தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 17 - ரேணு மீரா

20240005110849259.jpg

குறள் 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

காலம் தாழ்த்தி செயலை செய்தல், மறதி குணம், சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டுப்போகும் தன்மையுடையவர்கள் விரும்பி ஏறும் மரக்காலமாகும். என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் அவர்களது வேலையை தள்ளிப் போடுவதை கண்டு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெற்றோர்கள், கீழ் வரும் ஒரு சில விஷயங்களை பெற்றோர்களாகிய தாம் எப்படி கையாளுகிறோம் என்று சரி பார்த்துக்கொண்டு பிறகு இந்த விஷயங்களை குழந்தைகளுடன் கலந்து பேசும்போது நிரந்தர தீர்வு கிடைக்கும். ஒத்தி போடும் பழக்கம் என்பது நீங்கள் சென்ற வாரத்தின் பணிகளை இன்று செய்ய முயற்சிக்கிறீர்கள் எனப் பொருள் கொள்ளலாம். இன்றைய பணியை” நாளைக்கு” என ஒத்தி வைப்பதால் உங்கள் பணிச் சுமையை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.

“நாளை என்பது நம் கையில் இல்லை”

இன்று முடிக்க வேண்டிய பணிகளை நாளைக்கு என ஒத்தி வைப்பதில்லை என தீர்மானித்துக்கொண்டு வாழ்வது நல்லது.

நம் கண் முன்னே ஒரு பொருள் கொள்ளை போவதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அதுவே நம் கண் முன்னே நமக்கென இருக்கும் நேரம் கொள்ளை போவதை நாம் கவலை இன்றி பார்ப்பதே அவலம்.

நேரக் கொள்ளையர்கள்.

* ஒத்தி போடுதல்.

* தன்னம்பிக்கை இல்லாமல்.இருப்பது

* தேவையற்ற உரையாடல்கள்.

* வாழ்க்கையில் குறிக்கோள்கள் இல்லாமை .

* தெளிந்த சிந்தனை இல்லாமை.

* எதிலும் சோம்பேறித்தனம்.

* சரியாகத் திட்டமிடாமல் வேலைகளை செய்யத் தொடங்குதல்.

* முடிவெடுப்பதில் தாமதம் செய்வது.

* பிறர் வேலைக்கு முன்னுரிமை தருதல்.

* வலைத்தளத்தில் நேரம் செலவிடுதல்.

இவற்றில் உங்கள் நேரம் இதில் அதிகம் கொள்ளை போகிறது என்று நீங்கள் உங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்துங்கள். பிறகு உங்கள் கற்பனைக்கு ஏற்ப ஒரு சார்ட் தயார் செய்து, அதில் உங்கள் குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு அவர்களைப் பற்றி சுய ஆய்வு செய்ய சொல்லுங்கள். இதை அவர்கள் செய்ததும் அந்த சார்ட்டை பார்த்து அவர்கள் தவறை சுட்டிக்காட்டவோ, அல்லது அதை பற்றி வெகு நேரம் பேசி அவர்களுக்கு விரிவுரை கொடுக்கவோ கூடாது. முக்கியமாக அந்தச் சாட்டை நீங்கள் பார்க்காமல் இருப்பது நல்லது.

“ சார்ட் வேலையை முடித்து விட்டாயா “ என்று கேட்டு, அதை அவர்களே சரி பார்த்துக்கொள்ள செய்யுங்கள்.

அவர்கள் தயார் செய்த அந்த சார்ட்டை அவர்களே மீண்டும் கவனித்து எந்த இடங்களில் அவர்கள் தங்களை சரி செய்து கொள்ளலாம் என்று யோசிக்க சொல்லுங்கள் மீண்டும் ஒரு சார்ட் அவர்கள் தயார் செய்ய வேண்டும் அதில் எந்த இடங்களில் எல்லாம் அவர்களின் நேரத்தை அவர்கள் சேமிக்க முடியும் என்று அவர்களே ஒரு பிளான் மேப் போட்டு அதன்படி அவர்களால் இருக்க முடிகிறதா என்று பார்ப்பது நல்லது.

இவை அனைத்தும் பெற்றோர்களின் உதவியுடன் நடக்க வேண்டும், ஆனால் அவர்களுக்கு உபதேசிக்க கூடாது.

இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு பெற்றோரின் மீது நம்பிக்கை பிறக்கும், அவர்கள் சுயமாக ஒரு திருத்தத்தை செய்ய பழகிக் கொள்வார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக செலவழிக்கும் ஒரு சில மணித்துளிகள் அவர் தம் குழந்தைகளின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் என்பது உறுதி.

தொடர்ந்து பேசுவோம்…………