இது ஒரு கதையா, நிஜமா ?!
இந்த குடியரசு தினத்துக்கு, கர்னல்!, நீங்க ராணுவத்தினரைப்பற்றிய கட்டுரை ஒண்ணு எழுதணும் என்று கேட்டுக் கொண்டேன்.
உடனே,
ஒரே வீட்டிலிருந்து மூன்று மிலிட்டரி ஜெனெரல்கள்
- இது ஒரு கதையா, நிஜமா ?
என்ற தலைப்பில் எழுதரேனே என்றார். சரி என்றேன்
இதோ அந்த கட்டுரை
……….பால்கி
சில வீடுகளில் ஒன்றுக்கும் அதிகமான டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள் என்றெல்லாம் இருப்பது சகஜம்.
ஆனால் ஒரே வீட்டிலிருந்து மூன்று உயர் தரவரிசை மிலிட்டரி அதிகாரிகள் என்றால்?
ஹூம் , கேட்டதில்லை என்கிறீர்களா?
இதோ இப்போது கேளுங்கள்! அதுவும் நமது தமிழ் நாட்டிலிருந்து……என்றால்
மேஜர் ஜெனரல் வெங்கட்ராமன் (மே.ஜெ.வெ), ரியர் அட்மிரல் (நேவி அல்லது கடற் படையில் மேஜர் ஜெனரல் ரேங்குக்கு சமம்) பாலசந்திரன், லெப்டினண்ட் ஜெனரல் ரவிசங்கர் (மேஜர் ஜெனரல் ரேங்குக்கு மேல் வரும் பதவி) - முதல்வர் தந்தை, மற்ற இருவர் மகன்கள். அப்பா, இரண்டாம் மகன் ரவிசங்கர் இருவரும் டாக்டர்கள்; பாலா என்று அழைக்கப்படும் பாலசந்திரன் ஒரு என்ஜினியர். மூவரும் எக்கச்சக்கமாக தத்தம் துறைகளில் அவார்டுகள் வாங்கியவர்கள்.
மேஜர் ஜெனரல் வெங்கட்ராமன் பேமிலி பற்றிய இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் அப்புறம். முதலில் திரு வெங்கட்ராமன் அவர்களை பற்றி பேசுவோம்.
[மேஜர் ஜெனரல் எஸ். வெங்கடராமன்]
மே.ஜெ.வெ பிறந்தது ஆந்திர பிரதேசம் கூடூரில். சென்னை மருத்துவ கல்லூரியில் படித்து MBBS பட்டம் வாங்கும் தருவாயில் இரண்டாம் உலக மகா யுத்தம் துவங்கியது. துளியும் தயங்காமல் எமெர்ஜென்சி கமிஷன் (அவசர ஆணையம்) வழியாக ஆர்மி மெடிக்கல் கோர் (Army Medical Corps) சேர்ந்துவிட்டார் - ரேங்க் ஏணியில் எல்லாவற்றிக்கும் கீழ் ரேங்கில். யுத்த களத்தில் தன் டாக்டர் பணிகளை உபயோகப்படுத்த கிரீஸ் (கிரேக்க நாடு, ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு) அனுப்பப்பட்டார். போர் முடிந்த பின்னர் மேல் படிப்புக்காக முயன்று, தன் ஆசை பட்டது போல் "மெடிசின்" ஸ்பெஷலிஸ்ட் செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே, அட்மினிஸ்ட்ரேஷன் (நிர்வாகம்) டிபார்ட்மெண்டில் சேர்ந்துவிட்டார்.
