யாத்தல் என்றால் கட்டுதல் என்று பொருள் என்று யாப்பிலக்கணத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கிறார் பரணீதரன்.
தொடர்ந்து கூறுகையில்,
பல சொற்களை ஒன்றாக கட்டுவது யாத்தல் ஆகும். அதைப்பற்றிய இலக்கணமே யாப்பிலக்கணம் ஆகும். யாப்பிலக்கணம் என்பது எழுத்து, அசை, சீர், அடி, தளை, தொடை, பா போன்ற பலவிதமான கூட்டுகளை பற்றி கூறுவது.
எழுத்து என்பதை முதலிலேயே பார்த்து விட்டோம். குறில், நெடில், மாத்திரை அளவு, அனைத்தும் பார்த்து விட்டாயிற்று.
அசை என்பதை இப்போது பார்க்கப் போகிறோம். கணக்கில் ‘பைனரி’ என்று ஒரு பகுதி உண்டு. 0 மற்றும் 1 ஐ வைத்து அனைத்து விதமான கணக்குகளையும் செய்வார்கள். தாளத்தில் கூட லகு மற்றும் திருதம் என்று இரண்டு வகையாகப் பிரித்து அவைகளின் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு தாளங்களை உருவாக்குகின்றனர். அதேபோல் நமது மொழியிலும் நேர் மற்றும் நிரை என்று இரண்டு அசைகள் உள்ளன. அவைகளை வைத்தே ஒரு சொல் உருவாக்கப்படுகிறது.
நேர் என்பதற்கு தனிமை என்று இந்த இடத்தில் பொருள் கொள்ள வேண்டும். குறிலோ நெடிலோ தனியாக வருவதை காட்டுவதற்காகவே இதற்கு நேர் என்று பெயர். நிரை என்பதற்கு வரிசை என்று இந்த இடத்தில் பொருள் கொள்ள வேண்டும். எழுத்துக்கள் கூட்டமாக வரிசையாக வருவதால் இது நிரை என்று பெயரிடப்பட்டது. இப்போது அசைக்குரிய இலக்கணத்தை பார்ப்போம்.
அசைகள் பொதுவாக இரண்டு இருந்தாலும், சில கூட்டுக்களுடன் சேர்ந்து அசைகள் நான்கு வகைப்படும். அவை : நேர், நிரை, நேர்பு, நிரைபு. ஒரு சொல் என்ன அசையில் வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக சில சூட்சுமங்களை இலக்கணத்தில் வைத்துள்ளனர். அந்த சூட்சுமங்களை ஒன்றொன்றாக நாம் கீழே பார்ப்போம்.
நேர்
தனிக்குறில் வரும். அதாவது ஒரே ஒரு குறில் எழுத்து வரும். எடுத்துக்காட்டு ‘அ’, ‘இ’, ‘க’ ‘மு’, ‘யி’ போன்றவை.
தனி நெடில் வரும். அதாவது ஒரே ஒரு நெடில் எழுத்து வரும். எடுத்துக்காட்டு ‘ஆ’, ‘ஈ’, ‘கா’, ‘மூ’, ‘யீ’ போன்றவை.
தனிக்குறிலை அடுத்து ஒற்று வரும். அதாவது ஒரே ஒரு குறில் எழுத்து வந்து அதற்குப் பிறகு ஒரு புள்ளி வைத்த எழுத்து வரும். எடுத்துக்காட்டு ‘அய்’, ‘இன்’, ‘கண்’, ‘மண்’, ‘பொன்' போன்றவை.
தனிநெடிலை அடுத்து ஒற்று வரும். அதாவது ஒரே ஒரு நெடில் எழுத்து வந்து அதற்குப் பிறகு ஒரு புள்ளி வைத்த எழுத்து வரும். எடுத்துக்காட்டு ‘ஆம்’, ‘ஏன்’, ‘கார்’, ‘மான்’, ‘கோன்' போன்றவை.
