தொடர்கள்
ஆன்மீகம்
திருநாங்கூர் கருடசேவை திருக்காட்சி நேரடி அனுபவம் - சாயிராம்


2024012212270598.jpg

“திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருள் நடந்து இவ் வேழுலகத்தவர் பணிய அமர்ந்தேத்த இருந்தவிடம்”

என்று ஆழ்வார்களால் போற்றுப்படும் திருநாங்கூரில், 11 கோவில்களும் ஆண்டுதோறும் சேர்ந்து நடத்தும் கருட சேவை உற்சவம் தனித்துவமானது. திருநாங்கூர் பகுதியை சார்ந்த திவ்ய தேசங்கள் யாவும் ஒன்றுக்கொன்று நிகழ்வுகளை கொண்டு நெருங்கிய தொடர்புடையது.

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே சுமார் ஐந்து கிமி சுற்றள்வில், திருநாங்கூரில் அமைந்திருக்கும் பதினொரு வைணவ கோவில்கள், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் அடங்கும்.

திருநாங்கூர் மணிமாடக் கோயில் சீர்காழிக்கு அருகே விளங்கும் திருத்தலம், இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள்.
ஆக மொத்தம், பதினொன்று.

திருவாலி திருநகரியில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் கோவிலின் கர்பகிரஹத்தை அடுத்து உள்ள சன்னதியில் குமுதவல்லி தாயார் சமேதராக திருமங்கை ஆழ்வார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள, திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இதை திருமங்கை ஆழ்வாரே நடத்தி வைப்பதாக அனைவரின் திட நம்பிக்கை!

தை அமாவாசையை ஒட்டி மூன்று நாட்கள் கோலாகலமாக இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் பக்திபரவசத்தையும் விவரிக்க இயலாத பேரின்பத்தையும், காணும் பக்த கோடிகளுக்கு வழங்குகிறது.

பன்னிரு ஆழ்வார்களில் இளையவரும் இறுதியானவருமான திருமங்கை ஆழ்வார் திருநாங்கூர் பகுயில் உள்ள திருக்குறையூரில் எட்டாம் நூற்றாண்டில் அவதரித்தவர் ஆவார்.

82 திவ்ய தேசங்களில் பாசுரங்கள் இயற்பிய பெருமை கொண்ட இவர் தனித்து மங்களாசாசனம் புரிந்த 46 தலங்களில் திருநாங்கூரில் உள்ள எல்லா திருப்பதிகளும் அடங்கும் என்பது மிக விசேஷமான அம்சமாகும். ஆகையால் இந்த கருட சேவை திருவிழாவில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. திருநாங்கூர் திவ்ய தேச எம்பெருமான்கள் யாவரையும் “பெரிய திருவடி” ஆன கருடர் வாகனத்தில் சேர்ந்து சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை தொன்றுதொட்டு உணர்ந்தளித்த நமது முன்னோர்களதுதானே.

புராணத் தொடர்பு

புராணங்களின்படி தாக்‌ஷாயினி, தந்தை தக்‌ஷனின் யாகத்திற்கு சிவனின் அறிவுரையையும் புறக்கணித்து செல்ல, தந்தையிடம் வாக்குவாதத்தில் சினமுற்று அக்னிக்கு இரையாகிறாள். பின்னர் அங்கு வந்த சிவபெருமான் ஊர்க்கத்துடன் நடனமாடுகிறார்.

சிவனின் ஜடாமுடி உக்ர தாண்டவத்தில் தரையை மீண்டும் மீண்டும் தொட பதினொரு உக்ர மூர்த்தியாக சிவன் உருவாகி, உடனடி பேரழிவுக்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

தேவர்கள் வேண்டியபடி, சிவனின் கோபத்தை தணித்து இந்த பிரபஞ்சத்தை காக்கும் பொருட்டு பதினொரு வடிவில் பெருமாள் தோன்றி நிலமையை கட்டுப்படுத்தினார்.

விஷ்ணு எந்த பதினொரு இடங்களில் தோன்றி உலகை காத்து அருளினாரோ அவை பதினொரு “திருநாங்கூர்” திவ்ய தேசங்கள் ஆகும். சிவனின் விருப்பத்திற்கு இணங்க பெருமாள் இங்கு கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

சோழ நாட்டு திருப்பதிகளுக்கு நடு நாயகமாக விளங்கும் திருநாங்கூரில் அமைந்துள்ள திவ்ய தேசங்கள் பின்வருபவைதான்.

