“மாம், உங்க பிடிவாதத்துக்கான காரணம் இன்னைக்கு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்”.
அபிநயா தன் தாயைப் பிடித்து இழுத்து அருகில் இருந்த சோபாவில் அமர்த்தினாள்.
“அம்மா ன்னு அழகாக கூப்பிடலாம் தானே அபிக்குட்டி”
அன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மகளுக்காக சற்று நேரம் ஒதுக்கத் துணிந்தாள் மீரா.
அவள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகவும், கணவர் தினகரன் அதே கல்லூரியில் வேதியியல் துறையின் எச்.ஓ.டி(HOD) ஆகவும் பணியாற்றி வந்தனர்.
அவர்களது ஒரே மகள் அபிநயா அந்த ஊரில புகழ்பெற்ற இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
“நீங்க வீட்ல தமிழ்லதான் பேசணும்ங்கிறீங்க ஆனா, ஸ்கூல்ல எங்க மிஸ் சொல்றாங்க, வீட்லயும் நீங்க இங்கிலீஷ்ல பேசினாத்தான் உங்க ஸ்போக்கன் இங்கிலீஷ் நல்லா டெவலப் ஆகும்னு”
“அப்படியெல்லாம் இல்ல அபிக்கண்ணு வீட்லயும் எப்பப்பாரு இங்கிலிஷ்லேயே பேசிட்டிருந்தா நம்ம தாய் மொழிய பேசறதுக்கான
சந்தர்ப்பம் விட்டே போயிடுமேம்மா. நீ தமிழ்ல பேசிப் பழகணும்னு தானே விரும்புறோம். உன்னைய ஒண்ணும் தூய தமிழ்லதான் பேசணும்னு கட்டாயப்படுத்தலையே”.
“இப்பத் தமிழ நல்லாக் கத்துக்கிட்டு நா என்ன சாதிக்கப் போறேன் சுத்த வேஸ்ட்”, அலுத்துக் கொண்டாள் அபிநயா.
“அபி அப்படியெல்லாம் பேசக் கூடாது” கண்டிப்புடன் கூறிய மீரா, “உனக்கு இந்த அம்மாவப் பிடிக்குமா, பிடிக்காதா?
“இது என்ன கேள்வி “மாம் அம்மாவ யாருக்காவது பிடிக்காத போகுமா என்ன? ‘ஐ லவ் யூ மாம்”தாயைப் பிரியத்துடன் கட்டிக் கொண்டாள் அபி.
“டாப்பிக்க மாத்தாதீங்க அம்மாவப் பிடிக்கறதுக்கும், தமிழ்ல பேசறதுக்கும் என்ன சம்பந்தம்?”
"நா டாப்பிக்லாம் மாத்தல அபி. இந்தப் பிரபஞ்சத்துல எல்லாமே ‘தாய்’ங்கிற சக்திய ஆதாரமா வச்சுதான் தொடங்கி இயங்குது. தாய்நாட்டு மேலயும், தாய்மொழி மேலயும் பற்று இல்லாம ஒதுக்கமோ, வெறுப்போ காமிக்கிறது தாயை வெறுக்கறதுக்கு சமானம்”. சற்றே நிறுத்தினாள் மீரா.
அபிநயாவின் விழிகள் சற்றே கலங்கின. சிறு கேவலுடன் தொடர்ந்து பேசினாள். "நிறுத்துங்க மாம், அப்படியெல்லாம் சொல்லாதீங்க. சரி உங்க வழிக்கே வர்றேன், இவ்ளோ பேசற நீங்க என்னைய ஒரு தமிழ் வழிப்பள்ளியிலேயே சேர்த்திருக்கலாமே எதுக்காக இண்டர்நேஷனல் ஸ்கூல்?
“இதுக்கான பதில நா சொல்றேன் அபிக்குட்டி!”
இவ்வளவு நேரம் தாய், மகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட தினகரன் மகளுக்கு பதில் சொல்ல முன் வந்தார்.
உன்னோட வயசுக்கு இந்தக் கேள்வி நியாயமானதுதான். நானும் அம்மாவும் ஏன் உன்ன இண்டர்நேஷனல் ஸ்கூல்ல சேர்த்திருக்கோம் தெரியுமா? எங்க அபிக்குட்டிக்கு எல்லாமே பெஸ்ட்டா கெடைக்கணும்கிறதுக்காக மட்டுமில்லே, உனக்குள் ஒரு பன்முகத்துறை சார்ந்த ஆளுமை வரணும்கிறதுக்காகத்தான் .
