அகத்திணையில் அமைந்துள்ள நில வகை ஒன்றுக்கு ஒரு செய்யுளெனக் கூறி விவரிக்கிறார் பரணீதரன்.
குறிஞ்சி
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
(குறுந்தொகை : 2) - இறையனார்
கருத்து : மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு ! இதில் தும்பி, மயில் போன்றவை குறிஞ்சி நிலத்தின் பொருள்கள். அதனால் இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு குறிஞ்சி நிலத்தில். இந்தப் பாடலைத் தான் ‘திருவிளையாடல்’ படத்தில் கூட காட்டியிருப்பார்கள்.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!
(குறுந்தொகை : 40) - செம்புலப்பெயனீரார்
கருத்து : தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயமேற்படுகிறது, எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானே (பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - குறிஞ்சியின் கருப்பொருள்) என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் -
என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்?
எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.
இந்த பாடல் ‘இருவர்’ படத்தில் வரும் நறுமுகையே பாட்டின் நடுவில் வரும்.
முல்லை
ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.
(ஐங்குறு நூறு : 462) - பேயனார்
கருத்து : காட்டில் மழை பொழிய ஆரம்பிக்கிறது. அதேநேரத்தில் கொன்றைப் பூக்கள் மலர ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் கார்காலத்தின் அறிகுறிகள். இதைப்பற்றி புலவர் நமக்கு விளக்குகிறார்.
தலைவியானவள் கார்காலம் தொடங்கியும் தலைவன் வீடு திரும்பாத தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த அவளது தோழி அவளுக்கு இவ்வாறு ஆறுதல் கூறுகிறாள் - சாதாரணமாக மழை பெய்கிறது. அதை கார்காலம் என்று தவறாக நினைத்துக் கொண்ட கொன்றை மரம் பூ பூத்து விட்டது. அதனால் நீ கவலை கொள்ளாதே.
இதில் நாம் தெரிந்து கொண்ட கருத்துக்கள் - கார்காலம், கொன்றை மரம், கொன்றைப்பூ. இவை அனைத்தும் முல்லை நிலத்துக்குரிய பொருட்கள். அதனால் இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு முல்லை நிலத்தில்.
மருதம்
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே
(குறுந்தொகை : 5) - மாதீர்த்தனார்
கருத்து : இந்தப் பாடல் தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது. ஊருக்கு அருகில் ஒரு பொய்கை உள்ளது. பொய்கைக்கு அருகில் ஒரு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் வெண்குருகு இருக்கும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். அங்கே நாரைகளைத் தவிர வேறு எதுவும் வராது அதனால் இனிமேல் நீங்கள் தலைவியை அங்கே பார்க்கலாம் என்று தோழி கூறுகிறாள். இதில் பொய்கை, ஆறு, குருகு (நாரை) போன்றவை மருத நிலத்தின் கருப்பொருட்கள். அதனால் இந்த காட்சி அமைந்துள்ளது மருத நிலத்தில்.
நெய்தல்
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, ''நும்
வண்ணம் எவனோ?'' என்றனிர் செலினே?
(அகநானூறு : 30) - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
கருத்து : வண்ணம் (வர்ணம்) கேட்டறிந்து திருமணம் செய்துகொள்வது அக்கால வழக்கம். வண்ணம் என்பது இங்குத் தலைவியின் பெயர், பெற்றோர், உற்றார்-உறவினர் பற்றிய செய்தி. “என் ஊர்த்துறைக்கு வந்து என் பெற்றோரின் வண்ணம் என்ன என்று கேட்டுவிட்டுச் செல்லக்கூடாதா” என்கிறாள் தோழி.
பரத-மக்கள் வலை வீசிக் கடலில் மீனை முகந்துகொண்டு வருவர். கண்ணுக் கண்ணாக முடிந்து கயிறு கோக்கப்பட்ட வலை அது. கொண்டுவந்த மீனை இளையரும், முதியமாகச் சுற்றத்தாருடன் கூடிப் பயன்படுத்திக்கொள்வர்.
உப்பு விற்கச் செல்லும் உமணர் வண்டியில் பல எருதுகளைப் பூட்டி ஓட்டிச்செல்வர். உப்புவண்டிகள் பல ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும். இதற்கு ‘ஒழுகை’ என்று பெயர். இந்த ஒழுகை போல இளையரும் முதியரும் ஒன்றுதிரண்டு மீனுடன் வரும் திமிலை மணல்-கரைக்கு ஒன்றாக ஒலி எழுப்பி (ஐலசா பாட்டு பாடி) இழுப்பர்.
களத்தில் நெல்லைத் தொகுத்து உழவுத் தொழிலாளிகளுக்கு வழங்கும் உழவர் போல, கொண்டுவந்த மீன்களைக் குவித்து, வெறும்-உண்கலத்துடன் வந்தவர்கள் நிறைவுகொள்ளும் வகையில் வழங்குவர்.
மிஞ்சியிருக்கும் மீன்களை, பாடுபட்டுக் கொண்டுவந்த மீன்களை மணல்-குவியல்களில் வைத்துக்கொண்டு விற்பர். விற்றுக்கொண்டு அந்த இடத்திலையே உறங்குவர். இப்படிப்பட்ட மீன்-துறையை உடைய நாட்டுக்கு அவன் தலைவன்.
தலைவனே!
புன்னைப் பூ முத்துப் போல இருக்கும். இந்தப் பூ-முத்துக்களை யாரும் அணிந்துகொள்வது இல்லை. எனவே இந்தப் பூக்கள் மண்ணா முத்தம் (அணிந்துகொள்ளாத முத்தம்) என்று பாடலில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. இப்படி மண்ணாமுத்தம் பூத்துக்கிடக்கும் கானல்-நிலத்துக்கு வந்து, “உன் வண்ணம் என்ன” என்று எம் பெற்றோரைக் கேட்டுவிட்டுச் சென்றால், உன் பெருமை கெட்டுவிடுமா?” – என்கிறாள் தோழி.
பாலை
தண்ணீர் பெறாஅத் தடு மாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு
(கலித்தொகை : 6) -
கருத்து : தண்ணீர் கிடைக்காமையால் நாவை நனைக்கக் கண்ணீர் சிந்த வைக்கும் கொடுமையான காடு என்று முறையில் திரிந்த முல்லை நிலம் இங்குப், பாலை நிலம் ஆகிறது. அதனால் இந்த பாடல் பாலை நிலத்திற்குரியது.
தொடரும்......
Leave a comment
Upload