திருகவளம்பாடி. கோபால க்ருஷ்ணன். (ராஜ கோபாலன்)

அரிமேய விண்ணகரம். குடமாடு கூத்தர். (சதுர்புஜ கோபாலன்)

திருவண் புருஷோத்தம். புருஷோத்தம பெருமாள்

செம்பொன் செய் கோவில். பேரருளாளன் (செம்பொன்ரங்கர்

மணிமாடக் கோவில். நந்தா விளக்கு பெருமாள் (நாராயணர்)

வைகுந்த விண்ணகரம். வைகுந்தநாத பெருமாள்

திருத்தேவனார் தோகை. தெய்வ நாயகன் (மாதவ பெருமாள்)

திருத்தெற்றியம்பலம். செங்கண்மால் பெருமாள் (ரங்கநாதர்)

திருமணிக்கூடம். வரதராஜர் (மணிக்கூட நாயகன்)

திருவெள்ளக்குளம். அண்ணன் பெருமாள் (ஶ்ரீநிவாசர்)

திருபார்த்தன்பள்ளி. தாமரையின் கேள்வன் (பார்த்தசாரதி)

இந்த கருட உற்சவத்தின் உத்சவத்தின் துவக்கமாக தை அமாவாசை, சமீபத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதியன்று திருவாலி திருநகரிலிருந்து திருமங்கை ஆழ்வார் அதிகாலை புறப்பட்டு வர, முதலில் திருகவளம்பாடியில் ஆரம்பித்து திருநாங்கூரில் உள்ள அனைத்து திவ்ய தேச எம்பெருமான்களும் தங்கள் கோயில்களில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு திருநாங்கூர் மணிமாட கோயில் முன்பு சன்னதிகளில் எழுந்தருள, அவரது பாசுரங்கள் ஓதப்படுகின்றன. இந்த திருக்காட்சியை காண மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

20240122123300984.jpg

[திருநாங்கூர் பார்த்தன்பள்ளி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கு தை அமாவாசையை முன்னிட்டு திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி மாலைபரிவட்ட பஹுமான மரியாதை,, மஞ்களாசாசனம் நடைபெற்றது. (படம்)]

தை அமாவாசைக்கு மறுநாள், பதினொரு கோவில் எம்பெருமான்கள் ஒவ்வொருவராக மதியம் முதல் தங்களது பல்லக்கில் மணிமாடக்கோவில் வளாகத்தில் தனிதனியாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைகளுக்கு வந்தடைகின்றனர். பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்னர் எல்லா அறைகளும் மூடப்படுகிறது.

20240122131356459.jpg

[திரைக்கு பின்னால் எல்லா எம்பெருமான்களக்கும் கருட வாகன அலங்கார ஏற்பாடுகள் நடக்கின்றன.]

திரைக்கு பின்னால் எல்லா எம்பெருமான்களக்கும் அலங்காரங்கள் முடிந்து பின்னர் கருட வாகனத்தில் எழிலாக முறைப்படி அமர்த்தபடுகின்றனர். பன்னிரெண்டாவது அறையில் விநாயகர் அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் புரிந்த வண்ணம் காட்சி அளித்தார்.

இரவு எட்டு மணியளவில் திருவண்புருஷோத்தம் கோவிலில் இருந்து மணவாள மாமுனிகள் பல்லக்கில் மணிமாடக்கோவில் வளாகத்தில் முதலில் பள்ளி கொண்ட பெருமாள் அறைக்கு எதிரே எழுந்தருள,

20240122125548495.jpg

திரை விலக்கப்பட்டு, கருட வாகனத்தில் உள்ள பெருமாளுக்கு மங்களாசாசனம் நடைந்தேறியது. பின்னர் மாமுனிகள் ஒன்றன் பின் ஒன்றாக கருட வாகன எம்பெருமான்கள், சதுர்புஜ கோபாலன், வைகுந்த நாதன், வரதராஜன், கவளம்பாடி கோபாலன் முன்னர் எழுந்தருள அவரது பாசுரங்கள் ஓதப்பட்டன. அதை தொடர்ந்து, மாமுனிகள் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவருக்கான சேஷ வாகனத்தில் அமர்ந்தருளினார்.

20240122125648772.jpg

பின்னர் திருவாலியிலிருந்து குமுதவல்லி தாயார் சமேத திருமங்கை ஆழ்வார் பல்லக்கில் வருகிறார்[படம்].

