தொடர்கள்
மருத்துவம்
அனைத்திலும் சமநிலை - 2 பத்மா அமர்நாத்

20231018110600820.jpg

அனைத்திலும் சமநிலை - பாகம் 2

நம் ஆழ்மனம் ‘நான்’ எனும் தன்மையை உள்ளடக்கியது.

‘நான்’ எனும் இந்தத் தன்மை தான்,
நம்முடைய அன்றாட நிகழ்வுகளை, சிந்தனைகளை,
எதைச் செய்ய வேண்டும், வேண்டாம் -
ஆகியவற்றை நிர்ணயிக்கும்.

ஒரு பெரும் மாற்றம் நம் வாழ்வில் நிகழும் போது, நம்முடைய ஆன்மாவின் செயல்,
இடம் மாறிவிடும்.

‘நான்’ எனும் உணர்விலிருந்து,
தன் நிலைக்கு (self), சுயத்திற்கு மாறிவிடும்.

அப்பொழுது தான் முற்றிலுமாக நம்மை நாம் உணர ஆரம்பிப்போம்.

கொரோனா காலத்தில் பலருக்கும் இந்த உணர்வு ஏற்பட்டது.

உயிரின் மதிப்பை உணர்ந்து,
இதுநாள் வரை ‘இருத்தல்’ நிலையில் இருந்த பலர், உண்மையாக ‘வாழ்தல்’ நிலைக்கு மாறினர்.

சென்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டப் பெண்மணியும்,
குடும்பம்,
குழந்தைகள்,
சம்பாத்தியம்,
தேவைகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால், தன் வாழ்நாளை மருத்துவர் கணக்கிட்டுச் சொன்னவுடன்,
அவருடைய முக்கியத்துவம் மாறிவிட்டது.

இதைத் தொடர்ந்து,
நாம் செய்யவேண்டிவற்றை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

முதலாவதாக..

சமயோசிதச் சிந்தனை…

‘உங்கள் இதயத்தைப் பின்தொடருங்கள்,
ஆனால்,
உங்கள் மூளையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்’.

( Follow your heart, but take your brain with you.)

பிடித்ததைச் செய்ய வேண்டும்,
அதே சமயத்தில் சம்பாதிக்கவும் வேண்டும், என்பதற்கான தீர்வு தான் இந்த வாசகம்.

‘உங்கள் இதயத்தைப் பின் தொடர்வது’ என்றால், உங்கள் கனவுகள்,
ஆர்வம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வது.

இதன் மறுபக்கம்,
‘உங்கள் மூளையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்’.

அதாவது,
செயல்களின் சாத்தியமான விளைவுகளைப் பற்றிச் சிந்தித்து,
பகுப்பாய்வு செய்து, நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுங்கள்.

இதற்கு ஒரு உதாரணம்:

ஒரு இளைஞர், இசைத்துறையில் இருந்துகொண்டே, பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை மற்றும் கனவாக இருந்தது.

இளைஞனுக்கு,
நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அவருக்கென்று சில கடமைகள் இருந்தன.

மாதாந்திரக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்தது.

அதனால்,
அவர் பகலில் அலுவலகம் சென்று வேலை செய்து சம்பாதித்தார்.

இரவு நேரங்களில், கிளப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்தி, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

இசையால் போதுமான வருமானம் கிடைக்கும் வரை,
தனது அலுவலக வேலையைத் தொடர்ந்தார்.

இதன் மூலம் தனது ஆசையும் நிறைவேறியது, தன் அன்றாட வாழ்க்கையும் பாதிக்காதபடி, சமயோசிதமாக நடந்து கொண்டார்.

உற்சாகத்துடனும், அறிவுபூர்வமாகவும், உங்கள் ஆர்வத்தைப் பின் தொடருங்கள்.

நேரமின்மை பற்றி, ஒருபோதும்,
குறை கூற வேண்டாம்.

