உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். -விவிலியம்
இருக்கும் வளங்களை, எவரொருவர் சரியான முறையில் பயன்படுத்தி வளர்கிறாரோ, அவருக்கு மேலும் கொடுக்கப்படும். வளங்களைச் சரியாக மேலாண்மை செய்யத் தவறியவர்களிடம் இருந்து, உள்ளது பறிபோகும்.
பெண்களுக்குப் பொருளாதார வளங்கள் கிடைக்கும் போது, முதலில் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட, தங்கள் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். பிறர் தேவை அறிந்து செயல்படும் பெண்கள், நிச்சயம் தனக்கும் தன் குடும்பத்திற்குமான பொருளாதாரத்தை மேலாண்மை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வரும் பணத்தில், எவ்வளவு செலவு செய்வது? எப்படிச் சேமிப்பது? எதில் முதலீடு செய்வது? அதிலிருந்து வரும் தொகையை, மேலும் எவ்வாறு கையாள்வது என்று பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
"நீங்கள் செல்வந்தராக இருந்தால், செல்வத்தைப் பெறும்போதே, சேமிப்பைப் பற்றியும் சிந்தியுங்கள்." - பெஞ்சமின் பிராங்க்ளின், அமெரிக்காவின் தந்தை.
இந்த வாசகத்தை மறுமுறை படியுங்கள்.
செல்வந்தராக இருப்பினும் கூட, சேமிப்பைப் பற்றிச் சிந்திக்காவிட்டால், செல்வம் நிலைக்காது.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)
பொருளின் அளவு அறிந்து, அதற்கேற்ப வாழாதவனுடைய வாழ்க்கை, இருப்பது போல் தோன்றி, இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
பொருள் சேரும் போது, தேங்காய் உள்ளே சேரும் நீர் போல, மெதுவாகச் சேர்ந்து கொண்டே வருமாம். கவனக்குறைவால், விழிப்புணர்வு இல்லாமல் செலவு செய்து வந்தால், கை நழுவிய தேங்காய், பட்டென்றுச் சிதறி, தண்ணீர் மொத்தமும் கண நேரத்தில் வீணாவது போல, நம் பொருளும், சிதறிப் போகும்.
மாதம்தோறும் வரும் வருமானத்திலிருந்து, 10 சதவிகிதத்தை, சேமிப்பிற்கென்று ஒதுக்கிவிடுங்கள். அது தான் உங்களுடைய பணம். ஒரு கட்டத்தில், உங்கள் சேமிப்பு, உங்களுக்காக உழைக்க ஆரம்பிக்கும், என்கிறார் ஜார்ஜ் எஸ். கிளாஸன்.
சேமிப்பு விதிகளை பற்றி ஏறத்தாழ, 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தை எழுதியவர் திரு ஜார்ஜ் எஸ். கிளாஸன். அப்புத்தகத்தின் முக்கிய சாராம்சத்தை உடன் இணைத்துள்ளேன். வாசகர்கள் வாசித்துப் பயனடையுங்கள்.
https://bit.ly/3SrFxpc
உலகளவில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் நடக்கும் அனைத்து விவரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். “அதப்பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க… இருக்குற வேலைல இதையெல்லாம் வேற நா கவனிக்கனுமா..” என்று சலித்துக் கொள்ளாமல், சில அடிப்படை விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கணவன் மணைவி இருவருக்கும் பொதுவான ஒரு இடத்தில், இவற்றைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
அடையாள அட்டைகள் மற்றும் சட்ட ஆவணங்கள்:
பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ், பான்டுகள் மற்றும் ஐடிஆர்கள்.
நிதி மற்றும் சொத்து ஆவணங்கள்:
வங்கி கணக்கு தகவல், வங்கி லாக்கர் விவரம், சொத்து மற்றும் வாகனப் பத்திரங்கள், காப்பீட்டுக் கொள்கைகள், அடமானம் மற்றும் கடன் ஆவணங்கள், பவர் ஆஃப் அட்டர்னி ஆவணங்கள், உயில்கள் போன்றவை.
அடுத்து, மருத்துவப் பதிவுகள்:
காப்பீடுகள் மற்றும் மருத்துவச் சான்றுகள்.
மேலே குறிப்பிட்ட இந்த ஆவணங்களில், என்ன சொல்லப்பட்டிருக்கு, என்ற அடிப்படை விவரங்களை நிச்சயம் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவற்றை விரைவாக எடுத்துக் கையாளும் படி, ஆவணங்களை வரிசைப்படுத்தி வையுங்கள்.
ஆவணங்களை மதிப்பாய்வு செய்யவும், புதுப்பிக்கவும் ஒரு அட்டவணையை அமைத்துகொண்டு, அதன்படி செயல்படுங்கள்.
முக்கியமான ஆவணங்களை, கணவன், மனைவி இருவரும் அணுக முடியாத பட்சத்தில், பிள்ளைகள் வளர்ந்திருந்தால் அவர்களிடம், அல்லது நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு, அவற்றின் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தி வையுங்கள்.
பெண்கள் சுய நிர்ணய உரிமை பெற்று முன்னேற, கல்வி மற்றும் பொருளாதாரத்தை அடுத்து, நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்….
அடுத்த கட்டுரையில்.
Leave a comment
Upload