மணிமாடக்கோவில் நாராயணன் முன்னர் முதலில் மங்களாசாசனம் முடித்து, பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மற்ற கருட வாகன எம்பெருமான்கள் முன்னர் சேவை புரிகிறார். இறுதியாக ஆழ்வார் அவரது அன்ன வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்[படம்].

20240122125936916.jpg

நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக எல்லா எம்பெருமான்களுக்கும் ஒரே தீபாராதனை வைபவம் சிறப்புடன் நடந்தேறியது. நள்ளிரவுக்கு பின் முதலில் மணவாள முனிகள் சேஷ வாகனத்தில் வளாகத்திலிருந்து வெளி வந்து வீதி உலாவிற்காக முதலில் நிற்க, பதினொரு எம்பெருமான்களும் தத்தம் கருட வாகனத்தில் வெளியே வந்து வரிசையாக, விமரிசையாக காட்சி அளித்தனர்[படம்].

20240122130957384.jpg

20240122131127993.jpg

கடைசியாக வந்த திருமங்கை ஆழ்வாரின் அன்ன வாகனம் எம்பெருமான்களை வலம் வர, திருவிழா இனிதே முடிவடைகிறது.

கடைசியில் மூன்றாம் நாளன்று அந்தந்த எம்பெருமான்கள் வீதி உலாவாக பிப்ரவரி 11 ஆம் நாள் காலையில் அவர்களது கோவிலுக்கு அழைத்து செல்லபடுகின்றனர். அவரவர் திவ்ய தேசங்களுக்கு வீதி உலாவாக திரும்புதல் மிகவும் உற்சாகமான முறையில் அமைந்திருந்தது. திருமங்கை ஆழ்வார் தனது இருப்பிடமான திருவாலி திருநகருக்கு செல்கிறார்.

திருநாங்கூர் பெருமைகள்

அகஸ்திய முனிவர் உபரிசரவசு மன்னனுக்கு பாரத தேசத்தின் க்ஷேத்ர, தீர்த்த மகிமைகளை கூறும்போது, பதினேழு அத்யாயங்கள் கொண்ட *பலாசவன* மகாத்மியத்தைக்p கூறினார். அந்த பலாசவனமே தற்போதைய *திருநாங்கூர்!*

இதிகாசங்களில் போற்றப்படும் மதங்கர், தொம்யர், வ்யாக்ரபாதர், உதங்கர் போன்ற முனிவர்களின் ஆஸ்ரமங்களும், மகாபாரதத்தில் பரிஷித் மஹாராஜாவுக்கு காலனான, வீரியம் கொண்ட நாகராஜன், தக்ஷகன் ஆட்சி செய்த *நாகபுரி* என்னும் *திருநாங்கூரே!*

சிவனின் ருத்ரதாண்டவத்தை நிறுத்த, பரமபதநாதனே எழுந்தருளி வர, அவரைத் தொடர்ந்து பதினோறு எம்பெருமான்களும் இதை சுற்றியுள்ள திவ்யதேசங்களில் வந்து அருள்பாலிக்கிறார்கள்!

"முறையால் வளர்க்கின்ற முத்தீயர், நால்வேதர்,

ஐவேள்வி, யாறங்கர், ஏழினிசையோர்,

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே!"

- பெரிய திருமொழி

இங்கு வசிக்கும் அந்தணர்கள்,‌ ஹோமம் செய்கிற மூன்று அக்னிகளை உடையவராய், நான்கு வேதங்களையும், ஐந்து யாகங்களையும், ஆறு வேத ஆகமங்களையும், ஏழு ஸ்வரங்களையும் நன்கு கற்றறிந்த விற்பன்னர்கள் என்கிறார் திருமங்கையாழ்வார்.

பெருமாள் வீதியுலா காட்சியுடன், கருட சேவை தரிசித்ததின் புண்ணிய பலன்களை அடைந்த பக்தர்களும் தாங்கள் பெற்ற பாக்கியம் பெருமாளின் கருணை என்பதை மகிழ்வுடன் உணர்கின்றனர். அடியேனுக்கும் இந்த வருடம் இப்பாக்கியம் கிட்டியது அவனருளாலே. அவனருளாலேயே உங்களுடன் அந்த உணர்வையும் பகிர்ந்தளிக்கும் பாக்கியமும் பெற்றேன்.