தொடர்கள்
ஆன்மீகம்
‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’!! - ஆரூர் சுந்தரசேகர்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’


‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற பழமொழியின் உண்மையான விளக்கம், சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பாக மாறும் என்பதுதான். அதாவது, பெண்கள் சஷ்டியில் விரதமிருந்தால், அவர்களின் அகமென்னும் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
கந்தப் பெருமான் சூரனை சம்ஹாரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுசரிக்கப்படுகின்றது. நடப்பாண்டிற்கான (2023) கந்த சஷ்டியில் தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13-ந் தேதி தொடங்கியது.
நவம்பர் 18 (சனிக்கிழமை) – நாள் 6 – சூரசம்ஹாரம்
நவம்பர் 19 (ஞாயிற்றுக் கிழமை) - நாள் 7 - திருக்கல்யாணம்
இந்த விரதம் இருந்து முருகனை மனதார வணங்கினால் வாழ்க்கையில் சகல விதமான நலன்களும் கிடைக்கும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’


ஆன்மாவுக்கு கவசமாக விளங்குவதே கந்த சஷ்டி கவசம். இதனை பாலதேவராய சுவாமிகள் பாடியருளினார்.
இதன் காப்புச் செய்யுள்.
“துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து
கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும்
நிமலனருள் கந்த சஷ்டி கவசந்தனை”

கந்த சஷ்டி விழா உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகர் கோயில்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலையிலும், மற்றும் முருகன் குடி கொண்டுள்ள எல்லா கோயில்களிலும் கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். முருகப் பெருமான் பத்மசூரனை வதம் செய்து வெற்றி கொண்ட ஸ்தலம் திருச்செந்தூர். இங்கு நடக்கும் கந்த சஷ்டி விழாவும், சூரசம்ஹார நிகழ்வும் மிகவும் பிரசித்தி பெற்றது.
திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சென்று அங்கேயே ஆறு நாள்கள் தங்கி, விரதம் இருந்து சூரசம்ஹாரத்தைப் பார்த்து கடலில் நீராடி அடுத்த நாள் முருகனின் திருக்கல்யாணத்தைக் கண்டு களித்து வீடு திரும்புவர்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’


கந்த சஷ்டி புராணம்:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால்"ஒப்பரும் விரதம்" எனக் கந்த சஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.
சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையைக் களைய, தேவர்களைக் காத்தருள தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்து ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க மகாவிஷ்ணு ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் குழந்தைகளைக் காணச் சிவனும், பார்வதியும் சரவணப் பொய்கைக்குச் சென்றிருந்த போது பார்வதிதேவி அங்குள்ள அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக எடுத்து அணைத்துக் கொள்ள, பன்னிரு கைகளும் ஆறுமுகங் கொண்ட ஆறுமுகக் கடவுளாகக் கந்தன் தோன்றினார்.
'வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை'

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’

கந்த சஷ்டி விரத முறை:
இவ்விரத முறையில் சிலர், ஆறு நாள்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர்... ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றைக் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. இரவில் பால், பழம் மட்டும் அருந்தலாம். ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு, இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால்... முருகப் பெருமானை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நீராடி, திருநீறணிந்து முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து முறைப்படி பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று வரலாம். கந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு முருகப்பெருமானது பரிபூர்ணஅருள் கிடைக்கும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை:
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படிக்கலாம். இதனைப் படிப்பதால் மன அமைதி நிலவும். இதைத்தவிரச் சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

கந்த சஷ்டி விரதத்தின் பலன்:
குடும்பத்தில் ஆண்கள் தங்கள் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கடன் தொல்லை நீங்கவும்.... திருமணமான பெண்கள்... குடும்ப நன்மைக்காகவும், குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள்... திருமண வரம் வேண்டியும், மாணவர்கள் கல்விக்காகவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதனால் விரும்பிய பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’

ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்
"ஓம் தத் புருசாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்"

கந்தனுக்கு அரோகரா..! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!!