"இன்னைக்கு உங்க அப்பா வரார்" என்ற ரவியை பதில் சொல்லாமல் பார்த்தாள் சித்ரா. " எதுக்கு வரார்?"
“உன்னை பார்த்துட்டு போலாம்னு"
"என்னைய எதுக்குப் பாக்கணும்?" சித்ரா.
" எதோ வேலையா இங்க வந்தாராம். உன்னைப் பாக்கலாம்னு வரார். இப்பத்தான் போன் செஞ்சார். அம்மா வரலையாம்."
" என்னை பார்த்து என்னாகனும்?”
“என்ன இப்படிக் கேக்கற?”
“எங்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்தவர் தானே? இப்ப என்ன புது அக்கறை?" சித்ராவின் பதில் .
" எனக்குப் பார்க்க விருப்பமில்லை. நான் வீட்டில் இல்லைன்னு சொல்லிடுங்க"
" எங்கே போயிருக்கேன்னு கேட்டா?"
"எதையானும் சொல்லிச் சமாளிங்க. எனக்கு அவரைப் பாக்க விருப்பமில்லை"
ரவி அவளைக் கனிவுடன் பார்த்தான். அவள் மனதிற்குள் இருக்கும் ஆசைகள், ஆதங்கம் எல்லாமே அவனுக்குப் புரிந்தது.
சித்ராவின் அப்பாக்கு சரியான வேலை இல்லை. எந்த வேலைக்கும் ஒழுங்காகச் சென்றது கிடையாது. அப்படியே சென்றாலும் அதை பாதியில் விட்டுவிட்டு வந்து விடுவார். பொறுப்பில்லாத தகப்பன் என்று சித்ராவுக்கு, அவள் அக்கா, உறவுகளின் எண்ணம்
சித்ராவினுடைய அக்கா ஒரு இடத்தில் வேலை பார்த்து அங்கு இருந்தவனையே திருமணம் செய்து கொண்டாள். அவளும் அவள் கணவரும் சேர்ந்துதான் சித்ராவுக்கு ரவியை மணமுடித்து வைத்தார்கள்.
"ஒவ்வொரு வீட்டில் அப்பா எவ்வளவு பொறுமையா அன்பா தன் குழந்தைகள் நல்லா வரணும் அப்படின்னு நினைச்சு எவ்வளவு பண்றாங்க. எங்க அப்பா எங்களை கண்டுகொண்டதே கிடையாது. என்ன படிக்கிற? என்ன மார்க்கு ? எதுவும் கேட்டது கிடையாது. கல்யாணமே கூட அக்கம் பக்கம் இருப்பவர்கள் மற்ற உறவினர்கள் பார்த்து செய்து வைத்தார்கள்."- பொறுமினாள் சித்ரா.
அவருக்கு நிரந்தர வேலை இல்லை என்பதால் அவ்வப்போது எதானும் சின்ன சின்ன வேலைகள் செய்து அந்த பணத்தை கொண்டு வந்து அம்மாவிடம் தருவார். அம்மா கட்டும் செட்டுமாக வாழ்ந்து இரண்டு பெண்களுக்கு திருமணம் முடித்து விட்டார். இனி மூன்றாவதாக ஒரு பெண் இருக்கிறாள். அவள் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், சித்ராவும் அவள் அக்காவும் சேர்ந்து அவளுக்கு உதவுகிறார்கள்.
சித்ராவுக்கு திருமணம் ஆகி மூன்று மாதம்தான் ஆகிறது. தாலி மட்டுமே போட்டு, கோவிலில் திருமணம். தாலி கூட உறவுகள், நட்பர்களிடம் வசூல் செய்துதான் நடந்தது. எந்த ஒரு பொறுப்பும் இல்லாத அப்பா எதற்காக இன்று தன் வீட்டுக்கு வர வேண்டும்? சித்ராவுக்குள் கேள்வி எழும்பியது.
"நான் அவரை பார்க்கவே விரும்பவில்லை"
" இருக்கட்டும், வீடு தேடி வரவரை வராதே என்று எப்படி சொல்ல முடியும்?"
" சொல்லணும்" சீறினாள் சித்ரா. "எங்களுக்குன்னு ஒரு துரும்ப எடுத்து போட்டு இருக்காரா? எல்லாமே செஞ்சது எங்க அம்மா தான்."
" சரி உங்க அம்மாவுக்கு எப்படி பணம் கிடைத்தது?
ரவியின் கேள்விக்குப் பதில் தெரியவில்லை சித்ராவிற்கு.
“புரியலை”
"அவங்க வெளியில போகல. சமையல், டைலரிங் எந்த வேலையும் செய்யல. இன்னும் உங்களைப் படிக்க வைக்க, திருமணம் செய்ய அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?" என்று கேட்டான் ரவி.
சித்ரா பதில் சொல்லவில்லை. சிந்தனையில் ஆழ்ந்தாள்.