நிரை
இரண்டு குறில் வரும். அதாவது இரண்டு குறில் எழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். எடுத்துக்காட்டு ‘அக’, ‘மர’, ‘முய’, ‘ரிண’, ‘தென' போன்றவை.
குறில் நெடில் வரும். அதாவது ஒரு குறில் எழுத்தும் அதன் பிறகு ஒரு நெடில் எழுத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வரும். எடுத்துக்காட்டு ‘அகா’, ‘மரா’, ‘மயா’, ‘ருணா’ போன்றவை.
இரண்டு குறிலை அடுத்து ஒற்று வரும். அதாவது இரண்டு குறில் எழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து அதற்குப் பிறகு ஒரு புள்ளி வைத்த எழுத்து வரும். எடுத்துக்காட்டு ‘அரண்’, ‘மரம்’, ‘பழம்’ போன்றவை.
குறில் நெடிலை அடுத்து ஒற்று வரும். அதாவது ஒரு குறில் எழுத்தும் அதன் பிறகு ஒரு நெடில் எழுத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து அதற்குப் பிறகு ஒரு புள்ளி வைத்த எழுத்து வரும். எடுத்துக்காட்டு ‘கராம்’, ‘தொழார்’, ‘பளார்’ போன்றவை.
நேர்பு
ஒரு நேரசைக்கு பின்னால் ‘உ’ என்ற சத்தத்தில் முடிந்தால் அது நேர்பு. எடுத்துக்காட்டு ‘பாகு’, ‘காசு’, ‘பசு’, ‘பாக்கு', ‘சுக்கு' போன்றவை.
நிரைபு
ஒரு நிறை அசைக்கு பின்னால் ‘உ’ என்ற சத்தத்தில் முடிந்தால் அது நிரைபு. எடுத்துக்காட்டு ‘உலகு’, ‘பிறப்பு’ போன்றவை.
நேர் என்ற சொல் நேர் அசையாகும். ஒரு நெடில் வந்து அதற்கு பிறகு ஒரு ஒற்று எழுத்து வந்துள்ளது.
நிரை என்ற சொல் நிரை அசையாகும். ஒரு குறில் வந்து அதற்கு பிறகு ஒரு நெடில் எழுத்து வந்துள்ளது.
நேர்பு என்ற சொல் நேர்பு அசையாகும். ஒரு நேர் அசை வந்து அதன் பிறகு ‘பு’ என்ற எழுத்து வந்துள்ளது.
நிரைபு என்ற சொல் நிரைபு அசையாகும். ஒரு நிரை அசை வந்து அதன் பிறகு ‘பு’ என்ற எழுத்து வந்துள்ளது.
இப்படி அந்த அசைகளின் பெயர்களிலேயே அந்த அசை வருவதைப் போல அந்த காலத்தில் மிகவும் நுட்பமாக அமைத்துள்ளனர்.
இந்த அசைகளை வைத்து நாம் சீர்களை உருவாக்குவோம். அப்படி உருவாக்கப்படும் சீர்களை
ஓரசைச்சீர் (ஒரு அசை மட்டுமே வரும்), ஈரசைச்சீர் (இரண்டு அசைகள் வரும்),
மூவசைச்சீர் (மூன்று அசைகள் வரும்), நாலசைச்சீர் (நான்கு அசைகள் வரும்) என்று நான்காக பிரிக்கிறோம்.
இந்த மொத்த பகுதியுமே நாம் கணக்கில் பார்க்கும் வடிவியல் முன்னேற்றம் (ஆங்கிலத்தில் Geometric Progression) ஆகும்.
இன்றைய கேள்வி - மேலே உள்ள இரண்டு படங்களை வைத்து இதுவரை நாம் பார்த்த அசைகளையும் வைத்து அந்த இரண்டு படங்களும் என்ன அசையாக இருக்கும் என்பதை முடிந்தவரையில் கூறுங்கள்.
அந்தக் கணக்கினை நாம் வரும் வாரம் பார்ப்போம்.
Leave a comment
Upload