தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 17 - பத்மா அமர்நாத்

20240228221151693.jpg

ஒரு மனிதனுக்குப் புரியக் கூடிய மொழியில் பேசினால், அது அவனது தலையைச் சென்றடைகிறது. அவனது சொந்த மொழியில் பேசினால், அது அவன் இதயத்தைச் சென்றடைகிறது. - நெல்சன் மண்டேலா.

பெண்கள் சுய அதிகாரம் பெற்றுத் திகழ, தகவல் பரிமாற்றம் மிக அவசியம். உணவு இல்லாமல் எதுவும் வாழ முடியாது. ஊட்டச்சத்து வெறும் வாய் வழியாக உட்கொள்வது மட்டும் அல்ல. நம் கண்கள், காதுகள், மூக்கு, நம் நாக்கு மற்றும் நம் உடலால் உட்கொள்வது அனைத்துமே நமக்கான உணவு தான். இந்த உணவானது, நமக்கான அமிர்தமாகும் அல்லது விஷமாகும். நம்மைச் சுற்றி நடக்கும் உரையாடல்களும், நாம் பங்கேற்கும் உரையாடல்களும் கூட உணவுதான்.

20240228221532196.jpg

ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும். நாம் பயன்படுத்தும் சொற்கள் வலிமையானவை. சொற்களைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு, வரலாற்றில் நிச்சயம் இடம் உண்டு. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பெரும்பாலானப் பிரச்சனைகள் தோன்றக் காரணமே, தகவல் பரிமாற்றத்தில் உள்ள தகராறுகள் தான். பேசுவது மட்டுமே தகவல் பரிமாற்றம் அல்ல. பிறர் பேசுவதை கவனிப்பதும் கூட, தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை அம்சமாகும். அதேபோல, சொற்களற்ற மொழியான மௌனமும், உடல் அசைவுகளும் கூட, தகவல் பரிமாற்றத்தின் கீழ் வருபவையே.

20240228221251633.jpg

விலங்குளும் தகவல் பரிமாறிக்கொள்ளும். ஆனால், அவை உயிர் வாழத் தேவையான அளவில் மட்டுமே ஓசை எழுப்பி, புரிதலை ஏற்படுத்தும். மனிதர்களைப் போல, புரளிபேசிப் பொழுதைக் கழிப்பதில்லை.

மோசமானத் தகவல் தொடர்பு காரணமாக நம்மில் பலர் பாதிக்கப்படுகிறோம். குறிப்பாக நாம் நேசிப்பவர்கள், நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள அதிக வாய்ப்பு உண்டு. எந்த ஒரு உறவிலும், நம் உரையாடல் சரியாக இருந்தால், அது ஊட்டமளிக்கும் அம்சமாக மாறும். எனவே நாம் அடுத்தவருக்கு எந்த வகையான உணவை வழங்குகிறோம் என்பதை உணர்ந்து, நம் உறவுகள் செழிக்க உதவும் உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, உறவில் துன்பம் தொடர்ந்தால், நாம் துன்பத்திற்கு உணவளித்துக் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம்.

2024022822140091.jpg

உறவுகள் மேம்படும் வகையில், உரையாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, ஆசான் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். “மலர்கள் செழித்து வளர, அன்புடன் அவற்றிர்க்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும் என்றார்”. முன்வரிசையில் ஒரு பெண் உட்கார்ந்து முழு நேரமும் அழுதுக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார். பேச்சு முடிந்ததும், ஆசான், அதே அரங்கில் இருந்த அப்பெண்ணின் கணவரிடம் சென்று, “அன்பு நண்பரே, உறவெனும் உங்கள் பூவுக்கு, கொஞ்சம் தண்ணீர் தேவை” என்றார்.

அன்பின் அவசியத்தை நாம் உணர்ந்திருந்தாலும், அதை நினைவூட்ட, ஒரு நண்பர் நமக்கு தேவை. அந்த கணவருக்கும், நினைவூட்ட வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, மதிய உணவுக்குப் பிறகு, அந்த நபர் தனது மனைவியை வண்டியில் அழைத்துச் சென்றார். அவர்கள் ஒரு மணி நேரம் மனம் விட்டு பேசிச் சிரித்து, பின் ஆசிரமத்திற்கு வந்தனர். இம்முறை, தன் உரையாடலில் அவர், அப்பூவுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் அதிக கவனம் செலுத்தினார்.

அவர்கள் திரும்பி வந்தபோது, ​​மனைவி, மகிழ்ச்சியுடன், சிரித்த முகத்துடன் வருவதைப் பார்த்து, குழந்தைகள் உட்பட, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். காலையில் அவர்கள் சோகமாகவும் எரிச்சலுடனும் வெளியேறியனர். ஆனால் ஒரு மணி நேரத்தில், சரியான உரையாடலினால், மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

தகவல் தொடர்பின் சில அம்சங்கள் :
கவனித்தல்
உடல் மொழி
தனிப்பட்ட உரையாடல்
மேடையில் பேசுவது.

தகவல் பரிமாற்றத்தின் பல சுவையான தகவல்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்வோம்.