தொடர்கள்
ஆன்மீகம்
தில்லையை நினை,தொல்லையை மற! பகுதி-3 மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

20240124105516655.jpg

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் ’நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு வந்து அந்நாளில் அர்ப்பணிக்கின்றனர்.

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.இத்தலம் ’தில்லை’ என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என அழைக்கப்படுகின்றன.

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை ’திருவனந்தல்’ என்றும் ’பால் நைவேத்தியம்’ என்றும் அழைக்கின்றனர். நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.

இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர்தான் நினைத்துக் கொண்டிருப்பர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.

நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட வருகின்றனர். அப்படிப்பட்ட சிவபெருமான் திருவிழா காலத்தில் தேரில் காட்சி தருகிறார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகின்றது.பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான். . திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம்.நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும் சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும், தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகளும் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வர மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதியும்,இரயில் வசதியும் உள்ளது.

-தில்லையின் பெருமை தொடரும்.