தை முதல் தேதி மகர ஜோதி தரிசனம் காண நானும் எனது குழுவினரும் பெரு வழியாக பயணப்பட்டோம். தென்னக மாநிலங்களில் உள்ள கோயில்களில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதின. குறிப்பாக கேரளா கோயில்களில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதின.என்பதை கண்டோம். குருவாயூர் போன்ற பெரிய கோயில்களில் அய்யப்ப பக்தர்களுக்கு என்று தனி வரிசைகள் அமைக்கப்பப்ட்டிருந்தன.
எரிமேலியிலிருந்து பெரு வழியாய் காளைகட்டி அழுதா மலை, கரிமலை கடந்து பெரியான வட்டம் அடைந்தோம். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம், மேடும் பள்ளமும் பரமானந்தம் என்ற வழி நடை சரணங்கள் தாம் ஒரு மண்டல காலம் விரதமிருந்து இருமுடி கட்டி சிரசில் சுமந்து செல்லும் அய்யப்ப பக்தருக்கு வெறும் கால்களுடன் நடக்க ஒரு நம்பிக்கை சக்தியாக இருக்கின்றன. வழியில் கிடைக்கும் உணவு பொருள்களை கிடைத்த விலையில் வாங்கும் பணக்கார சாமிகள் வாங்குவார்கள். ஆனால் ஏழை பக்தர்களோ ஆங்காங்கே கானகங்களில் அமைக்கப்பட்டிருந்த அன்னதான பந்தல்களில் தேவையான உணவைப் பெற்று அருந்தி சென்றனர். அன்னதானம் செய்வதை தமது தலையாய கடமையென கொண்ட நல்லுள்ளங்கள் பலருண்டு. தற்போது தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் அதிகம் பங்கு கொள்கின்றனர். வரவேற்கத்தக்க செயல் இது.
அய்யப்ப விரதத்தின்போது மிகவும் முக்கியமாக செய்யப்படும் செயல் அன்னதானம். அய்யன் அன்னதான பிரபு . அதிலும் கரிமலை கடந்து பம்பை நதிக்கு ஒரு கி.மீ தூரத்துக்கு முன்னர் வரும் ஒரு முக்கியமான இடம் பெரியான வட்டம் ஆகும்.
பெரு வழியில் நடப்பவர்க்கு பெரியான வட்டத்தில் பம்பை நதியைக் காண்பர். அங்கு அன்னதானம் இட்டு செல்வார்கள். ஏழை எளிய பக்தர்கள் அன்னதனத்தின் மூலம் தமது பசியைப் போக்கிக் கொண்டு செல்வது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வு. அங்கு மட்டும் கிட்டத்தட்ட காலை முதலே இரவு வரை ஆங்காங்கே அன்னதானங்கள் நடந்த வண்ணமிருக்கும். ஆத்மார்த்தமாக நடந்து வந்த இந்த நற் செயலுக்கு பங்கம் விளைக்கும் விதமாக கடந்த பத்தாம் தேதி திடீரென்று அன்னதானம் அருந்திக் கொண்டிருந்தவரை கவளங்கள் கைகளில் வாயிற்கு செல்லுமுன் கைய்யும் களவுமாக பிடிக்கப்பட்டவர்கள் போலே அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தயாரித்த உணவு நிறைந்த பாத்திரங்களை வெளியே கொட்டி ஆரவார அராஜகம் நடந்திருக்கின்றன.
அன்னதனத்திற்குத் தடையா? அன்னதான பிரபுக்கள் சுமார் 60 பேர் , (இவர்களும் விரதமிருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தரே. தங்களது யாத்திரையில் வழியில் சில நாட்கள் அன்னதானம் செய்து விட்டு மலை ஏறுவது வழக்கமாகக் கொண்டவர்கள்)அனைவரும் பெரு வழி வாயிலிலேயே தர்ணா இருந்தனர் என்று அதில் ஈடுபட்ட அய்யப்ப பக்தர்கள் சிலர் தம் மனக் குமுறலைக் கொட்டினர். இதை என்னிடம் சாஸ்தா தாசன் என அழைக்கப்படும் அரவிந்த் சுப்ரமணியன் பகிர்ந்துகொண்டார்.
