தொடர்கள்
ஆன்மீகம்
கேட்ட வரத்தைத் தரும் வயலூர் முருகன் !! - ஆரூர் சுந்தரசேகர்.

Murugan of Vayalur gives the boon!!

'ஏழ்தலம் புகர் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா’ - அருணகிரிநாதர்.

வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்குச் சான்று.
“எண்ணினாலும் தரிசித்தாலும் எண்ணிலடங்காப் பேறுகளை அள்ளித்தரும் வயலூர் முருகப்பெருமானை முடிந்தவர்கள் நேரில் தரிசிக்க நலம் பெருகும். வளம் தழைக்கும்” - திருமுருக கிருபானந்த வாரியார்
திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் வயல்களும், சோலைகளும் சூழ்ந்த இடத்தில் வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
இங்குள்ள சுப்பிரமணிய சுவாமிக்குத் தனிப்பெருமை உண்டு. இத்தலம் முருகப் பெருமான் ஸ்தலமாக இருந்தாலும், மூலஸ்தானத்தில் ஆதிநாதர் ஆகிய பரமேஸ்வரனும், ஆதிநாயகி ஆகிய பார்வதியும் இருக்கிறார்கள். அவருக்குப் பின்புறமே முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். தந்தைக்குப் பிரணவ மந்திரத்தைப் போதித்தவர் என்றாலும், தந்தையை மாணவனாக ஆக்கிய தோஷப் பரிகாரத்திற்காகவும் அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காகவும் இந்த கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தன் தாய் தந்தையர் ஆகிய ஆதிநாதர், ஆதிநாயகியை முன்னதாக வணங்கிய பின்னர் தான் தன் பக்தர்களுக்கு முருகன் காட்சி தருகின்றார்.

ஸ்தல வரலாறு:
மன்னர்கள் மக்களுக்குக் காட்டு விலங்குகளால் துன்பம் ஏற்பட்டால் விலங்குகளை வேட்டையாடி மக்களைக் காப்பாற்றுவதை தங்கள் கடமையாகக் கொண்டிருந்தார்கள். சோழநாட்டு மன்னர் ஒருவரும் அவ்வாறு வேட்டையாடச் சென்று களைத்துப் போய்த் தாகம் எடுக்க, தனது தாகத்தைத் தணிக்க அங்குள்ள வயல்வெளிக்குச் சென்று கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த நினைத்தார். வயலில் ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருந்த அற்புதம் கண்டு வியப்புற்றார். அந்த கரும்பினை ஒடித்த போது கரும்பிலிருந்து உதிரம் கசியக் கண்டு அதிர்ச்சியுற்றார். கரும்பு பயிரிடப்பட்டிருந்த வயலைத் தோண்டிப் பார்த்த போது அதன் அடியில் சுயம்புலிங்கம் ஒன்று இருந்ததைக் கண்டார். கரும்பினைக் கண்ணுற்ற இடத்தில் அச்சிவலிங்கத்திற்கு ஆகம விதிகளின்படி ஒரு கோயிலைக் கட்டி, சிவலிங்கத்தை ஆதிநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்ததுடன், மூலவருக்குப் பொருத்தமாக ஆதிநாயகி என்ற பெயரில் அம்மன் சந்நிதி ஒன்றையும் பக்கத்திலேயே அமைத்தார். வயலிடையில் கண்ணுற்ற மூலவர் என்பதனால், வயலூர் என அவ்விடம் வழங்கப் பெறலாயிற்று. இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர்.
வயலூரில் முருகன் தன் வேலினால் தென்கிழக்கு மூலையில் சக்தி தீர்த்தத்தை உருவாக்கி வள்ளி, தெய்வானை ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாயகியையும் பூஜிப்பது வயலூரின் தனிச் சிறப்பு.
ராஜேந்திர சோழன், முதலாம் ராஜராஜ சோழன் முதலிய மன்னர்கள் வயலூர் முருகன் கோயிலுக்கு, நிலங்கள், பொன்பொருள், மற்றும் மானியம் வழங்கியது பற்றியும் கல்வெட்டுகளில் பதித்துள்ளனர். இக்கல்வெட்டுக்கள் இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரகத்தின் சுற்றுச்சுவரில் உள்ளன.

