தொடர்கள்
ஆன்மீகம்
தேஜோவதி 11 "ஸ்ரீமஹாசாஸ்தா அணிந்துள்ள ஆபரணங்களும் அணிகலன்களும்" - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20240228181600744.jpg

பொற்பாதுகைகள், வீரநூபுரம், கொலுசு, பாதசரம், சதங்கை அல்லது கிண்கிணி, சரப்பள்ளி, தண்டை அல்லது வண்டை பாதகடகம் ஆகியவை பகவானின் திருப்பாத அணிகள்.

காலாழி என்ற கால்விரல்களில் அணியும் அணிகலன்

முழங்கால் – கணுக்கால் இவற்றிர்க்கு இடையில் அணியும் ஜாலகம் இடுப்பில் அணியும் பொன் அரைஞாண்

உதரபட்டம் அல்லது உதர பந்தனம் என்னும் வயிற்றில் அணியும் அணிகலன்

மார்பினில் அணியும் உரசூத்திரம் என்ற ஒற்றைவட பொன்னால் ஆன நூல்: சன்ன வீரம் என்ற இடது தோளிலிருந்து வலது இடுப்புவரை தொங்கும் பொன் வடம்: ஸ்வர்ண யக்ஞோபவீதம்: நவமணி ஹாரம்: மஹாபதக்கம்: மாதாணிபதக்கம் மகர கண்டிகை: தாழ் வடம் என்று அறியப்படும் நாபிக்குக்கீழே தொங்கும் மாலை.

உட் கழுத்தில் அணியும் கண்டஸரம் மற்றும் கழுத்தைப் பிடிப்பதுபோல் அணியும் க்ரைவேயம் அல்லது உபக்ரீவம்.

அங்கதாட்டியம் என்ற தோள்வளை புஜபட்டம், கேயூரம் அல்லது வாகுவலயம் என்ற முழங்கையின் மேல்புரம் அணியும் அணிகலன் ஆகியவை பகவான் தன் தோள்களில் அணியும் ஆபரணங்களாகும்.

கைகளில் அணியும் அணிகளான மணிக்கடகம் மற்றும் கங்கணம்.

ஹஸ்தமணி ஹஸ்தசூத்திரம் ஆகியவை பகவான் மணிக்கட்டில் அணியும் அணிகலன்கள்.

விரல்களில் அணியும் அங்குலீயம் என்ற மோதிரம்.

நெற்றியில் அணியும் நுதற்பட்டம் குண்டலம் அல்லது குழை: செவிமலர்: கர்ணபத்ரம் ஆகிய காதில் அணியும் அணிகள்.

சங்கக்குழை: மகர குண்டலம்: சிம்ஹ குண்டலம்: தினேச சசி குண்டலம் நாக குண்டலம்: கர்ணபத்ரம் ஆகியவையும் பகவானின் கர்ண பூஷணங்கள் ஆகும்.

மகர குண்டலம், ஸிம்ம குண்டலம், நாக குண்டலம், பத்ம குண்டலம், கஜ குண்டலம், சூரிய சந்திர வடிவமுடைய தினேசசசிகுண்டலம், சங்கக்குழை, பொன்னோலை ஆகியவையும் பகவானின் காதணிகளாகும்.

தலையில் அணியும் கிரீடம், ஸ்வர்ண மகுடம், மணிகண மகுடம் மற்றும் சோமகலா மகுடம்.

இந்த அணிகலன்கள் யாவையும் பாதாதி கேச முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமஹாசாஸ்தாவின் நாகாபரணங்கள்

பகவான் பல வகையான நாகாபரணங்கள்பூண்ட சிவஸ்வரூபியாவார். மணிதாஸர் கூட நாகமணிந்தவனே, நல்ல மலை சாஸ்தாவே என பகவானை எண்ணி பாடியுள்ளார்.

நாகநூபுரம் என்னும் காலில் அணியும் கால் கொலுசு, இடுப்பில் வஸ்திரம் நழுவாமல் இருக்கக் கட்டிக்கொள்ளும் கச்சையான நாக பந்தனம், நாக பட்டம், அல்லது ஸ்ர்ப்பகடி சூத்திரம்.

இடுப்பில் அணியும் நாக அரைஞாண்.

இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரை தொங்கும் நாக யக்ஞோபவீதம் என்ற பாம்பு பூணூல்.

நாகோத்தரீயம் என்ற மேல் வஸ்த்திரம்

நாகக்ரைவேயம் என்ற அட்டிகை

மார்பினில் அணியும் நாகஹாரம் என்ற பாம்பு மாலை.

தோளில் அணியும் னாகாந்தகம் என்னும் தோள்வளை

கைகளில் அணியும் நாக கங்கணம் மற்றும் ஸர்ப்பகடகம் என்ற பாம்பு மோதிரம்

காதில் அணியும் நாக குண்டலம்

தலையில் அணியும் ஸர்ப்பகோடீரம் என்ற பாம்பு உருவிலான தலைப்பாகை.

சபரிமலை ஐயப்பனின் திருவாபரணங்கள்

பந்தள தேச அரண்மனையிலிருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு மகரஜோதியன்று மூன்று பெட்டிகள் முறையே

  1. ஆபரணப்பெட்டி, 2) வெள்ளிப்பெட்டி, 3) கொடிப்பெட்டி கொண்டு வரப்பட்டு அதிலுள்ள திருவாபரணங்களை அன்று மாலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன.

அவைகள் முறையே :

திருவாபரணப்பெட்டி: திருமுகம் (ஸாஸ்தாவின் முக கவசம்), ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி), வலிய சுரிகை (பெரிய கத்தி), சிறிய சுரிகை (சிறிய கத்தி), இரண்டு தங்க யானைகள், தங்க கடுவாய் புலி, வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு, பூர்ண புஷ்கலா தேவியர் உருவம், பூக்கள் வைக்கும் தங்கத்தட்டு, நவரத்ன மோதிரம், சரப்பளி மாலை, பொன்னால் ஆன வில்வதள மாலை, நவரத்னங்கள் பதித்தமணிமாலை, பொன்னால் ஆன எருக்கம்பூ மாலை, அரைமணி, சரமாலை.

வெள்ளிப்பெட்டி: தங்கக்குடம், பூஜா பாத்திரங்கள்

கொடிப்பெட்டி:

யானைக்கான நெற்றிப்பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள்.

சபரிமலை ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படும் நாட்களில் 18 திருப்படிகளுக்குக் கீழே தீயாட்டுவிளி என்ற சாஸ்தா வரலாறு பாடப்படுகிறது.

பகவானின் திருவாபரணங்கள் பற்றி மணிதாசரும் பின்வருமாறு பாடியுள்ளார்.

செம்பவழவாய் முகுந்தமும் புன்சிரிப்பும்

தேனொழுகு மிருது வதனமும் திலபுஷ்ப

மொட்டு போல் பொருந்தியே வெற்றிக்கொள்

திரு நாசிகையின் குமிழியும், செந்தாமரைக்

கண்கடாக்ஷமும் நெற்றியிலணிந்த

கஸ்தூரி அழகும் திங்கள் ஒளி வீசும்

முஹகமலமும் கண்டமணி தீபப்பிரகாச

ஒளியும் செந்திரு முடியில் நவரத்ன

மணிமகுடமும் மணி சந்திர காவி

உருமாலினழகும் செம்பொற் பதக்கமும்

முத்து நவரத்தின மாலையணி மார்பின்

அழகும் செங்கை தனில் அணிந்த ஹஸ்த கடகமும்

விரலணி அங்குலீயத்தின் அழகும் சிற்றடிச் சேர்வையாம்

பொற்பாத கமல மணிரத்ன சிலம்பின் அழகும் திவ்யனே!

உன் மகிமை செப்புதற்கு ஆயிரம் நாவுள்ள கடு செவியனாலு

மாகுமோ? சிந்தைதனில் ஆசையால் உன் மகிமையைப்புகழவும்

யான் துணிந்தேன் திரு மனமிறங்கி எனது இடர்களை ஒழித்து நின் கருணை தந்து ஆளுமைய்யா தென் குளத்தூரினில்

பொங்கி வளர்பாலனே! தேவர்கட்கு அனுகூலனே!

திருவாபரணங்கள் பற்றி இன்னும் தொடரும்……..