ஒரு சமரசமாக போலீஸ் கட்டுப்பாடு விதித்தது. அது அன்னதானம் நடைபெறுகிறது என்ற பதாகை வைக்கக் கூடாது. பெரு வழியாக வரும் பக்தர்களை அன்னதானத்திற்கு அழைக்கக்கூடாது, இதுதான்.
13 ஜனவரி காலை கருவிளாம்தோடிலிருந்து கரிமலை ஏறி பசியோடு இறங்கிய நாங்களும் திகைத்தோம். அதிர்ச்சியுற்றோம்.
எனினும் அரவிந்த சுப்ரமணியன் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற அன்னதானத்தில் பசியாறி கிளம்பினோம். ஆங்காங்கே போலீஸ் கண்காணிப்பு…என்ன சாதிக்கப்போகிறார்கள்? அய்யப்ப பக்தர்களின் மன வேதனை இவர்களை சரியாக கேட்கும்.
தொடர்ந்து அங்கிருந்து பம்பை சென்றோம். ஜனவரி பத்தாம் தேதி முதலே ஸ்பாட் பாஸ் வழங்குவதை நிறுத்தியதால் 40 முதல் 50 ஆயிரம் வரை முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் பம்பை டு சபரிமலை சன்னிதானம் ஏறி சென்ற வண்ணமிருந்தனர்.
அங்கு சரங்குத்தியாலில் வரிசை என்ற பெயர் தான் ஆனால் அங்கு வரிசை கிடையாது, ப்ளாக் ப்ளாக்காகத்தான் பக்தர்களை விடுகிறார்கள். தள்ளு முள்ளு தவிக்க முடியாது. இதனால் பாதிக்கப் படுவது சிறுவர்கள், வயசானவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தாம். குழுவிலிருந்து பிரிந்து விடுவது இங்கிருந்தே ஆரம்பமாகிறது.
இரும்பு குழாய் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள வரிசை அமைப்பில் பக்கவாட்டில் நின்ற படி ஆறு பேர் நிற்கலாம் எனில் அங்கு வரிசை கிரமம் தகறும், நல்ல உடல் வாகுள்ள பக்தர்கள் சட்டென முன்னேறுவார்கள். மற்றவர்கள் பின் தங்கிவிடுவர். குழுவும் சிதைக்கப்பட்டுவிடுகிறது.
இந்த ஆறு வழிச் சாலை சன்னிதி நெருங்க நெருங்க நடைப் பந்தலின் முகப்பில் நுழைகையில் மூன்று வழிச் சாலையாகி விடுகிறது. நீங்களே யூகிக்கலாம் அங்கு என்ன நடக்கும் என்று. போதாக்குறைக்கு அங்கு சரிவும் இருப்பதால் பலமானவர்களின் வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுத்து நடக்க முடியாமல் கீழே விழுவதும் அவர்களது இரு முடிகள் கீழே தட்டப்பட்டு விழுவதும் வாடிக்கையாய் இருக்கிறது.
பதினெட்டாம் படி நெருங்குகையில் அதே வரிசை இரு வழிச் சாலையாகி தள்ளு முள்ளு சகஜமாகிறது. பக்தர்களும் பொறுமை காண்பிக்கலாம். ஆனால் போலீஸ் இங்கு ஒருவர் பின் ஒருவராக செல்வது போலே அந்த இரும்பு குழாய்களை அமைத்தால் சுமூகமாக பக்தர்கள் தம் குழுவோடேயே செல்ல வாய்ப்புண்டு. இருமுடியோடு வருபவர்கள் மட்டுமே பதினெட்டு படிகளேற அனுமதிக்கப்படுவார்கள்.
