மறைந்த என் அப்பா எழுத்தாளர் திரு. நா.பார்த்தசாரதி (நாபா)வுடன் ஒரு கற்பனை கலந்துரையாடல்
நாபா. மீரா
என் தந்தை திரு. தீபம். நா.பார்த்தசாரதி வாழ்ந்த காலத்தில் நான் பதின்மப் பருவத்தில் இருந்ததால் அவரது இலக்கியப் படைப்புக்களைப் படித்து உணர்ந்து விவாதம் புரியும் பக்குவம் எனக்கு இருக்கவில்லை. இப்பொழுது விவாதத்திற்குரிய கேள்விக்கணைகள் என் வயதோடு சேர்ந்து வளர்ந்த நிலையில் தந்தை என் அருகில் இல்லை. நான் படித்த சில புத்தகங்களில் இருந்து “காதல்” எனும் கள அடிப்படையில் நான்தந்தையைக் கேள்விகள் கேட்டால் எப்படி இருக்கும் ஒரு கற்பனை உரையாடல்.
- நான்: நா படிச்சிருக்கிற நெறைய கதைகள்ல நீங்க மற்ற எழுத்தாளர்களேர்ந்து வித்தியாசமா ஆண் கதாபாத்திரங்களையே அதிகம் வர்ணிக்கிறீங்க. உங்க கதைகள கதாநாயகன், நாயகி இவங்கள்ல யாரை மையமா வச்சு நீங்க எழுதறீங்க?
அப்பா: நீயே சொல்லிட்டீயேம்மா! வித்தியாசமான்னு. நாயகன், நாயகிங்கறதெல்லாம் தாண்டி கதையோட களத்தையும், கருவையும் மையமா வச்சுத்தான் என்னோட படைப்புக்கள் பொதுவா அமைஞ்சிருக்கும்.
- நான்: அப்பா, நா படிச்ச உங்களோட நிறைய கதைகள்ல நாயகன், நாயகி இணைவு ஒண்ணு மங்கலம் குன்றியதாகவோ இல்லே பாரபட்சமாகவோ அமைஞ்சிருக்கே ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?
அப்பா: நா முதல்லேயே சொன்னா மாதிரி களத்தையும், கருவையும் மையமா வச்சு அந்தப் பாணியிலேயே கதையை முடிக்கிறது தான் என் வழக்கம். நீ சொல்றா மாதிரி எல்லாம் இல்லே. நீ எந்தெந்தக் கதைகள மனசுல வச்சுட்டு இதக்கேக்கறயோ, அந்தக் கதைகளைச் சொல்லிக் கேட்டா என்னால் இன்னும் தெளிவாவும் விளக்கமாவும் பதில்
சொல்ல முடியும் மகளே!
- நான்: குறிஞ்சி மலர் நாவலிலிருந்து தொடங்குகிறேன் அப்பா. 'பூரணி' என்ற கதாபாத்திரத்தை புரட்சிப் பெண்ணாக உருவம் கொடுத்த நீங்கள் கடைசியில் 'அரவிந்தன்' இறந்தவுடன் திருமணமே ஆகாத நிலையில் அவளுக்கு விதவைக் கோலத்தைக் கொடுத்துவிட்டீர்களே, இது மங்கலக் குறைவில்லையா?
அப்பா: மீரா! திருமணம் என்பது இரு 'மனங்களின்' சங்கமத்துக்குச் சாட்சியம். என் கதையின் நாயகனும், நாயகியும் மனங்களாலே பழகிய சில நாட்களிலேயே ஒன்றிவிட்ட நிலையில் பூரணி அரவிந்தனைத் தன் கணவனாகவே ஏற்றுக் கொண்டதன் விளைவுதான், யாரும் அவள் மீது திணிக்காத அவளே விரும்பி ஏற்ற விதவைக் கோலம்.
- நான்: பொன் விலங்கு கதையில் பாரதியால் வெகுவாக ஈர்க்கப்படும் சத்தியமூர்த்தி பின்னொரு கட்டத்தில் மோகினியைக் காதலிக்கிறாரே?
அப்பா: உண்மையில் சொல்லப் போனால் ஒழுக்கம் என்பதே கேள்விக் குறியாயுள்ள குலத்தில் பிறந்த மோகினியின் சுய ஒழுக்கமும் கட்டுப்பாடுமே சத்தியமூர்த்தியின் மனத்தை மோகினியின்பாற் திருப்பியது எனலாம். காதல் தேடி அலையும் மனது எந்த இடத்தில் நிலைக்கும் என்பது இறைவன் போடும் விந்தையான முடிச்சுதான்.
