நம் மனதை சுக்கு நூறாக்கி உடைக்கும் நிகழ்ச்சி இன்று நிகழ்ந்தது.
.தன் குயில் குரலால், நம்மை ஆற்றுப்படுத்திய 'மயில் போல பொண்ணு' பவதாரிணி மறைந்துப் போனார். இலங்கைக்குச் சிகிச்சைக்குச் சென்ற அவர் அங்கு இறந்தார் . "ராஜா" வீட்டு இளவரசி இம்மண்ணை வீட்டு மறைந்தார் .
பவதாரிணி ....
குழந்தைக் குரல் , கனிவு மிக்க கண்கள் , அமைதியான தோற்றம். இசைச் சக்கரவர்த்தியின் மகள் என்ற கர்வமோ , ஆணவமோ இல்லாத பெண். பார்க்கும் போதே நம் வீட்டு மகளைப் போன்ற ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் உருவம். எந்த இசை நிகழ்ச்சியிலும் ."பளபள " என்ற பகட்டான ஆடைகளை உடுத்தாமல், அவருக்குப் பொருந்தும் வகையில் நேர்த்தியாக உடுத்தும் அழகி. 47 வயதான போதும் ஒரு இளம் பெண்ணுக்குரிய தோற்றம் . அவர் இனி இல்லை என்னும் போதே நம் மனதில் ஒரு சோகம் கவ்விக் கொள்வதை உணர முடிகிறது.
பவதாரிணியின் இசைப்பயணம் 8 வயதிலேயே தொடங்கி விட்டது. 'மை டியர் குட்டிச் சாத்தான்' மலையாள திரைப்படத்துக்குக்காக அவர் பாடிய போது அவர் சின்னஞ்சிறு சிறுமி . அதன்பின் "அஞ்சலி அஞ்சலி" பாடல் கோரஸில் அவர் குரல் ஒலித்தது . மஸ்தானா மஸ்தானா பாடல் அவரது தனித்துவம் மிக்க குரலை தமிழ்த்திரைக்கு அறிமுகப்படுத்திய பாடல் என்றால் அது மிகையாகாது . காதலுக்கு மரியாதை படத்தின் என்னைத் தாலாட்ட வருவாளா பாடலில் வரும் "ல ல லா" ஹம்மிங் பவதாரிணியின் மென் குரலால் அப்பாடல் மேலும் அழகு பெற்று விளங்கியது .
அதே பாடலின் மற்றொரு வடிவமான "இது சங்கீத திருநாளோ? " இன்னும் ஒரு அழகான பாடல். காதலுக்கு மரியாதை படத்தின் கிளைமேக்ஸ் இன்றும் நம்மை கண் கலங்க வைக்கும். அப்போது இந்த துள்ளல் இசை பாடல் பவதாரிணி குரலில் ஒலிக்கையில் படம் நிறைவடையும். நாமும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அப்பாடலின் ஆனந்தத்தில் கரைவோம்.
2000 ஆம் ஆண்டின் திரைக்காவியமான "பாரதி " படத்தில் வரும் "மயில் போல பொண்ணு " பாட்டு பவதாரிணிக்கும் அப்பாடலை எழுதிய மு.மேத்தாவுக்கும் தேசிய விருதை வாங்கித் தந்தது, அந்த பாடல் காட்சியில் பாடிக் கொண்டு வரும் சிறுமி பவதாரிணி ஜாடையில் இருந்தததால், அந்த காட்சியில் பவதாரிணியே நடித்தது போல எனக்குத் தோன்றும் . என்ன ஒரு பாடல் அது. கவிதை வரியும் , இசையும் அவரது மயக்கும் குரலில் வேறு பரிமாணங்களைப் பெற்றது. மிக இளைய வயதில் தேசிய விருது பெற்ற பெருமைக்கு உரியவர் ஆனார்.
ஒளியிலே தெரிவது தேவதையா ? அழகி படப்பாடல் . மயில் போல பொண்ணு பாட்டில் சிறுமி அணியும் கொலுசின் சிணுங்கல் ஒலியாக வசீகரித்த குரல், இந்தப்பாடலில் ஒரு பக்குவப்பட்ட பெண்ணின் குரலாக மாயா ஜாலத்தை நிகழ்த்தும் . அடுத்தடுத்து இந்த இரு பாடல்களையும் கேட்டுப் பாருங்களேன். இரண்டுமே வெவ்வேறு ஜானர்கள் என்ற தோன்றுவது சரி, இரண்டுமே வெவ்வேறு குரல்கள் போல தோன்றும் .
நினைக்கும் போதே இன்னும் எத்தனை எத்தனையோ பாடல்கள் நினைவுக்கு வருகிறது . பிரண்ட்ஸ் படத்தின் "தென்றல் வரும் வழியில்' பாடலில் ஹரிஹரனுடன் ஒரு ஜலதரங்க கச்சேரி நடத்தி இருப்பார் . டைம் படத்தின் "தவிக்கிறேன் ,தவிக்கிறேன்" பாடலும் ஹரிஹரன் உடன் தான்.
இவரது அழகிய பாடல்களின் பட்டியல் ஒரு முடிவடையாத பட்டியல் .
பவதாரிணி இசை சூழ்ந்த இல்லத்தில் வாழ்ந்திருந்தார் .ஒரு நிகழ்ச்சியில் சொல்வது போல காலையிலே அவர் அம்மா ஜீவா மொசார்ட் போன்ற கலைஞர்களின் இசைத்தட்டைச் சுழல விடுவாராம் .அதைக் கேட்டுக் கொண்டே தயாராகி மூவரும் பள்ளிக்குச் செல்வார்களாம். வீட்டில் எந்நேரமும் இசையும் பாடலுமாக வளர்ந்த சூழலில், அவர் தவிர்க்க முடியாத பாடகியாக உருவெடுத்தது ஆச்சர்யமில்லை . அண்ணன்களுடன் அவர் பியானோ வகுப்புக்குச் சென்றார் .இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இளைய ராஜா மட்டுமல்ல ,பல இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியதுடன் , இசை அமைப்பாளராகவும் இருந்துள்ளார் . இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர் இவர் .
பவதாரிணியின் இழப்பு நம்மை நிலை குலைய வைக்கிறது .சுவர்ணலதா இளைய வயதில் இறந்துப் போனது நினைவுக்கு வருகிறது .இருவரும் தனித்துவம் மிக்க குரலால் , திரை இசையை ஆண்டவர்கள். இறவாத புகழ் கொண்ட பாடல்களைத் தந்து நம் சந்தோஷ தருணங்களில் உடன் நின்றவர்கள். துன்பத்தில் சோர்ந்த போது துணை நின்றவர்கள் .
பவதாரிணி என்றால் பூமாதேவி என்று பொருளாம் .பூமி போலவே பொறுமையும் ,அமைதியும் கொண்ட அப்பெண் இன்று இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும் ? நமக்கே இந்த இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாத போது இளையராஜா அவர்களுக்கும் உடன் பிறந்தோருக்கும் இது தாங்க முடியாத துயரம். அவர்கள் வணங்கும் தெய்வமும், வாழ்வில் கலந்திருக்கும் இசையும் அமைதி தர வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.
"ஒளியிலே தெரிவது நீ இல்லையா
உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா?
நெனவுக்கு தெரியலையா"
நீ இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது, பவதாரிணி .
நீ ஒளியில் தெரியும் தேவதைதான்! .
உன் குரலில் நாங்கள் கரைந்துப் போகிறோம் கண்ணீருடன்.
Leave a comment
Upload