அடுத்து வருவது, பணமுள்ளவர், தங்கும் விடுதியெடுப்பார்கள். அங்கு தங்கியவாறே தாம் கொண்டு வந்த இரு முடி பைகளில் இருக்கும் நெய் நிறைத்த தேங்காய் போன்ற நிவேத்ய பொருட்களை பிரித்து தயாராவார்கள். ஆனால் ஏழை எளிய பக்தர்களோ கிடைத்த வெட்ட வெளியிலேயே குழு குழுவாக அங்கேயே தான் கொண்டு வந்த நிவேதன பொருட்களை பிரித்தெடுக்கும் நிகழ்வைச் செய்வார்கள். அங்கேயே வானம் பார்த்த பூமியில் படுத்தும் உறங்கிவிடுகிறார்கள்.
இதனால் பக்தர் நடமாட்டம் தடைப்படுகிறது. அவர்களுக்கும் இடைஞ்சலாகவும் இருக்கிறது. இதற்குத் தீர்வாக ஒரே சமயத்தில் 40லிருந்து 50 குழுக்கள் அங்கு தமது நிவேதன பொருட்களை பிரிக்க வகை செய்யும் விதமாக ஒரு பெரிய சுவரில்லா சமன் தரையுள்ள மண்டபம் அமைத்துத் தந்தால் நலம். வருடா வருடம் ஆயிரம் கோடி ரூபாய்கள் காணிக்கையாக வருகிறதே. அதில் பக்தர்களின் சௌகரியத்திற்கு செலவிடுவது முறைதான்.
எள் தூக்கிப் போட்டால் கீழே விழாது . இதில் ஆங்காங்கே நின்றிருப்பவர்கள் எந்த வரிசையில் நிற்கிறோம் என்று தெரியாமலே நின்றிருப்பார்கள். சிவில் தரிசனம் முகப்பு செல்லவே நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிவில் தரிசன வரிசை, நெய்யாபிஷேகத்திற்கான டிக்கட் வரிசை, நெய்யாபிஷேகத்திற்கான வரிசை என வரிசைகள் அக்கம் பக்கத்தில் நகர்வதால் குழப்பம் ஏற்படுகிறது. கை கலப்பு, வாய் சண்டை என தவிர்க்கப் பட வேண்டிய சீன்கள் அரங்கேறுகின்றன.
சிவில் தரிசனம் க்யூ என்று ஒரு வரிசை மாளிகைப்புரம் அருகே ஏற்கெனவே சொன்னது போலே சரங்குத்தியாலில் இருக்கும் ஆறு வழிச் சாலை அங்கு ஆரம்பமாகிறது. ஆனால் கூடவே அதன் நெளிவுகளில் ஆங்காங்கே பல
அங்கு நடக்கும் தள்ளு முள்ளு கால்நடைகளுக்கு ஏற்படும் அவஸ்தைதான். அதில் சீனியர் சிடிசன், பெண்கள் சிறுவர்கள் என்று இருந்து விட்டால், அதோ கதி தான். குழுவிலிருந்து பிரிவது தவிர்க்கமுடியாது போகிறது. இங்கும் ஆறு வழிச் சாலை தடாலென ஒரு திருப்பத்தில் இரு வழிச் சாலையாகி ட்ராஃபிக் ஜாம் தான். சட்டென ஆயிரம் பேருள்ள இடத்தில் மூன்று போலீஸ் எந்த மூலைக்கு?
போலீசிடம் மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் அனைத்து தகவல்களும் இருக்கையில் தகுந்த அளவு போலீஸ்களையும் அங்கு அமர்த்தியிருக்க வேண்டும். இங்கும் முன்பே சொன்ன படி ஒருவர் பின் ஒருவராக செல்லும் அளவிலான வரிசை குழாய் தடுப்பு அமைத்தால் நலம்.