[மேஜர் ஜெனரல் எஸ். வெங்கடராமன்]
1965 , 1971 போர்களில் தன் திறமையை காட்டும் சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைத்தன. அதை அவர் தவற விடவில்லை என்பது குறிப்பிட தக்கது. J & K யில் (ஜம்மு காஷ்மீர்) டூட்டி செய்யும் போது ஒரு அண்டர்கரௌண்ட் (நிலத்தடி)
ஆபரேஷன் தியேட்டர் கட்டி, பல ராணுவ வீரர்களின் உயிர் காப்பாற்ற உதவினார். இதற்காக அவருக்கு இந்திய அரசு வி எஸ் எம் (VSM - விசிஷ்ட சேவா மெடல்) கொடுத்து கௌவுரவித்தது. இந்திய ராணுவப்படையின் கொள்முதல் (ப்ரோக்க்யூர்மென்ட்) நிர்வாகி ஆக அவர் பதவி வகுத்த போது ஏற்படுத்திய SOPs (ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் ப்ரொசீஜர்ஸ் - சீர்தர இயக்கச் செய்முறைகள்) இன்னமும் செயல்பாட்டில் உள்ளது என்றால் பாருங்களேன்.
தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி, சுய கட்டுப்பாடு எல்லாம் ஒன்று கூடி ஒருவரிடம் இருந்தால் அவரை யாரால் நிறுத்த முடியும்? ஒரு கேப்டன் ஆக ஆர்மியில் சேர்ந்தவர் படிப்படியாக முன்னேறி ஜெனரல் ஆகிவிட்டார்.
தன்னுடைய இரண்டு மகன்களும் தன்னைப்போல் இந்திய ராணுவத்தில் பணி புரியவேண்டும் என்பது ஜெனரல் வெங்கட்ராமன் குறிக்கோள்.
இருவரும் அப்படியே செய்தார்கள். அச்சமயத்தில் அவர்தம் மகன்கள் தன்னைப்போலவே உயர்ந்த பதவி அடைவார்கள் என்று நினைத்தாரா? நினைத்திருந்தால் மட்டும் அது நடக்குமா? அல்லது வெறும் கற்பனையாய் இருந்திருக்குமோ?
புலிக்கு பிறந்தது ....!
சிறு வயதிலிருந்தே பாலாவும், ரவியும் (கொஞ்சம் வளர்ந்த பிறகு ரேங்க் சேர்க்கிறேனே!) படு புத்திசாலிகள் என்பது தெரிந்தது. வெங்கட்ராமன் தம்பதியருக்கு இது மிகவும் மோட்டிவேஷனல் ஆக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலா என்ஜினீரிங்கும், ரவி மெடிக்கல் காலேஜும் சேர்ந்தார்கள்.
பாலா நேவியில் ஆஃபீசர் ஆக சேர்ந்தார். சேவை-இல் இருக்கும் போதே மும்பை (அந்த காலத்தில் பாம்பே) IIT -இல் MTech பட்டம் வாங்கினார். 1993 ம் வருடம் வந்த பெரு வெள்ளம் இன்னும் பலருக்கு ஞாபகம் இருக்கும். அதில் நமது மிலிட்டரி செய்த உதவிகள் மறந்திருக்கலாம். மேற்பட்ட ராணுவ வீரர்கள் ராப்பகலாய் பணி புரிந்தார்கள். (போலீஸ், NGOs மற்றும் தனி மனிதர்களும் மிகவும் உதவினார்கள் என்பது அறிந்ததே) அதில் நம் பாலாவும் ஒருவர் - ஒரு தலைமைத்துவ ரோல் ஏற்று, அசாத்தியமாக டூட்டி செய்து, முக்கியமாக ஒரு பெரிய சுத்திகரிப்பு நிலையம் (ரெபினேரி) ஒன்றை மூழ்கிப்போகாமல் காப்பாற்றி, அதற்கு வி எஸ் எம் (VSM ) பட்டம் கிட்டியது.
[ரியர் அட்மிரல் (நேவி அல்லது கடற் படையில் மேஜர் ஜெனரல் ரேங்குக்கு சமம்) பாலசந்திரன்]
வெங்கட்ராமன் தம்பதியர் சந்தோஷத்துக்கு சொல்ல வேண்டுமா? இதற்கு மேலும் இன்னும் அவார்டுகள் வரவிருந்தன! அடுத்து வந்த வருடங்களில் நமது பாலா தன் தந்தையைப்போல ரியர் அட்மிரல் (ஆர்மியில் மேஜர் ஜெனரல்) ரேங்குக்கு அதிபதி ஆனார்.
