தொடர்கள்
Other
சீதையைத் தேடி .......ஸ்ரீலங்காவில் ஒரு சுற்றுலா 2 - டாக்டர் (கர்னல்) ஹரிகிருஷ்ணன்

போன வாரம் ராம்போடா நீர்வீழ்ச்சியில் போட் ரைடும் அதற்கப்புறமா சூடா டீ சாப்பிட்டதோடு முடித்திருந்தேன்.

தொடர்ந்து....

அதற்கப்புறம் ஒரு தம்ரோ (Damro ) டீ தொழிற்சாலை; கிரிகோரி(Gregory ) லேக் இல் ஒரு போட் ரைடு. இவ்விரண்டையும் முடித்துக்கொண்டு சீதை அம்மன் கோவில்.

ஆஹா, என்ன அற்புதமான இடம் அந்தக்கோவில்!

மலையடிவாரத்தில் கோவில். கீழே ஒரு சின்ன ஓடை. சீதை இந்த இடத்தில் கைதியாய் இருந்தபோது அழுததால் துவங்கிய ஓடை என்று ஒரு ஐதீகம்.

பின் பக்கம் அசோகா வாடிகா. என் மனைவிக்கு ஒரு குழப்பம் - அசோக மரம் ஒன்றுமே காணவில்லையே, என்று. கோவில் குருக்களிடம் கேட்டதும் அவர் ஒரு பழங்காலத்து மர அடிக்கட்டை ஒன்றை காண்பித்தார். அந்த அசோக மரத்தின் அடியில் தான் சீதை காலம் கடத்தியதாக கருதப்படுகிறது என்கிறார். அந்த இடத்தில் நின்று கண்களை மூடிக்கொண்டால், ஒரு சிறிய பேதைப்பெண், தன்னந்தனியாக, தன் கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு தவிக்கும் நிலை கண் முன் தோன்றி, தொண்டையில் ஒரு கட்டி சிக்குகிறது .

20240119224923745.jpg

நுவரெலியா 6000 அடி உயரத்தில் இருக்கிறது. நல்ல குளிர் ! அங்கு சென்றால் ஒரு ஜாக்கெட், குல்லாய் பேக் செய்து கொண்டு செல்ல மறக்காதீர்கள்!

அடுத்த நாள் கிட்டத்தட்ட கோச்சிலேயே வாசம் - நுவரெலியாவிலிருந்து பென்டோட்டா போக சுமார் 6 மணி நேரம் எடுத்தது. வழியில் வைட் வாட்டர் ராஃப்டிங், லஞ்ச் ஸ்டாப். நான் ராஃப்டிங் போகவில்லை - எனக்கும் தண்ணீருக்கும் ரிலேஷன்ஷிப் சரியில்லை! ஹோட்டல் வந்தவுடன் டைனிங் ரூமுக்கு ஓடி சாப்பிட்டுவிட்டு, ஒரு தூக்கம் போட்டேன் !

20240119225008432.jpg

பென்டோட்டா பீச்

டே 5 : ப்ரேக்பாஸ்ட் முடித்து, பீச்சில் கொஞ்சம் அலைந்து திருப்தி அடைந்து, Galle (கால் , காலி, காள என்றெல்லாம் சொல்லப்படும் ஒரு துறைமுக நகரம்) வந்திறங்கினோம். இந்த இடத்தில் தான் முதல் முதலாக வெள்ளைக்காரர்கள் இலங்கையை பிடித்தார்கள். முதலில் போர்ச்சுகீஸ், அப்புறம் டட்ச், கடைசியாக பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் தத்தளித்திருக்கிறது, இலங்கை, 1948 - ல் சுதந்திரம் கிடைக்கும் வரை.

பார்ப்பதற்கு ஒரு ஓல்ட் போர்ட் - அதில் பழங்கால அரண்மனைகள், தனியார் வீடுகள், லைப்ரரி, கிளாக் டவர், லைட் ஹவுஸ் என்று பல அடிமை சின்னங்கள். நுவரெலியாவின் குளிருக்கு மாறாக இங்கு சென்னை வெய்யில், ஈரப்பதம் இரண்டும் சேர்ந்து ஐஸ் கிரீம், இளநீர், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் எங்களை பிடித்து இழுத்தன - நாங்கள் விருப்பத்துடன் பணிந்தோம்! ஒரு டிபிகல் க்ரூப் போட்டோ எடுத்து விட்டு கோச்சில் அஹுங்கல்ல (குங்கள்ல) என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தோம் - இது கொலோம்போ போகும் வழியில் இருக்கிறது. எங்களது ட்ரிப்பில் மிகவும் என்ஜாய் பண்ணிய பெஸ்ட் ஹோட்டல் இங்கேதான்.

20240119225111441.jpg

கலங்கரை விளக்கம்

20240119225155868.jpg

கிளாக் டவர்

20240119225222607.jpg

ஐஸ் கிரீம், ஐஸ் கிரீம்!