இப்படி வரிசை குளறுபடிகளால் பம்பையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் கட்டுப்பாடின்றி தேக்கமடைய கார்த்திகை மற்றும் மார்கழி முதல் இரு வாரங்களில் தரிசனம் செய்ய 16 மணி முதல் 23 மணி நேரம் வரை எடுத்ததாம். அந்த காட்டில் உணவு வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லாதிருக்கும் போது அப்படி மாட்டிக்கொண்ட பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பி சென்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
சீனியர் சிடிசன், பெண்கள் சிறுவர்களுக்கு தனி வரிசை இல்லை. அங்கு ஸ்டாஃப் ஒன்லி என்ற வாயிலில் அவர்கள் படும் அவதி மட்டமானது. ஒன்று தகுதி அடிப்படையில் வரிசையில் விட வேண்டும். நேரம் கடந்து எதிரில் நின்றிருக்கும் பக்தர்களை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட அவர்களும் பாவம் விழுந்து விடுவர். இந்த லட்சணத்தில் நெய்யாபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் போன்ற பூஜைகளுக்கு சன்னிதி செல்லவும் இந்த வாயில் தான் வழி.
சென்ற 15ஆம் தேதி மகர ஜோதியன்று காலை 3 மணியளவில் நடக்க இருந்த கணபதி ஹோமத்திற்கு செல்ல அதி காலை 12.30லிருந்து நின்றிருந்த பக்தர்களை 5.30 மணி வரை மேலே செல்ல விடாமல் அங்கு வாயிலைக் காத்துகொண்டிருந்தனர் இரண்டு போலீஸ்கள். இத்தனைக்கும் பக்தர்கள் தானாகவே வரிசையை ஏற்படுத்திக்கொண்டு நின்றிருந்தனர்.
இத்தனை தடைகளையும் மீறி உள்ளே சன்னிதி தளத்தை அடைந்தால் கொடி மரத்தினருகே அதன் வலப்புறமாக ஆரம்பிக்கும் இரண்டு மூன்று வழிச் சாலை கொண்ட பாலத்தில் முண்டியடிக்க வேண்டும். அந்த இரண்டு வரிசைகளும் சன்னிதியைச் சுற்றி சன்னிதியின் இடப்புறமாக பக்க வாட்டில் நான்கு வழிச் சாலையாகி போகின்றன. சன்னிதிக்கருகே செல்லும் வரிசை கிடைத்தால் தான் சன்னிதி அருகே செல்ல செல்ல சாஸ்தா விக்ரஹ உருவமதை இடையே எந்த தடைமில்லாமல் தரிசிக்க முடியும். அதுவும் 3 அடி அகலமுள்ள வாயிலின் ஊடே அங்கே அமர்ந்திருக்கும் இறைவனைக் காண வாயிலை நெறுங்குகையில் கழுத்து தடாலென 90 டிகிரீ வலப்பக்கமாக திருப்பி அந்த மூன்றடி அகலமுள்ள வாயிலூடே நமது பார்வை செலுத்த வேண்டும்.
முதல் வரிசை கிடைப்பது துர்லபம். சக்தி வேண்டும். அடுத்த வரிசைகளில் சென்றோமேயானால் முதல் வரிசையில் செல்லும் உயரமான பக்தர்களின் தலை மறைக்கும். அவர்கள் தாங்கி செல்லும் பாத்திரங்கள் மறைக்கும்.
சரியாக நொடி தரிசனமும் கிட்டாத பக்தர்கள் சற்று நேரம் தாமதித்தால் அங்குள்ள போலீஸ் நமது சாமிகளிடம் எது கிடைக்கிறதோ அதை கையில் பிடித்து இழுத்து வெளியே தள்ளிடுவார்கள். இங்கு தான் போலீசுக்கும் பக்தர்களுக்கும் பெரிய தகறாரே நடக்கும். இதில் தரிசனம் எப்படி சுமூகமாக கிடைக்கும்?
