தொடர்கள்
ஆன்மீகம்
சநாதன தர்மம் "இந்தச் சடங்குகளை எல்லாம் முற்றிலும் விட்டுவிட்டால் சநாதன தர்மம் என்னவாகும்?" - ஆர் சங்கரன்

20240120174907969.jpg

சநாதன தர்மத்தின் சடங்குகள் பற்றி கடந்த ஒன்பது தொகுதிகளாக விவரித்து வருகிறோமே. என்னடா இது, சடங்குகள் (Rites and rituals) பற்றி இவ்வளவு அலசல் தேவையா என்ற இயற்கையான கேள்விக்கு சங்கரன் பதிலளிக்கிறார்.

ஒரு சமுதாயம் என்று இருந்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் தேவையே. அவை நெடுங்காலம் பின்பற்றப் பட்டு அதனால் அந்த சமுதாயம் நிலைத்து நிற்குமானால் அவை கட்டாயமாக அலசப்பட வேன்டியவை என்பதாலேயே இத்துணை நீண்ட விவரிப்பு.

இந்த மூன்று தொகுப்புகளில் முதல் இரண்டும் மதம் சாராது உடல் / மன நலம் மற்றும் விழிப்புணர்வு சார்ந்ததாக இருக்கின்றன. மதம், சமயம் என்ற நிலையைக் கடந்து ஒவ்வொரு மனிதனுக்கும் நலம் பயப்பதாக இவை இருக்கின்றன. இவற்றின் உண்மையான பயனை நோக்காமல் இதைச் சொல்பவர் சநாதனி என்பதாலேயே இவற்றை எதிர்ப்பதை ஒரு தொழிலாகக் கொள்கிறார்கள்.

இந்த சடங்குகளைச் செய்யாவிட்டால் நான் சநாதன தர்மத்தில் இல்லாது போய் விடுவேனா என்ற கேள்வியும் பலமுறை எழுகிறது.

இல்லை என்பதே அதற்கு விடை.

ஆனால், அதுவே இந்த தர்மத்தின் பலமாகவும் பலவீனமாகவும் அமைகிறது. அவற்றைப் பின்பற்றவேண்டும் என்ற அவா இருந்தாலும் கால தேச காரணங்களால் அது முடியாமல் போனலும், சநாதன தர்மம் அவனை ஒதுக்கிவைப்பதில்லை. எப்போது முடியுமோ? அப்போது மீண்டும் நேர்வழியில் வந்து சேர்ந்து கொள்ளலாம். இது ஒரு கருணையோடு சொல்லப் பட்டாலும், அதை ஒரு சாக்காக வைத்து எதையும் செய்யாமல் விடுபவர் பலர் இருப்பதால் அந்த தர்மத்தின் அடையாளமே சிதையத் துவங்குகிறது.

விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புற ஒழுங்கு என்பவை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தேவையானவை. இன்றைய நவீன உலகில் இவை அதிகமாகின்றன. சீருடை, சாலை விதிகள், அனுமதி கட்டுப் பாடுகள் என்று இவை கூடி வருகின்றன. ஆனால் இவை எல்லாம் புற மற்றும் உலகியல் வாழ்க்கை சார்ந்ததால் வேகமாக மாறுகின்றன. மனிதப் பிறப்பின் உயரிய குறிக்கோள் என்பதைச் சார்ந்து இருப்பதால் சநாதனத்தின் விதிமுறைகள் பெரும்பாலும் மாறாமல் இன்றும் பின்பற்றக் கூடியனவாக இருக்கின்றன.

இந்தச் சடங்குகளை எல்லாம் முற்றிலும் விட்டுவிட்டால் சநாதன தர்மம் என்னவாகும்?

அவற்றின் இடத்தில் வேறு சடங்குகள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இவ்வித விதிமுறைகள் இல்லாத சமுதாயம் குலைந்து விடும். அதை நாம் இன்று உலகில் பல இடங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். நல்ல உணவை உண்ண வேண்டும். அதை நான் வெறுத்து ஒதுக்கி வைத்தால் அதற்கு பதிலாக ஏதோ ஒரு உணவை உண்டே ஆக வேண்டும். அது ஏற்புடையதாக இல்லாவிட்டால், எனக்கு நோய் வந்து அவதிப்படுவேன்.

அதேபோல்தான் சநாதன தர்மமும்.

நல்லதைச் சொல்லும் அதை ஒதுக்கி வைத்தால் அவதிப்பட்டு மீண்டும் அதனையே ஏற்கும் நிலையே வரும்.

நிற்க.

முதல் இரண்டு தொகுப்பும் மதம் சாராதது என்று பார்த்தோம்.

அப்படியானால், மூன்றாவது தொகுப்பு என்ன?

அதுதான் வேதாந்தம் சார்ந்தது.

நான் யார்?, எனது பிறப்பின் காரணம் என்ன?, இந்த வாழ்க்கையின் இலக்கு என்ன என்ற கேள்விகள் மனதில் எழுந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும் ஒருவனுக்கு

அந்த கேள்விகளுக்கு விடையைத் தேடும் வழிகளைத் தருவது இந்த மூன்றாவது தொகுப்பு.

எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்பவர்க்கும் கூட முதலிரண்டு தொகுப்பு பயனுள்ளதாகவே இருக்கிறது. மொத்தத்தில் 85 சதவீதம் இந்த இரண்டு தொகுப்பில் உள்ளன. மீதமுள்ள 15 எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் முதல் இரண்டு தொகுப்புகளையும் வெறுப்பது ஒரு சமுதாயத்திற்கு ஏற்படும் பெரும் நஷ்டம் என்றே சொல்லலாம். அதிலும் பல கோடி வருடங்கள் பழமையான, இன்றும் உயிரோட்டத்தோடு இருக்கும் கலாசாரத்தின் அடையாளமாக, அடிப்படையாக இருப்பதை ஒருவித கண்மூடித்தனமாக வெறுப்பது வேதனைக்குரியது. அவற்றில் பலவற்றை அயல் நாடுகளும் அயல் கலாசாரங்களும் தம்முள் ஏற்று பயன்பெறுவதைக் கண்டும் நாம் அவற்றை வெறுப்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

சநாதன தர்மத்தின் அடித்தளம் சுய கட்டுப்பாடு (self-control).

அதைப் பலர் சுய மறுப்பு (self-denial) என்று தவறாகப் புரிந்து கொள்வதாலும் இந்த தர்மத்தின்மீது வெறுப்பு வருகிறது.

இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு ஒரு மெல்லிய கோடு என்றாலும் அந்த கோடு மிகத் தெளிவாக இருக்கிறது.

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற இந்த ஐம்புலன்களின் சுகத்திற்காக, அவைமூலம் மனம் அடையும் இன்பத்திற்காக நாம் பலவற்றில் ஈடுபடுகிறோம். அந்த சுகமோ இன்பமோ நிலைப்பதில்லை என்பதையும் அறிகிறோம்.

ஆனால், அதற்காக நாம் ஈடுபடும் எண்ணம், சொல், செயல் என்பவை நமக்கு நிலையான ஒரு கஷ்டத்தை சேதத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க உணரத் தவறி விடுகிறோம். இவ்விதம் கஷ்டத்தையும் சேதத்தையும் தரும் சுகங்களைத் தவிர்ப்பதே சுய கட்டுப்பாடு.

சராசரி வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறையுள், உற்றார், அறிவு என்பதைத் துறப்பது சுய மறுப்பு. அதைச் செய்ய சநாதன தர்மம் சொல்லவில்லை. துறவறம் மேற்கொண்டு அதில் உறுதியாக நிற்பவர்கள் தமது தேவைகளைப் படிப் படியாகக் குறைத்துக் கொள்வதால் அவர்கள் என்றும் அவர்களது நிலையில் சுய கட்டுப் பாட்டில் இருப்பார்கள். ஆனால் அவர்களைப் பார்க்கும் நமக்கு அது சுய மறுப்பாகத் தோன்றும். இந்த குழப்பத்திலிருந்து வெளிவந்தால் உண்மை நிலை புரியும்.

உணவு, உறக்கம், அச்சம், உடலுறவு (இவற்றிற்கான இடம்) என்ற இவை எல்லா உயிரினங்களுக்கும் பொது. இதைத் தாண்டி நான் யார் என்ற கேள்வியைக் கேட்டு அதற்கான விடையை அறிய முயல்வது மனிதன் மட்டுமே. அந்த முயற்சியில் இறங்கா விட்டால், அவன் மனிதன் என்ற சிறப்பைப் பெறுவதில்லை என்று தர்ம சாத்திரம் சொல்லும். அந்த நிலைக்கு மனிதனை உயர்த்தும் பணியில் முதல் படியே சுய கட்டுப் பாடு.

பலவற்றையும் அதிகமாகப் பயன்படுத்துவதே நாகரீகம் என்ற தற்கால மனப்போக்கு பற்பல சிக்கல்களுக்குக் காரணமாகிறது. எல்லாவரும், ஓரளவாவது, நடுத்தர வயதைத் தாண்டிய பின்பாவது இந்த சுய கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் அது அவர்களுக்கும், அவர்கள் வாழும் சமூகத்திற்கும் பல வித நன்மைகளைப் பயக்கும்.

அப்படியானால், எல்லாரும் நல்ல வாழ்க்கையைத் துறந்து தினமும் பல இன்னல்களை அனுபவித்து சன்னியாசக வாழவேண்டும் என்பதுதான் சநாதன தர்மத்தின் கோட்பாடா?

இந்த கேள்வி எல்லார் மனதிலும் பலர் வாயிலும் எழுகிறது.

இல்லை என்பதுதான் தெளிவான பதில்.

இந்த கேள்விக்கு நேரடியாக ஆணித்தரமாக ஒரு சீரிய கோட்பாட்டுடன் விடையைத் தருகிறது ஒரு உபனிடதச் செய்யுள். அது என்ன என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.