நீயே வளர வளர புரிஞ்சுக்குவ கண்ணு, அபியின் கண்களைத் துடைத்து உச்சி முகர்ந்து தேற்றினார் தினகரன்.
கணவர் பேசி முடித்த இடைவெளியில் தொடர்ந்தாள் மீரா.
“தமிழ் இல்லாம இந்தி மொழிய செக்கண்ட் லாங்குவேஜா தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தையும் நீ கேக்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன்.
“தாய்மொழி தாண்டி, நீ பிற மொழிகளைக் கத்துக்கணும்னு இருந்த ஆர்வத்துலதான். எனக்கும் அப்பாவுக்கும் இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகள் தெரியும். உனக்கு விருப்பமிருந்தா எதிர்காலத்துல அதையும் கத்துத்தருவோம். எதையும் உம்மேல திணிக்க
மாட்டோம்மா”, சற்றே தெளிவற்ற மனநிலையில் இருந்த மகளை அணைத்துத் தேற்றி காலை உணவு உண்ண வைத்தாள்.
மதிய உணவு முடித்து ஓய்வாக இருக்கும் வேளையில் மறுபடி ஆரம்பித்தாள் அபி.
“நீயும், டாடியும் சொல்றது ஓரளவு புரியது மாம். நீங்க சொல்ற மாதிரி மீதி மொழிலல்லாம் நல்லாக் கத்துக்கிட்டு பெரியாளாயிட்டுப் போறேன். எதுக்கு தமிழப் பிடிச்சிட்டுத் தொங்கணும்”.
இன்னும் மகள் தெளியவில்லை என்பதை உணர்ந்தாள் மீரா.
“பிறமொழிகளுக்கான தேடல் நம்ம தாய் மொழியிலேயிருந்து
தொடங்கினாத்தான் சரியான புரிதல் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் அவரவர் தாய் மொழிங்கறது, கட்டிடத்துக்கான அஸ்திவாரம் மாதிரிம்மா”.
“’தமில் வால்க’ ன்னு மொழியைப் பிழையோட கோஷம் போடுற அரை
வேக்காடுங்களுக்கு மத்தியிலே ஒரு மொழிய செழிக்கச் செய்யறது உங்கள மாதிரி மாணவர்கள் கையிலத்தான் இருக்கு” சற்றே தளர்ச்சியுடன் நிறுத்தினாள் மீரா.
“ஒன் படிப்பு ஒனக்குப் பல நாடுகளுக்கு பயணப்படற, வசிக்கிற வாய்ப்பக்கொடுக்கலாம். நாம எங்கயும் வசிக்கலாம் நம்ம வேர்கள் நாம் பிறந்த மண்ணுலதாங்கறது ஒன் மனசுல கொஞ்ச கொஞ்சமா பதிக்க முயற்சி செய் அபி”, மீரா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் தினகரன்.
“நானும் அம்மாவும் எப்பவுமே ஒனக்கு பக்கபலமா இருப்போம்”.
ஒருபுறம் மனைவியின் விழிகளில் தெரிந்த தவிப்பு, மறு புறமோ தலைமுறை இடைவெளியில் சிக்கித் தவிக்கும் மகளின் நிலை. தினகரனின் மனம் தன்னிச்சையாக தனக்கும் மனைவிக்கும் முன்பொரு சந்தர்ப்பத்தில் நடந்த இதே மொழிப் பிரச்சினை சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களை நினைவு கூர்ந்தது.
“எங்கப்பா பல மாநிலங்கள்ளயும் வேல பார்த்திருக்கிறார். கடைசியா நம்ம தமிழ்நாட்டில வந்து செட்டிலானோம். எனக்கு தமிழ்னா உயிரு. ஆனால் இங்க வந்த கொஞ்ச நாள்ள நா புரிஞ்சுகிட்டது என்னன்னா தமிழ் நல்லா தெரிஞ்சவங்கிட்ட கூட இங்கிலீஷ்ல பேசறதுதான் பெருமைன்னு நெனைக்கிறாங்க இங்க”.
மீராவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாயிருந்தான் தினகரன்.
