர்கள் பெரும் செல்வந்தர்களாக வாழவில்லை. தமது உலகியல் தேவைகளைக் குறைந்த்துக் கொண்டு தம்மிடம் கொடுக்கப் பட்ட பொறுப்பைக் காப்பதே தமது வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தனர். இது வரலாறு.

நிற்க. முன்பகுதியில் பார்த்தவாறு அயலார் படையெடுப்பால் நமது தர்மத்தின் சமனிலை பாதிக்கப்பட்டபோது பொருளீட்டும் வாய்ப்பு கிடைத்தவரில் பலர் அதனைப் பயன்படுத்திக் கொண்டனர். அதில் அந்தணர் மட்டுமல்லாது மற்ற பிரிவினரும் இருந்தனர் என்பது வரலாற்று உண்மை. அதனை மறைத்து அந்தணர் வேதம் கற்றதால் செல்வந்தர் ஆனார்கள் என்று திரித்துச் சொன்னது அதே அயலாரின் வரலாற்று ஆசிரியர்கள். தமது ஆதிக்க ஆசையால் நாட்டின் அமைதியைக் குலைத்ததை மறைக்க இந்த நாட்டின் மக்களையே குறை சொல்லி அவரிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் சொல்வதை நாம் வேதவாக்காக (!) எடுத்துக் கொண்டு நம்முள் இன்னும் பிரிந்து நிற்பதுதான் வேதனையான உண்மை.

எல்லோருக்கும் கல்வி கற்கும் உரிமையும் அந்த கல்வி கிடைக்கும் முறையும் நம் பண்டைய பாரதத்தில் இருந்தது. என்றால் அது இடைக் காலத்தில் ஏன் எவ்வாறு குலைந்தது? அதன் காரணம் என்ன? அதனைச் செய்தவர் யார் என்பது இங்கே ஒரு துணைக் கேள்வியாக முளைக்கிறது. அவரவர் வாழ்க்கைக்குப் பொருள் சேர்த்து, அவர்தம் வாழ்க்கையில் பொருள் சேர்க்க உதவும் சிறப்புக் கல்வியை விடுத்து எல்லார்க்கும் ஒரே கல்வி என்ற நிலை அன்றைய அரசாங்கத்தால் ஆதரிக்கப் பட்டபோது அந்த பொதுக் கல்வியால் பயனில்லை என்று ஒதுங்கியவரே அதிகம். அதைச் சாக்காக வைத்து ஒரு சாரார் கல்வி என்ற பெயரில் மத மாற்றத்தையும் செய்யத் தொடங்கியபோது நமது பாரதத்தின் கல்விக் கட்டமைப்பு சீர்குலைந்தது. அதைச் செய்தவர்களே அந்தப் பழியை சநாதன தர்மத்தின்மீது சுமத்தினார்கள், நாமும் அதை இன்றுவரை நம்பி நமது பாரம்பரியத்தைச் சந்தேகிக்கிறோம், ஒதுக்குகிறோம். இனியாவது நாம் நமது மூதாதையரைக் குறைசொல்வதை விடுத்து, நம் முன்னேற்றத்திற்கான வழியில் செல்ல வேண்டும்.

அடுத்த பகுதியில் வர்ணாசிரம தர்மத்தின் மீதான மற்றொரு குற்றச் சாட்டையும் அதற்கான விடையையும் காண்போம்.