இதற்குத் தீர்வாக, பாலத்திலிருந்து கீழிறங்கி கொடி மரம் வழியாக பக்தர்களை விட்டால் கொடி மரத்திலிருந்தே அவர்களது பார்வை சன்னிதியுள்ளே சற்றே நீண்ட நேரம் செலுத்திட முடியும். நல்ல தரிசனமும் கிடைக்கிறது. இதனால், சரியாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் அடிக்கடி வருவதைத் தடுக்கலாம். சொல்லப்போனால் இந்த கொடி மரம் வழியாக தாழ்வாரம் கடக்க இரு வரிசைகள் அமைக்கலாம். ஒன்று இரு முடி தாங்கி வருபவர்களுக்காகவும் மற்றது சிவில் தரிசனக்காரர்களுக்கும் என்றும் அமைத்திடலாம்.
வந்த பக்தர்கள் தம் யாத்திரை பூர்த்தியாகியது என்பதைக் குறிக்கும் விதமாக ஒரு தேங்காயை பதினெட்டாம் படியருகே சுவற்றில் உடைத்து விட்டு செல்வது மரபு. அந்த விதமாக நாங்களும் அங்கு செல்ல முற்படுகையில் அங்கு காவலில் நின்றிருந்த போலீஸ் எங்களை அனுமதிக்கவேயில்லை. வேறே வழியே செல்ல கத்தினர். அவர்கள் சொல்லும் வழி சென்றால் எங்களது தேங்காய் உடைப்பு தவிர்க்கப்படும்.
மரபை எடுத்துச் சொன்னாலும் ஒரு இழி நோக்குடன் எங்களை கத்திக் கொண்டிருந்தனர். மரபு கூட தெரியாத போலீசை அங்கு ஏன் அரசு நியமித்தது? எங்களுக்காக பரிந்து வந்த ஒரு வயதான் குருசாமியை வயது என்று கூட மதிக்காமல் ஏக வசனத்தில் திட்டி தள்ளி விட்டது வருத்தத்தைத் தான் தந்தது. நாங்கள் சிலர் பொறுமையுடன் நின்று போராடி கெஞ்சி கூத்தாடி பதினெட்டு படியருகே தேங்காயை உடைத்து விட்டு மலையிலிருந்து கீழிறங்க ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் இருந்த பலரும் இந்த மரபை பம்பையில் பூர்த்தி செய்தனர்.
இடையூறுகள் தீர்ந்த பாடில்லை.
தத்தம் சொந்த மற்றும் தனியார் வாகனத்தில் வந்த பக்தர்கள் நிலைக்கல்லில் நிறுத்தி வக்கப்பட்டிருக்கும் தம் வாகனங்களை வந்தடைய பம்பையில் இருந்து அரசு பஸ்களில் தான் நிலைக்கல்லுக்கு வந்தாக வேண்டும்.
ஒரு ஒழுங்கு வரிசை இல்லை. எனில் வரும் காலி பஸ்ஸில் கிடைத்த வாயிலில், ஆம் ஜன்னல் வாயில் மூலமாக பக்தர்கள ஏற ஆட்படுத்த்ப்படுகிறார்கள். இதனால் வந்திருந்த குழு சிதறுகிறது. தந்தை ஒரு பஸ்ஸில் ஏறினால் கூட வந்த மகனோ மகளோ தனித்து விடப்பட்ட நிகழ்வுகளும் சர்வ சாதாரணமாகின. முண்டியடித்து ஏறுகையில் கையிலிருந்த பொருட்கள் தவற விடுவதும், கிழிந்து உடைந்து போவதும் இந்த சர்வ சாதாரணத்தில் அடங்கும். அங்கு நின்றிருக்கும் போலீஸ் வரிசை அமைப்பை செய்திருக்கலாமே?