“மத்த மாநிலங்களைச் சேர்ந்தவங்க அடுத்தவங்களுக்குப் புரியுதோ புரியலையோ நெருக்கடியான சூழ்நிலைல கூட அவங்க தாய்மொழில தான் பேசறாங்க, பாஷைங்கிறது, மணுஷங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சி பறிமாறிக்கத்தான். இதுல எதுக்கு வறட்டு கெளரவம்”.
“உங்ககிட்ட என்னோட எதிர்பார்ப்பெல்லாம் அவங்கவங்க வேல பாக்கற எடத்துல வேற மொழி பேசற கட்டாயத்துல நாம இருந்தாலும் நம்ம குடும்பத்துக்கான பிரத்யேக நேரத்துல நாம தமிழ்ல பேசணும்கறதுதான், நெறையப் பேசிட்டேன் தப்பா இருந்தா மன்னிச்சிருங்க”.
“இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மீரா, அதிக நேரம் இங்கிலீஷ்ல பேசற சூழ்நிலை எப்போ பேசினாலும் தன்னியல்பா வந்துடுது. எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு மாத்திக்கிறேன்”.
தன் உணர்வுக்கு மீண்டான் தினகரன்.
இரவு உணவு சாப்பிடாமலேயே படுக்கச் செல்ல எத்தனித்த மனைவியைப் பிடித்து இழுத்து வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.
“நா டேபிள் சுத்தம் பண்ணிட்டு வர்றேன் நீ போய்ப்படு”.
படுக்காமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்த மனைவியை இதமாக அணைத்தான்.
“புரிஞ்சிக்கோடா! காலம் மாறிட்டே வர்றது அபிக்குட்டி அடுத்த ஜெனரேஷன், அவ வாழற சூழ்நிலை முற்றிலும் வேற. இந்த நிமிஷம் சொல்லி அடுத்த நிமிஷம் அவகிட்ட எந்த மாற்றத்தயும் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். கட்டாயம் நீ நெனக்கிற மாதிரியே 100% மாற்றம் வராட்டியும் நிச்சயம் அபிகிட்ட ஓரளவு நல்ல மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எதையும் போட்டுக் குழப்பிக்காம தூங்கும்மா...”
“அன்று நான்! இன்று மகள்! தணிப்போமா மீராவின் தாய் மொழித் தாகத்தை, நானும் அபியும்”.
மறுநாள் பள்ளியிலிருந்து மிகுந்த உற்சாகத்துடன் ஓடி வந்த அபிநயா ‘அம்மா’ என்ற அழைப்புடன் மீராவைக் கட்டிக் கொண்டாள்.
என்னடா அபிக்குட்டி ரொம்ப ஹாப்பியா இருக்க போல, அருகிலிருந்த தினகரன் வினவினான்.
“ஆமாம்பா” என்ற அபி, இருவரையும் அருகில் இருந்த சோபாவில் அமர்த்திவிட்டுத் தானும் நடுவில் உட்கார்ந்தாள்.
“அம்மா! ஸ்கூல்ல என்னோட பேவரைட் ராதா மிஸ்கிட்ட நேத்து நீங்க பேசினதையெல்லாம் சொல்லி, எனக்கு குழப்பமா இருக்கு மிஸ்னு சொன்னேன்”.
என்னைத் தட்டிக்கொடுத்து,
“’வெரி இன்ட்ரெஸ்ட்டிங். இந்தக் காலத்துல இப்படி ஒரு லேடியா!, நா கண்டிப்பா அவங்கள ஒரு நாள் மீட் பண்ணனும் அபி, அப்புறம் நீ, இப்ப எதையும் போட்டுக் குழப்பிக்காதே, அம்மா உன்னைய சரியாகத்தான் வழி நடத்துறாங்கன்னு போகப் போகப் புரிஞ்சிப்பே. கோ அஹெட் அன்ட் என்ஜாய் லைஃப் மா’ அப்படின்னு சொன்னாங்க. இப்ப கொஞ்சம் குழப்பம் தீர்ந்த மாதிரி இருக்கும்மா”.
‘அம்மா’ என்ற அழைப்பில் நனைந்த மீரா மகளை வாரி அணைத்து முத்தமிட்டாள். மனைவியின் கனவு நிறைவேறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்ந்த தினகரனின் மனத்திலும் ஒரு இதமான சுகம் பரவியது.
அபிநயா என்னும் விழுதைத் தாங்கும் தினகரன் மீரா ஒருவரையொருவர் நோக்கி அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
Leave a comment
Upload