ஸ்தல சிறப்புகள்:
இங்குள்ள மூலவர் ஆதிநாதர் தம்மை வழிபட வருவோர் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் 'மறப்பிலிநாதர்' என்றும், அக்கினி பகவான் இங்குள்ள இறைவனைப் பூஜித்த காரணத்தால் அக்னீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். பொதுவாகத் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் தாயார் சந்நிதியைக் காண்பது அரிது. இங்கு ஆதிநாயகி அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கின்றார்.
முருகப் பெருமான் அருணகிரிநாதரை வயலூருக்கு "வாவென" அழைத்து திருப்புகழ் பாட அடி எடுத்துக்கொடுத்தது இத்திருத்தலம் தான். ஸ்ரீ அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இத்தலத்தின் சிறப்பினை 18 பாடல்களில் சிறப்பித்துள்ளார்.
இத்திருத்தலத்தில் கற்சுவர்களில் மற்றும் கல் தூண்களில் அமைக்கப்பெற்ற சிற்பங்கள் அனைத்தும் சோழமன்னர்களால் சிறப்பாக அமைக்கப்பெற்றுள்ளது.
சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூராக இருந்திருக்கிறது. வயலூரில் சித்தர்கள் தங்கி வழிபட்டதிற்குச் சான்றாகச் சித்தர் தோப்பு என்ற இடம் இன்றும் இப்பகுதியில் உள்ளது.
இங்குள்ள முருகன் ஒரு முகத்துடனும் நான்கு கரங்களுடனும் வள்ளி தெய்வானை சகிதமாக காட்சி அளிக்கின்றார், இங்கு மயில் வாகனம் தெய்வானையின் பக்கம் திரும்பி இருப்பது ஒரு சிறப்பு ஆகும்.

Murugan of Vayalur gives the boon!!

கோயில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய சிறு கோபுர வாயில் நுழைந்தவுடன் இடது புறத்தில் இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. அதற்குப் பிறகு ஐந்து நிலை இராஜ கோபுரம் வழியாகச் சென்றதும் கொடிமரத்தின் கீழ் உள்ள அழகிய சிறு விநாயகரை வணங்கி நேராக ஆதிநாதரைத் தரிசனம் செய்த பிறகு இடது புறத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க சதுரத்தாண்டவ நடராஜர் உற்சவ மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

' சதுரத்தாண்டவ நடராஜர் 'சிறப்பு:
இங்குள்ள நடராஜர் சந்நிதிக்குத் தனிச் சிறப்புண்டு. தில்லையில் நடனமாடும் உருவத்தினின்றும் வித்தியாசமாகக் காலைத் தூக்காமலேயே விரல்கள் நிலத்தில் தோய உள்ள நடராஜரைக் காணலாம். தாண்டவ மூர்த்தியின் காலடியில் முயலகன் இல்லை. சடாமுடி யில்லாமல் கிரீடம் அணிந்த சிரம் காணப்படுகிறது.
அடுத்து ஆதி நாயகி அம்மன் தரிசனம் தருகிறார். பிறகு பிரகாரத்தில் முதலில் பொய்யாக்கணபதி தரிசனம்.

பொய்யாக்கணபதி:
'கைத்தல நிறைகனி...' என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில் அருணகிரியார் குறிப்பிடும் நிறைகனி விளாம்பழத்தைக் குறிக்கும். ......... உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே என்று தம்மைப் பாடவைத்த பொய்யாக் கணபதியை நிறைந்த நெஞ்சோடு வாழ்த்துகின்றார் அருணகிரியார்.
பொய்யான வாழ்வின் மாயைகளை அகற்றித் தம்மை நாடி வருபவருக்கு மெய்ஞானம் அருளும் காரணத்தால் இங்கு வீற்றிருக்கும் கணபதியைப் பொய்யாக் கணபதி எனத் துதிக்கின்றனர். இங்குள்ள கணபதி தம்முடைய கையில் விளாங்கனி வைத்திருக்கிறார். விளாம்பழம் காயாக இருக்கும் போது தன் ஓட்டுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். நன்கு பழுத்து முதிர்ந்த பின் ஓட்டினின்றும் அகன்று விடும். பழத்தின் ஓடு போன்ற மனித உடல்சார்ந்த மாயை நீங்கும் என்ற பெறும் தத்துவத்தை விளக்கவே இவ்வாறு கணபதியின் கையில் விளாங்கனி தரப்பட்டுள்ளது. இவரிடம் எதை வேண்டினாலும் பொய்க்காது என்பது வாக்கு.

Murugan of Vayalur gives the boon


பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் முத்துக்குமார சுவாமியைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார்.
பொய்யாக் கணபதி சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதர் சந்நிதி அமைக்கப்பட்டு இருக்கிறது. எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதியில் ஸ்ரீ சூரியன். தனது தேவியர் சாயாதேவி மற்றும் உஷாதேவியுடன் மேற்கு நோக்கியும் மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கியும் உள்ளன. தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றதும் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் வேண்டி பூஜைகள் செய்வது சிறப்பானதாகும். மேலும் இத்தலத்தில் விஷ்ணுதுர்கை, சண்டிகேஸ்வரர் மூர்த்தங்களுக்குத் தனி சன்னதிகள் உள்ளன.
இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும்,

திருமுருக கிருபானந்த வாரியார் :

Murugan of Vayalur gives the boon!!