எனது உயிர் தோழன் - அதுதான் திடீர் டெலிபோன் ராஜகோபால் - தம்பதியரின் 44 வது திருமண ஆண்டு விழா அன்று. அவன் என்னிடம் தனியாக சொன்னான் - "ஒரு கேக் ஏற்பாடு செய்வாயா? நம்ம க்ரூப் எல்லோருக்கும் என் சார்பாக ட்ரீட் குடுக்க விரும்புகிறேன்" என்று.

நான் அவனிடம் எப்படி சொல்வது, கேக் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டோம், உனது அக்கா, அத்திம்பேர், மற்றும் நாங்கள் சிலரும் சேர்ந்து என்று? சர்ப்ரைஸ் ஆச்சே!

20240119225309909.jpg

ராஜகோபால் - தம்பதியரின் 44!

அந்த ஹோட்டல் அதிகாரிகள் வகையாக கேக் தயாரித்து கொடுக்க, இரவு டின்னருக்கு முன்பு ஒரு பெரிய பார்ட்டியே நடத்தி விட்டோம்!

ராஜகோபால், அவன், மனைவி லதா இரண்டு பெரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள். "மோஸ்ட் மெமோரபில் ஆனிவர்சரி" என்று எல்லோரையும் கை குலுக்கி தேங்க்ஸ் சொன்னார்கள்.

ரயில் பயணிகள் போல் முதலில் சற்று தனித்து அவரவர் கூட்டத்தில் மட்டும் இருந்து, பின்னர் சீக்கிரமாகவே எல்லோரும் ஒன்று கலந்து விட்டிருந்தோம். ஆனிவர்சரி பார்ட்டி எல்லோரையும் மிக நெருங்கிய நண்பர்களாக மாற்றிவிட்டிருந்தது. கூடவே, எங்கள் சுற்றுலாவும் முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருந்தது!

டே 6 : கொலோம்போ செல்வோம்! எப்பவும் போல் காலை உணவு முடிந்ததும் சாமான்கள் எல்லாம் கோச்சில் ஏற்றப்பட்டன. முதல் ஸ்டாப் மது கங்கை எனப்படும் ஒரு அழகான நதி, ஏரியாக வளர்ந்து, கடைசியில் இந்து மகா சமுத்திரம் போய் சேருகிறது. இந்தத் தருவாயில் ஒரு சதுப்புநிலம் (Mangrove forest ) ஒன்றையும் உருவாக்குகிறது. பல நூற்றுக்கணக்கான செடி கொடிகளும், ஊர்வன பரப்பன வகைகளும் அங்கு செழிப்புடன் காணக்கிடைக்கின்றன.

அங்கேயும் நட்ட நடு ஏரியில் ஒரு பெட்டிக்கடை ! அங்கு நாங்கள் அருந்திய ராஜா தேங்காய், அதாவது, King coconut அல்லது சிங்களத்தில் தேய்ம்பிளி! ஆஹா, என்சொல்ல ? அந்த இனிப்பு இப்போதும் நாக்கில் ஊறுகிறதே !

20240119225350735.jpg

மது கங்கை நதி,

20240119225425916.jpg

சதுப்புநில மரங்கள்

மதிய உணவு சமயவாக்கில் கொலோம்போ வந்து சேர்ந்தோம். என்ன ஒரு அழகான, சுத்தமான நகரம்? காரணமில்லாத ஹார்ன் சத்தம், குப்பை மூட்டைகள், நாற்றம், ஒன்றுமே இல்லையே? நம்மைவிட இவர்கள் வேறு பட்டதாக தெரியவில்லையே? நம்மால் ஏன் நமது நகரங்களை இப்படி வைத்துக்கொள்ள முடியவில்லை ? இப்படி யோசித்துக்கொண்டே பல இடங்களில் பார்க்க வேண்டிய கட்டிடங்களை கண்ணோட்டம் விட்டேன். மனதில் ஒரு உறுத்தல்! நம்மால் முடியாததா? முயற்சித்தால் நடக்காததா?

20240119225512362.jpg

கொலோம்போ மரீனா

20240119225559427.jpg

ஹோட்டல் டாப் வியூ

2024011922565053.jpg

மறுபடி சென்னை!

திரும்பி விட்டோம். ஆனாலும், அந்த சுற்றுலா எங்களின் நினவில் சிலவற்றைக் கிளறி விட்டிருந்தது.

இலங்கை ஒரு அழகான தேசம். அதன் மக்கள் நாங்கள் கண்ட வரையில் மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் பழகினர். இதற்கும் தேசம் ஒரு மிகவும் கடுமையான நிலைமையில் இருப்பதைப் பார்த்தோம் - விலை வாசி சாதாரண மக்களை மிகவும் பாதிக்கிறது. இப்படி ஒரு விதியா? ஐயோ பாவம். கூடிய சீக்கிரத்தில் அவர்களது பொருளாதாரம் மீண்டும் முன்னேறி, எல்லோரும் இன்புற வாழ கடவுளை இதயப்பூர்வமாக வேண்டிக்கொண்டு ஹோட்டல் திரும்பினோம். மறுநாள் காலை அவரவர் ஊருக்கு கிளம்பிவிட்டோம். புதிதாக கிடைத்த பல நண்பர்கள், ஒரு நல்ல, ஒழுக்கமான நாடு இதெல்லாம் விட்டுப்பிரிய மனமே இல்லாமல்.