"ஒரு பெண் குழந்தையை வளர்ப்பது என்பது மிகப் பெரிய விஷயம். அதுவும் மூன்று பெண்கள், அவர்களுக்குச் சாப்பாடு, துணி, படிப்பு என்று எத்தனை விஷயங்கள் இருந்திருக்கிறது? இதையெல்லாம் அம்மா எப்படி செய்தார்கள்?"
" அப்பா ஏதோ அப்பப்போ சம்பாதித்து கொண்டு வந்து கொடுப்பார்"
" கரெக்ட் அவர் தானே உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்? அம்மா அந்த பணத்தை கட்டும் செட்டுமாக வைத்து உங்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து செய்திருக்கிறார்கள். அம்மா என்றாலும் அவரின் பின்னிருந்து இயக்கியது அப்பாதானே.! பொறுப்பில்லாத தகப்பன் என்றால் உங்கள் மூன்று பேருக்கும் ஏதோ ஒரு நல்லது செய்ய வேண்டும் என்பதை நினைக்காமல், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் எங்கு வேண்டுமானாலும் போயிருக்கலாம். குடிக்கலாம், சீட்டாடலாம். தப்பு வழியில் போயிருக்கலாம். ஆனால் இது எதையுமே அவர் செய்யவில்லையே!
அவரால் முடியவில்லை. படிப்பு இல்லை. எனவே ஒவ்வொரு இடத்திலும் வேலை பார்த்து வர்ற பணத்தை உங்க அம்மா கையில் கொடுத்திருக்கிறார். அவருக்குள்ளும், அன்பும், பிரியமும், பாசமும் இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய சூழ்நிலை அதை வெளிப்படுத்த முடியவில்லை."
அவன் முகத்தையே பார்த்து யோசித்தாள் சித்ரா. ஆம் என்றது மனசு. தங்களுடைய ஆசைகளை அம்மாவிடம் தான் கூறுவார்கள். இரண்டு நாள் இல்லை, ஒரு வாரத்திலேயே அந்த ஆசையை நிறைவேற்றி விடுவாள் அம்மா. ஆனால் அப்பா காசு கொடுத்து தான் இதையெல்லாம் செய்தாள் என்று ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை இவர்கள்
"அப்பாங்கறவர் வேலைக்கு போயிட்டு வரணும். சம்பாதித்து கொண்டு வந்து உங்களுக்கு வேண்டியது எல்லாம் தர வேண்டும், டிவி விளம்பரத்துல வர மாதிரி நகையா வாங்கி உங்களுக்கு பூட்டணும் என்ற நோக்கில் தான் நீங்கள் பார்த்தீர்களே தவிர, அவருடைய சூழ்நிலையில், அவருக்கு முடியாத நிலையில் ஏதோ ஒரு வேலை செய்து உங்கள் அம்மாவிடம் கொடுத்து உங்களை எல்லாம் வளர்த்து இருக்கிறார்கள் இல்லையா? பசின்னு பட்டினி கிடந்தது இல்லை நீங்கள். பசி அவருக்குத் தெரியும். ஆனா உங்களுக்குத் தெரியாம பாத்துகிட்டார்ல. அந்த அஸ்திவாரம் அவர் என்பதை ஏன் மறந்தீர்கள்?" ரவி
"அம்மா, அம்மா என்று நீங்கள் அவளிடம் ஒன்றும் போதெல்லாம் அவர் மனதுக்குள்ளும் ஏக்கம் இருந்திருக்கும். குழந்தைகள் நம்மை விரும்பவில்லை என்ற ஆதங்கமும் இருந்திருக்கும். ஆனால் அது அத்தனையும் கடந்து நீங்கள் தன் குழந்தைகள், உங்களை நலமாக வாழ வைக்க வேண்டும் என்று எண்ணம் மட்டும்தான், அவரிடம் இருக்கிறது இதை ஏன் நீங்கள் நினைக்கவில்லை.?"
—--__—---_—-----
"குழந்தைகள் அம்மாவை தான் நினைக்கிறார்களே தவிர தங்கள் மேல் சப்தம் இல்லாமல் அன்பு காட்டும் தந்தையின் போராட்டங்களை, மனதைப் புரிந்து கொள்வதில்லை."
தலை குனிந்தாள் சித்ரா
"சரி போகட்டும். அவர் எதுவும் செய்யவில்லை என்றாலும், தன் பெண். தான் போனால் வாப்பா என்று அன்பாக அழைப்பாள் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆசையில் நம்பிக்கையோடு கிளம்பி வருகிறார். அந்த நம்பிக்கையை நீ காப்பாற்ற வேண்டாமா?"
சித்ரா அமைதியாக இருந்தாள்.
"இப்போ வந்துடுவார் அப்பா. என்ன சொல்றே?"
"அப்பாவுக்கு எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு பிடிக்கும். அதைச் செய்யறேன். நீங்க வடையும், பழமும் வாங்கிட்டு வாங்க - சித்ரா
நிறைவாகப் புன்னகைத்தான் ரவி.
***************************
Leave a comment
Upload