கூடவே நவ சேனா மெடல், AVSM (VSM ஐ விட ஒரு படி மேல் ) போன்ற விருதுகள் தானாக வந்தன. AVSM பற்றி ஒரு முக்கியமான தகவல் - ரியர் அட்மிரல் பாலாவுக்கு இதை வழங்கியது ராஷ்ட்ரபதி டாக்டர் அப்துல் கலாம் ஆவார்.
2013 இல் ரிட்டையர் ஆன பின்போ? மனுஷன் ரிலாக்ஸ் பண்ணினார் என்றா நினைக்கிறீர்களா? ஊகூம்! எப்போதும்போல டீச்சிங் அது இது என்று பிசி ஆக இருந்திருக்கிறார். Covid அட்டாக் வந்தது. ஒரு முறை அல்ல, இரு முறை! இரண்டாம் தரம் ஒரு மெகா பூஞ்சை தொற்று (fungal infection ) நானும் இருக்கிறேன் என்று தொற்றிக்கொண்டது.
தம்பி ரவியின் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி, தெய்வாதீனமாக உயிர் தப்பி பிழைத்தார் பாலா. வயது 70 தாண்டிவிட்டது. சரி, இப்போதாவது ரிலாக்ஸ் பண்ணுவாரா? சாரி, நமது நாட்டிற்காக இன்னும் பணி இருக்கிறதே? போன வாரம் (16 - 1 - 24 அன்று) ஒரு PhD வாங்கி இருக்கிறார் பாருமேன்! நமது பிரதமரின் ஆத்ம நிர்பர் முயற்சிக்கு ஒரு சமர்ப்பணம் இந்த பி ஹெச் டி. இதை பார்த்து மகிழ அப்பா அம்மா இல்லையே என்பதுதான் பெரிய குறை அவருக்கு.
இரண்டாம் புலிக்குட்டி !
இப்போது நாம் பார்க்கப்போவது ஜெனரல் வெங்கட்ராமன் தம்பதியரின் இரண்டாவது மகன் ரவி எனப்படும் ரவிசங்கர். இந்த புலிக்குட்டிக்கு அப்பா, அண்ணா இரண்டு பேரும் ரோல் மாடல் ஆக இருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரையும் விட ஒரு ஸ்டெப் மேலே போவது ஆச்சரியமான சமாச்சாரம் இல்லையே !
தன்னுடைய மற்ற உடன்பிறந்தவர்கள் போல் பல்வேறு ஸ்கூல்களில் படித்து, கடைசி மூன்று வருடங்கள் பிரபலமான தில்லி தமிழ் சங்கம் ஸ்கூல்-இல் படித்தார் ரவி. அந்த பள்ளிக்கூடத்தின் மகிமைக்கு ஏற்ப நுழைவு தேர்வு எழுத வேண்டிய அவசியமே இல்லாது தில்லியின் மௌலானா ஆசாத் மெடிக்கல் காலேஜில் சேர்ந்து விட்டார். சில பல தங்க மெடல்களை தன் வசமாக்கிவிட்டு, (இதில் டெல்லி யூனிவர்சிட்டி டாப்பர் இன் சர்ஜரி மெடல் மிகவும் ஸ்பெஷல்). தன் தந்தை விருப்பப்படி இவரும் ஆர்மி மெடிக்கல் கோர் சேர்ந்துவிட்டார். தனது கைவரிசையை காட்டி, இளம் பிராயத்திலேயே மஸ்கட்டுக்கு (அதாவது ஓமான் நாட்டிற்கு) மூன்று வருடம் இந்தியன் ஆர்மியின் பிரதிநிதியாக டூட்டி செய்தார்.