முருகனின் திருப்புகழ் பாடிய அருணகிரியாரையும், அவர் பாடிய திருப்புகழ்ப் பாடல்களை மக்களிடையே வெளிப்படுத்திய கிருபானந்த வாரியாரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. ''நாள்தோறும் நான் வழிபடும் வயலூர் முருகனைக் கும்பிட்டு என் உரையைத் தொடங்குகிறேன்'' என்று தம் சொற்பொழிவைத் தொடங்குவது வாரியாரின் வழக்கம். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். 1934ல் , கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்பு நாத சிவாச்சாரியார் அவருக்குச் சுவாமி தரிசனம் செய்து வைத்தார். முருகனைக் கண்ட மகிழ்ச்சியில் கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஐம்பது பைசாவைச் சிவாச்சாரியாரிடம் காணிக்கையாகக் கொடுத்தார். அன்றிரவில் கோயில் தருமகர்த்தாவின் கனவில் முருகன் தோன்றி, ' ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே.. அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா..' என்று கேட்டார் தருமகர்த்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை, மறுநாள் கோயிலுக்குச் சென்றபோது கிருபானந்தவாரியார் ஐம்பது காசு சிவாச்சாரியாரிடம் கொடுத்ததை அறிந்தார் . வாரியார் சுவாமிகளுக்கு மணியார்டர் மூலமாக அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார் . வயலூர் வந்த கிருபானந்தவாரியார் தருமகர்த்தாவின் கனவில் நடந்ததை அறிந்து தானே கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வதாக ஒப்புக்கொண்டு அதேபோல் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.

திருவிழாக்கள்:
முருகப் பெருமானுக்குத் தனிச் சிறப்பளிக்கும் சிவன் கோயிலானதால், இத்தலத்தின் தனிச்சிறப்பு விழாக்களான கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. இதைத்தவிரத் தமிழ் வருடப்பிறப்பு, ஆடிக் கிருத்திகை, பௌர்ணமி பூஜை, விநாயகர் சதுர்த்தி, மாதந்தோறும் கார்த்திகை, சஷ்டி, பிரதோஷம் ஆகியவையும் நடைபெற்று வருகின்றது.

Murugan of Vayalur gives the boon!!

வேண்டுதல்கள்:
பழனி, திருச்செந்தூருக்கு ஆகிய இடங்களில் வேண்டுதல் செய்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். ஆனால், வயலூர் முருகனுக்கு வேண்டிக் கொண்டு வேறு இடத்தில் வேண்டுதலைச் செலுத்தினால் வேண்டுதல் என்னவோ அதனை எப்படியும் வாங்கி விடுவார் முருகன் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேண்டுதல் நிறைவு அடைந்ததும் இங்கு முடி இறக்கி காது குத்தல் , காவடி எடுத்தல் , பால்குடம் எடுத்தல் , சஷ்டி விரதம் இருத்தல் , அங்க பிரதட்சணம் , அடிப்பிரதட்சணம் எனச் செய்கிறார்கள் .

பிரார்த்தனை பலன்கள்:
தமிழகத்தில் உள்ள பிரார்த்தனைத் தலங்களில் மிகவும் சிறப்பான தலமாக விளங்குகிறது குமார வயலூர்.
நீண்டகாலமாகத் திருமணம் நடைபெறாமல் தடையாக இருந்த திருமணதோஷம் அகன்று திருமணம் நடைபெற இத்திருக்கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்குத் திருக்கல்யாணம் செய்வித்தால் திருமண தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
முதலில் பள்ளியில் சேர்க்க இருக்கும் குழந்தைகள், புதிய எழுத்தாளர்கள் இக்கோவிலுக்கு வந்து ஞானத்துக்குமரனைத் தரிசித்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளம் கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது நாக சர்ப்ப தோஷம் உள்ளோர் செவ்வாய் அன்று சக்தி குளத்தில் நீராடி, முருகனைத் தரிசிக்கத் தோஷம் நீங்கி, நோய் நொடியற்ற நீண்ட ஆயுள், செல்வ அபிவிருத்தி போன்றவை கிட்டும்.

Murugan of Vayalur gives the boon!!


'கேட்ட வரம் தருவான் வயலூரான்' என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் தமிழ்க்கடவுளை வழிபட்டு வந்தால் இம்மை மறுமைப் பேறு எளிதில் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
விழாக்காலங்களில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இங்கு 6 கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து வசதி:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் , புத்தூர் நால்ரோடில் இருந்து நகரப் பேருந்துகள் உண்டு .
இரயில் வசதி:சென்னையிலிருந்தும் மற்ற இதர ஊர்களிலிருந்தும் வரும் எக்ஸ்பிரஸ் வண்டிகளின் மூலம் திருச்சிராப்பள்ளி சந்திப்பை அடைந்து பின் வயலூர் வந்து சேரலாம்.
விமான வசதி:திருச்சி வருவதற்கு விமான வசதி உள்ளது.