அரசு வண்டியை நம்பி இருக்கும் பக்தர்கள் பம்பை பஸ் ஸ்டாண்ட் வந்தாலும் அங்கும் பஸ் செல்லும் இடங்களைப்பற்றிய பலகைகள் இல்லை. வரிசையும் இல்லை. பஸ்களின் நெற்றியிலோ மலையாள எழுத்து மட்டுமே இருக்கும். வெளி மாநில பக்தர்களுக்கு இது ஒரு மகா பிரச்சினை தான். இங்கும் பக்தர்கள் வரும் வண்டிகளில் கிடைத்த வாயில்கள் மூலம் ஏறி அந்த காட்டிலிருந்து வெளியே ஏறினால் போதும் என்று கிடைத்த வண்டிகளில் ஏறிக்கொள்கிறார்கள். இங்கும் செல்லுமிடத்திற்கு ஏற்ப தனித் தனி வரிசைகள் அமைக்க வேண்டும்.
இதையும் தாண்டி நிலக்கலை அடைந்து நமது குழுவினரை முழுதுமாக அடைந்தால் நமது வாகனம் அங்கிருக்கும் கானகத்தில் கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரம் நடந்து சென்றடைய வேண்டியிருக்கிறது. இதன் தீர்வாக, பஸ் ஸ்டாண்ட் அருகேயே நமது வாகனத்தை அழைத்துக்கொள்ளும் வசதிக்கு போலீஸ் அனுமதிக்க வேண்டும். இரவில் புலி மிருகங்கள் நடமாட்டம் அங்குண்டு.
நாங்கள் திரும்பிய மும்பை நேத்ராவதி எக்ஸ்ப்ரஸில் எங்களோடு பயணித்த திரு. சீ.கே. சுதர்மன், பத்தனம் திட்டாவின் District Legal Services Authority சார்பாக சபரிமலையில் பக்தர்களின் புகார்களை ஏற்று பரிசீலித்து அரசின் ஆணையருக்கு அனுப்பும் ஒரு para Legal Volunteer ஆக அப்போதுதான் பணி புரிந்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.
மேற்கூறிய புகார்களையும் அதன் தீர்வுகளையும் அடங்கிய 24 பாயிண்டுகளை அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது வாட்ஸப்பில் அனுப்பி வைத்தேன்.
வரும் பிப்ரவரி மாத சபரிமலை விசிட்டில் அதை கமிஷனருக்கு அனுப்பி ஆவன செய்கிறேன் என்றார்.
பயணத்தில் நிறைய நேரம் கிடைத்ததால் ஒவ்வொரு பாயிண்டையும் விலாவரியாக எடுத்துக்கூற முடிந்தது என்ற திருப்தி எனக்கு இருந்தது.
விரதமிருந்து வரும் பக்தரின் யாத்திரையை விரயமாக்கலாமா? இந்த இடையூறுகள் இன்று புதியதல்ல. தீர்வும் எளிதானதே. ஆனாலும் இந்த முறை இடையூறுகள் தங்கு தடையின்றி மிகுந்திட்டது நிர்வாகத்தினரின் கைய்யாலாகாத்தனமா?மெத்தனமா?
கொண்டு போய் கொண்டு வந்திட்ட பகவானே சரணம் அய்யப்பா. இந்த இடையூறுகளையும் தீர்ப்பாயே சரணம் அய்யப்பா.
இதெற்கெல்லாம் காரணம் கேரள அரசு ! தண்ணீர் தண்ணீர் படத்தில் பாலசந்தரின் டயலாக். நாங்க வீச்சம் அடிக்கோம் எங்க ஓட்டு மாத்திரம் மணக்கோ என்பார்.
பினரயி தலைமையில் இருக்கும் இந்த கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு பக்தர்களின் பணம் மட்டும் வேண்டும். அவர்களின் பக்தியோ அல்லது சிரமங்களோ பொருட்டில்லை ?? எனில் அந்த அய்யப்பன் தான் கண் திறந்து ஆவண செய்ய வேண்டும்.
Leave a comment
Upload