- நான்: ஒரு சந்தர்ப்பத்தில் பாரதியின் அன்பு ஆள வைக்கும் அன்பு மோகினியின் அன்போ ஆட்படும் அன்பு என்று சத்தியமூர்த்தி ஒப்பிட்டுப் பார்ப்பதாக வடித்திருக்கிறீர்களே, இதைப் பெண்களைத் தங்கள் அடிமைகளாக எண்ணும் ஆணாதிக்க மனப்பான்மை எனக் கொள்ளலாமா?
அப்பா: நிச்சயமாக இல்லை. உண்மையில் பரஸ்பர அன்பு என்பது ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்தாமல் முகிழ்க்கும் உணர்வு என்பதையே என் நாயகன் வெளிப்படுத்த விரும்புகிறான்.
- நான்: தான் கண்ட நாள் முதல் காதல் பெருகித் தவித்த ஒருவர் இன்னொரு பெண்ணின் இதயத்தில் கொலுவீற்றிருப்பதை உணர்ந்து தன் காதலைச் சிறை செய்து தனக்குள் 'மனவிலங்கு' இட்டுக் கொண்ட பாரதி, தாம் தெய்வமாக வணங்குபவரைத் தடுத்தாட்கொள்ள மோதிரம் என்ற 'பொன் விலங்கு' பூட்டிய மோகினி இவர்கள் இருவரையுமே அடைய முடியாமல் வாழ்வின் இறுதிப்படியில் நின்ற சத்தியமூர்த்தி இவர்களில் யார் சிறந்தவர்? கூற முடியுமா அப்பா?
அப்பா: சரியாகச் சொல்ல வேண்டுமானால், பாரதி, சத்தியமூர்த்தி இருவரையும் குலப்பண்பு தாண்டிய அதீத ஒழுக்கத்தினால் கவர்கிறாள் மோகினி. இளமைக்கே உரிய வேகம் இருந்தாலும், சத்தியமூர்த்தியின்பால் கொண்ட காதலை, மோகினி, சத்தியமூர்த்தி
காதல் தெரிந்தவுடன் பக்குவத்துடன் கையாளும் பாரதியின் பண்பு போற்றத்தக்கது. பாரதியின்பால் ஆரம்பக்கட்டத்தில் ஈர்க்கப்பட்டாலும் மோகினியிடம் மனம் ஒன்றியவுடன் பாரதியை மாணவி என்ற எல்லையில் நிறுத்திப் பார்க்க முடிந்த சத்தியமூர்த்தியின் மாண்பு, இப்படி ஒப்பிட்டுப் பார்க்கையில் மூவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை அம்மா.
- நான்: அப்பா என் மனதில் படும் ஒரு கேள்வியைக் கேட்டு விடுகிறேன். தான் விரும்பிய மோகினியை திருமணம் செய்யாமலே இழந்த சத்தியமூர்த்தி தன்னை விரும்பிய பாரதிக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாமே!
அப்பா: மீரா! இங்கு உனக்கு ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தீர விசாரிக்கையில் பிழையான புரிதலால் மோகினியை இழந்த சத்தியமூர்த்தி அவள் அணிவித்த மோதிரத்தை 'பொன் விலங்காக'
திருமண அச்சாரமாகக் கருதியது குற்ற உணர்ச்சியால் மட்டுமல்ல. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தாரக மந்திரம் ஆண்களுக்கும் உண்டு என்பதை உறுப்படுத்த கூட பாரதியும் குறைந்தவறில்லை, தான் இழந்த காதலை எண்ணி வாடினாலும் ஒரு போதும் தான் மிகவும் நேசித்த மோகினியின் பிரிவுத் துயரைத் தாண்டி சத்தியமூர்த்தியைக் கைப்பிடிக்க எண்ணியிருக்கவே மாட்டார் என்பதே என் தரப்பு வாதம், சரிதானே மகளே!
- நான்: சரிதான் அப்பா, ஒப்புக் கொள்கிறேன். அடுத்ததாக நெற்றிக்கண் கதையில் வரும் 'துளசி' பாத்திரம் பற்றி சில சந்தேகங்கள் கேட்கலாம்தானே!
அப்பா: தாராளமாக! நீ இப்படி அலசி ஆராய்ந்து கேள்வி கேட்பதற்கு, பதில் சொல்ல ஆர்வமாகத்தான் இருக்கிறது.
Leave a comment
Upload