உண்மையில் விருப்பம் இருந்தால்,
நீங்கள் அதைச் செய்ய நேரம் ஒதுக்குவீர்கள்.

இரண்டாவதாக,
செயலில் இறங்குங்கள்.

காரணங்கள் என்றைக்கும் விளைவைக் கொடுக்காது.

அதேசமயம்,
நீங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பொய்க்காது.

நீங்கள் ஏற்படுத்தும் விளைவு,
உங்களைப் பற்றிச் சொல்லும்.

ஒரு மரம்,
ஆயிரம் பேசும்.

ஆனால்,
அதன் கனிகள் அதன் தன்மையை வெளிப்படுத்திவிடும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,
அடுத்த இலக்கை அடைய வேண்டும் என்று சொல்பவர்களைக் கவனியுங்கள்.

அவர்கள் எதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்று பாருங்கள்.

ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்பவர்களின், உணவுப் பழக்கத்தைக் கவனியுங்கள்.

அவர்கள் சொல்லைக் கவனிக்காதீர்கள்.

செயலை மட்டும் பாருங்கள்.

“முயற்சிக்கிறேன்”….

“I will try”…

என்பது தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வார்த்தைப் பிரயோகம்.

ஒன்று,
நேரத்தை ஒதுக்கி, வேலையைத் துவங்குவீர்கள்,
அல்லது வெறும் வார்த்தையாகவே பேசிக்கொண்டு, பொழுதைப் போக்குவீர்கள்.

முன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டப் பெண்மணியும்,
தனக்கான ஆசைகளை மனதில் எண்ணிக் கொண்டும்,
பிறரிடம் அதை பற்றிப் பேசிக்கொண்டும் இருந்திருப்பார்.

ஆனால் செயலில் இறங்கவில்லை.

மூன்றாவதாக,

சுய உதவி, சுயநலம் அல்ல…

நாம்,
நம் குடும்பத்தாருக்கும், மற்றவர்களுக்கும்,
நம்மால் இயன்றதைச் செய்துகொண்டே இருக்கிறோம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது தானே?

அப்படி இருக்கும் போது, நாம் சந்தோஷமாக அல்லவா இருக்கவேண்டும்!

பிறகு ஏன் நாம் வருத்தப்படுகிறோம்?

நமக்கான தேவைகள் நிவர்த்தியாகவில்லை என்பதை உணரும்போது, நாம் உடைந்து போகிறோம்.

காரணம், நாம் நம்மை புறக்கணிக்கிறோம்.

நம்மைப் புறக்கணிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

மற்றவர்களுக்காக வேலை செய்யுங்கள்,
ஆனால் உங்களுக்காகவும் வேலை செய்யுங்கள்.

இதைப் பலர் சுயநலம் என்று, தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

விமானம் ஏறியவுடன், நேர்த்தியாக உடையணிந்த ஏர் ஹோஸ்டஸ்,
செய்கை மொழியில், நம்மிடம் கூறும் செய்தி என்ன?

‘முதலில், நீங்கள் ஆக்சிஜன் (பிராண வாயு) மாஸ்கை அணிந்து கொண்டு,
பிறகு,
உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்’ என்பது தான்.

காரணம்,
நீங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருந்தால் தான், உங்களைச் சார்ந்தவர்களையும், குடும்பத்தாரையும் நல்லபடியாக கவனித்துக் கொள்ளமுடியும்.

இது நிச்சயம்,
சுயநலமல்ல.

இனி உங்களுக்கு முன்னுரிமை அளித்துக் கொள்வதில் தயக்கம் காட்டாதீர்கள்.

ஆக,

1. சமயோசிதமாகச் சிந்தித்து,
ஆசைகளைப் பின் தொடருங்கள்.

2. காரணங்கள் பலனளிக்காது, செயலில் இறங்குங்கள்.

3. உங்களுக்கு முன்னுரிமை அளித்துக்கொள்ளத் தவறாதீர்கள்.

20231018111252996.jpg