AFMC -இல் (இந்தியன் ராணுவத்தின் உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ கல்லூரி) மாஸ்டர் ஆப் சர்ஜரி (MS) பட்டம், அதன் பின் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பயிற்சி பெற்றார். சர்ஜனாக இருந்த போது, ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) ராணுவ ஹாஸ்பிடல், மற்றும் IPKF இல் இலங்கையில் டூட்டி செய்தார். இங்ஙனம் வார் சர்ஜரி அனுபவம் நிறைய கிடைத்தது. IPKF டூட்டி முடிந்து இந்தியா திரும்புகையில் ஒரு கப்பலில் ஆபரேஷன் தியேட்டர் ஏற்பாடு செய்து , நகரும் கப்பலில் பல காயமடைந்த சிப்பாய்களுக்கு சிகிச்சை செய்ததை மிகவும் அபூர்வமான அனுபவம் என்று கூறுகிறார் ரவி.
அது மட்டுமா? "ஸ்டார் அஹ்மத் " பெல்லோஷிப்பில் அமெரிக்காவில் போர்ட்லேண்ட் நகர ஹாஸ்பிடலில் பயிற்சி பெற வாய்ப்பும் கிட்டியது. அப்போதய லேப்பிடினண்ட் கர்னல் ரவிசங்கர் தான் முதல் முதலாக இந்தியன் ஆர்மியின் ஹார்ட் சர்ஜன்களில் இந்த கெளரவம் பெற்றார் என்பது பெருமைக்குரிய விஷயம். இது தவிர, ஆஸ்திரேலியா - பெர்த் திலும் சென்று மேம்பட்ட பயிற்சி ஏற்றுக்கொண்டு வரும் வாய்ப்பும் கிட்டியது. இதன் பலன்? சீக்கிரமே ரவிசங்கர் தில்லியிலும், பூனாவிலும் உள்ள ஹார்ட் சர்ஜரி டெபார்ட்மெண்டுகளில் தலைவராக நிர்வாகம் செய்ய சந்தர்ப்பம் பெற்றார். ஆர்மியின் மிகப்பெரிய டீச்சிங் ஹாஸ்பிடலான "கமாண்ட் ஹாஸ்பிடல் பூனா" வின் கமாண்டன்ட் ஆகவும் பதவி ஏற்றார் நமது ரவி.
[மனைவி உமாவுடன் லெ.ஜெ. ரவிஷங்கர்]
ராணுவத்தில் டாக்டர்கள் தம் தொழில் மட்டும் செய்தால் போதாது. எப்பவுமே நிர்வாக டூட்டியும் செய்ய தயாராக இருக்கவேண்டும். கமாண்ட் ஹாஸ்பிடல் பூனாவில் நிர்வாக பொறுப்பு அதிகமாகவே இருந்தாலும், ரவி தன் சர்ஜிக்கல் கைத்திறனை விடாது செய்து வந்தார். அத்துடன் கூடவே ஒரு புத்தம் புதிய ஹாஸ்பிடல் கட்டடத்தை துவக்கி வைக்கும் பாக்கியமும் அவருக்கு கிடைத்தது. இதனால் அவருக்கு பல விருதுகளும் வந்து சேர்ந்தன: VSM , COAS கமண்டேஷன், (ஆர்மி கமாண்டர் கமண்டேஷன்) போன்ற பல. இம்மாதிரி கணக்கில்லா ரெகார்டுகள் வாங்கிய ரவி, லெப்டினண்ட் ஜெனரல் ரேங்க் அடைந்து, ஆர்மி மெடிக்கல் கோர்-இன் சிகரத்தை தொட்டு விட்டார் என்று சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.
ராணுவத்திலிருந்து ரிட்டையர் ஆன பிறகு இப்போது மும்பை லீலாவதி ஹாஸ்பிடலின் தலைமை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் ரவி. அன்று போல் இன்றும் சர்ஜரி, நிர்வாகம் இரண்டும் மிக பொறுப்புடனும், திறமையுடனும், செய்து வருகிறார் நம் ராணுவ டாக்டர் லெப்டினண்ட் ஜெனரல் ரவிசங்கர்.
(தனியாக: முஹம்மத் ரபி போல் அனாயசமாக பாடவும் செய்கிறார் என்றால் பாருங்களேன்!)
இம்மாதிரியான குடும்பத்தில் பெண்கள் மட்டும் சாதாரணமாகவா இருப்பார்கள்?
