ஆங்கில புத்தாண்டு இரவில் அதிகமாக விபத்துகள் ஏற்படுவது நாம் காண்கிறோம் .குறிப்பாக மது அருந்தி விட்டு இரண்டு சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் இளைஞர்கள் விபத்தில் சிக்கி ,உயிர் இழப்பது நம் ஊரில் நடக்கிறது .
கொண்டாட்டம் என்றாலே மது அருந்துவது என்ற கலாச்சாரம் பெருகி விட்டது. அது விபத்துகளுக்கு காரணமாகி இருப்பதால் பெற்றோர் மிகுந்த பதட்டம், மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
எனவே, இந்த வார "மக்கள் அரங்க" விவாதப்பொருள் :
"புத்தாண்டு போன்ற கொண்டாட்ட இரவுகளில் அரசு மருத்துவமனை அவசரப்பிரிவில் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காக வருபவர் எண்ணிக்கை பெருகி வருகிறது .இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?"
இது குறித்து கருத்து சொல்ல நம் வாசகர்கள் இருவர் முன் வந்துள்ளனர் .
திரு ,தயாநிதி, சென்னை
ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு செல்லும் போது விட்டுச் சென்ற கலாச்சாரம் இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் . தமிழ் வருட பிறப்பு ,தெலுங்கு வருடப்பிறப்பு போன்ற நம் புத்தாண்டுகளுக்கு இந்த அளவு முக்கியத்துவம் இல்லை . மது , நடனம், ஆட்டம் , பாட்டம் என்று ஆங்கில புத்தாண்டில் இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள் நம் இளைஞர்கள் . நீண்ட தூர வேக பயணம். மூன்று பேர் ஒரே டூ வீலரில் பயணிப்பார்கள் .தடுமாறி விழுந்து அடிபடுகிறார்கள் .புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் அரசின் தடை சட்டங்களை மக்கள் மீறுகிறார்கள் . விளைவு விபத்தும் ,மரணமும் .
இதைத் தடுக்க அரசு, போக்குவரத்து காவல் துறை, காவல் துறை இரண்டும் மேலும் கட்டுப்பாடுகளை இறுக்க வேண்டும் . இரவு பத்து மணிக்கு மேல் எல்லா நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும். மீறி நடத்துபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . 144 தடை உத்தரவு போட்டு ,இரவில் வாகனத்தில் சுற்றுவோரை, அதிக வேகத்தில் செல்வோருக்கு அபராதம் மற்றும் தண்டனைகளை தர வேண்டும் .
குமரன் , பள்ளிகொண்டா
இது ஒரு சிந்திக்க வைக்கும் தலைப்பு . சாதாரணமாக புத்தாண்டு இரவுகளில் விபத்து அதிகமாக இருக்கிறது . நடுத்தர மற்றும் எளிய மக்கள் விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் வசதி உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள் .
ஆறுமாதம் முன்பே இது பற்றிய விழிப்புணர்வைத் தொடங்க வேண்டும் , மக்களுக்கு ஹெல்மட் அணிய வேண்டிய அவசியம் ,தலையில் அடிபட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி தொலைக்காட்சி விளம்பரம், குறும் படங்கள் வழியாக அறிவுறுத்த வேண்டும் .கொரோனா காலத்தில் போக்குவரத்து காவலர்கள் செய்த பணியை மீண்டும் புத்தாண்டு நேரங்களில் செய்ய வேண்டும். வாகனம் ஓட்டுவோரின் ஆவணங்களைப் பரிசோதித்த பின்பே வாகனத்தை ஓட்ட அனுமதி தர வேண்டும். பார்கள் ,ஓட்டல்களில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முன் அனுமதி தரும் முன் எல்லா கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.
அரசே மதுக்கடைகளை நடத்தும் போது , மது குடித்து வாகனம் ஓட்டி,விபத்தில் சிக்கி உயிர் விடுகையில் நாம் சொல்ல என்ன இருக்கிறது ? குடித்து விட்டு வண்டி ஓட்ட வேண்டாம், வீட்டிலேயே இருந்து கொள்வதுதான் பாதுகாப்பான வழி .அதற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் வழிகாட்டுவதுதான் சரியாக இருக்கும் "
நன்றி வாசக நண்பர்களே
இனி அடுத்த வார விவாதப் பொருள்
"ஆன்லைன் ஷாப்பிங் செய்வது வசதியா ?அவதியா ?
உங்கள் கருத்துக்களை எங்களுக்கு புகைப்படத்துடன் மெயிலில் அனுப்புங்கள்..அனுப்ப வேண்டிய மெயில் ஐடி vikatakavi.weekly@gmail.com
அடுத்த இதழில் வெளியிடுகிறோம்.
Leave a comment
Upload