தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 2 -மோகன்.ஜி

20240228183555131.jpg
பாலக்காட்டு பல்பு

எண்பதுகளின் துவக்கம். நான் கல்கத்தாவில் வசித்த நாட்கள். சபரிமலை யாத்திரை செல்லவேண்டி, கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்னை நோக்கி தனியாகப் பயணம்.

வழக்கம்போல் சென்னையிலிருந்து கடலூர் செல்வேன். வீட்டிலிருக்கும் இராமர் முதலான விக்கிரகங்களுக்கு அபிஷேகம், பூஜை செய்துவிட்டு, அப்பா அம்மாவை நமஸ்கரித்து, அங்கிருந்து பாலக்காடு செல்வேன். பாலக்காட்டில், கல்பாத்தி மந்தக்கரை கணபதியான் கோவிலில்வைத்து கட்டுநிறைத்து, சபரிமலை யாத்திரை புறப்படுவேன்.

மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸுக்கே வாருங்கள் ! அங்கே தான் இன்றைய பல்பு மஹாத்மியம் நடந்தது.

எதிர்சீட்டிலே அப்புராணியாக ஒரு மாமாவும், உருவின கத்தி போல ஒரு மாமியும் உடன் பயணித்தார்கள். மாமி சளசளவென மாமாவின் மௌனத்தோடு பேசிக் கொண்டிருந்தாள்.

மலையாளமும் இல்லாமல், தமிழும் அல்லாமல் ஒலிக்கும் பாலக்காடு தமிழாளம்....

"கல்கத்தையிலே எங்கவாக்கும் தாமஸம்?" என்னை வினவியது மாமி.

"லேண்ட்ஸ் டௌன் தேஸப்பிரியா பார்க் கிட்டே மாமி"

" நங்கள் லெய்க் கார்டன்ஸ் "

“அப்படியா மாமி?”என்றேன்.

" மலைக்காக்கும்?"

"ஆமாம் மாமி"

மூங்கில் சாப்பாட்டுக்கூடையோடு மாமி பிஸியானாள். மாமா கையில் தட்டும் அதில் தோசைகளையும், கடலைக்கறியையும் மணக்கமணக்க எடுத்துத் தந்தாள்.

என்னைப் பார்த்து, ''...த்த்தோசை சாப்பிடுங்கோ. மடியாத்தான் வார்த்தேன் . வாழையிலையும் உண்டு கேட்டேளா ஐயப்பா?"

இலையொடு இளசான தோசை நல்லெண்ணை மணக்கத் தந்தாள். 'தேங்க்ஸ் மாமி'.

ஏதேதோ பேசியபடி மாமி தொடர்ந்தாள். 'புரிந்தும் புரியாத பாதிமலர்போல மலங்க விழித்த வண்ணமே' மையமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

பக்கத்திலிருந்த காஞ்சிபுரம் ஆசாமியின் வினவல், "புவனேஸ்வரம் எப்பங்க வரும்?"

"உச்சிக்கு ஏத்தும்" என்றாள் மாமி. நான் மேல்பர்த்தை நோக்கினேன்.

சட்டென்று என்னைப்பார்த்து மாமி கேட்டாள்,

" எப்பவாக்கும் மடங்கறேள்?"

கலவரமானேன். கால்பட்டு விட்டதோ... மடக்கச் சொல்கிறாளோ... 'ஸாரி மாமி!" என்றபடி விருட்டென்று கால்களை சீட்டுக்கு கீழே இழுத்துக் கொண்டேன். "ஸாரி"

இருபுறமும் மறுப்பில் தலையாட்டினாள் மாமி.

" இல்லையில்லை. எப்போள் திருச்சி வறேள்ன்னாக்கும் கேட்டேன்"

" திருச்சில எனக்கு என்ன வேலை? நேரா கல்கத்தா தான் திரும்ப வரணும் மாமி"

ஆயாசமாக என்னைப் பார்த்த மாமி மேற்கொண்டு பேசவில்லை.

சென்னை-கடலூர்-பாலக்காடு- சபரிமலை என மேற்கொண்டு என் பயணமும் தொடர்ந்தது.

என் குருஸ்வாமி பாலக்காட்டுக்காரர். அவர் பேச்சில் புழங்கிய உச்சி, மடங்கல், திருச்சியைக் கேட்டுக் குழம்பி அர்த்தம் கேட்டேன். ‘உச்சி’ நடுப்பகல் என்றும், மடங்குதலும் திருச்சி வருதலும் 'திரும்பி வருதல்' எனவும் அறிந்தேன். பாவம் அந்த மாமி !

கோரமண்டலில் தோசைதந்த மாமியுடன் நடந்த சம்பாஷனையை குருஸ்வாமிக்கு சொன்னேன். நினைத்துநினைத்து சிரித்தபடி இருந்தார். அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கு, ஒவ்வொரு சபரிமலை பயணத்தின்போதும், அலுக்காமல் சக ஐயப்பமாருக்கு கோரமண்டல் சம்பவத்தை ஜோடனையாக சொல்வார்....'’நம்ம மோகன் ஒருக்கா பாலக்காட்டு மாமியை எப்படிப் படுத்தினான் தெரியுமோ?"

இன்னமும் சபரிமலைக்குச் சென்று கொண்டும், மடங்கிக் கொண்டும், திருச்சிவந்து கொண்டும்தான் இருக்கிறேன்.

இப்போது குருஸ்வாமி தான் இல்லை. மாமியும் எங்கிருக்கிறாளோ தெரியாது. பாலக்காடு தமிழுக்கு டிக்‌ஷ்னரி போடலாம் என உத்தேசித்திருக்கிறேன்.

அடுத்த வாரம் அடுத்த பல்ப்.......