மே.ஜெ. வேங்கடராமன் தம்பதியருக்கு இரண்டு பெண்களும் உண்டு. மன்னிக்கவும். இரண்டல்ல, நான்கு. பெற்றெடுத்தது இரண்டு, வரனாக கிட்டியது இரண்டு. இந்த அழகான, அபூர்வமான குடும்பத்தின் ஆபரணங்கள் இப்பெண்கள்.
மூத்த பெண் பாரதி. அமெரிக்கன் எம்பஸியில் பல காலம் நிர்வாக அதிகாரியாக இருந்திருக்கிறார். தான் ராணுவத்தில் சேரவில்லை என்றாலும், ராணுவத்தை தன்னிடம் சேர்த்துக்கொண்டாள் பாரதி. ஒரு விமானப்படை (Air Force ) அதிகாரியை மணந்துகொண்டாள். உன்னிப்பாக கவனித்தால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் புரியும். இந்த விவரிப்பு துவங்கும் சமயம் இதற்கு நான் "ஒரே வீட்டிலிருந்து மூன்று மிலிட்டரி ஜெனெரல்கள் " என்றுதானே சொன்னேன்? இப்போது அதை "ஒரே வீட்டிலிருந்து மூன்று ராணுவ பிரிவுகளிலும் அதிகாரிகள் " என்று பெருமையுடன் அழைக்கலாம் அல்லவா.
பாருங்களேன்
மேஜர் ஜெனரல் வெங்கட்ராமன், லெப்டினண்ட் ஜெனரல் ரவிசங்கர் இருவரும் காலாட்படையை சேர்ந்தவர்கள் ;
ரியர் அட்மிரல் பாலசந்திரன், கடற்படையில் இருந்தவர் ;
மாப்பிள்ளையோ விமானப்படையை சேர்ந்தவர்.
அதாவது, ஒரே வீட்டிலிருந்து ஆர்மி , நேவி ஏர் போர்ஸ் மூன்றிலும் பணி புரிந்திருக்கிறார்கள் ! இதைவிட அபூர்வமான ஒரு குடும்பம் பார்க்கக் கிடைக்குமா ? என்னை கேட்டால் ரொம்பவே சந்தேகம் தான்.
இரண்டாவது பெண் ஒரு டாக்டர். Dr ஜெயந்தி, MBBS , MD , DM. வெறும் சாதாரண டாக்டர் இல்லைங்காணும்! ஒரு மிக மதிப்பிற்குரிய ப்ரோபெஸர். தமிழ் நாட்டின் மிகப்பெரிய இரையகக் குடலியவியல் (புரியும்படி சொன்னால் காஸ்ட்ரோ என்டேரோலஜி ) நிபுணர்களின் ஒருவர். அவர் வாங்காத டிக்ரீ , வாங்காத அவார்ட் இல்லவே இல்லை என்று சொன்னால் னம்பித்தான் ஆகணும். சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது (lifetime achievement award ) வாங்கியிருக்கிறார். பிரபல லிவர் ட்ரான்ஸ்பிளான்ட் குழுவின் முக்கிய உறுப்பினர். (நானும் ஜெயந்தியும் ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்தோம் என்று சொல்லிக்கொள்வதில் அடியேனுக்கு மிகப்பெருமை)
பாலாவின் மனைவி ஒரு வங்கியாளர். ரவியின் மனைவி ஒரு இணையில்லா பரோபகாரி . வருடக்கணக்கில் சீனியர் நிர்வாகியாக பணி புரிந்து விட்டு, தற்பொழுது பல NGO க்களுக்கு தன்னார்வத் தொழிலாளியாக உதவி செய்கிறார்.
இப்பெண்களின் சிகரமாக இருந்தவர் மறைந்த சீதாலட்சுமி அம்மாள்.
எல்லாம் சேர்ந்து இது தமிழ் நாட்டுக்கே பெருமை தரும், கும்பிடத்தக்க குடும்பம் என்று சொன்னால் தப்பே இல்லை .
அட்டேண்ஷன்....ஜெய் ஹிந்த்.
Leave a comment
Upload