தொடர்கள்
தொடர்கள்
நடந்தது - ஜாசன்

20231018100242150.jpeg

பீச் ரயில் நிலையத்தில் நான் ஏறி அமர்ந்தேன். ரொம்ப களைப்பாக இருந்ததால் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து தூங்கலாம் என்று முடிவு செய்து விட்டு எதிரே பார்த்த போது எதிரே உட்கார்ந்தவர் எனக்குத் தெரிந்தவர் போல் தெரிந்தார். இவர் எங்கோ பார்த்திருக்கிறோமோ என்று இரண்டு மூன்று ஸ்டேஷன் வரை யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நினைவுக்கு வந்தார். அவர் பெயர் ராமநாதன் நான் வேலைக்கு போன காலத்தில் ஊரப்பாக்கத்தில் எங்கள் பெட்டியில் தான் வந்து ஏறுவார். அவர் ஒரு செய்தி சுரங்கம். காலையிலேயே ஆல் இந்தியா ரேடியோ செய்தி, டிவி செய்தி, நாளிதழ்கள் என்று எல்லாவற்றையும் படித்திருப்பார். அந்த செய்திகளுடன் தனது சொந்த கருத்தை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி சொல்வார் நமக்கும் டைம் பாஸ் ஆகும். நாட்டு நடப்பும் தெரிந்து கொள்ளலாம். அரசியல் தலைவர்களை ஏக வசனத்தில் அவன் இவன் என்று தான் விமர்சனம் செய்வார். எப்போதும் முழுக்கை சட்டை பேண்ட் ஷுசூட்கேஸ் என்று டிப்டாப்பாக வருவார். தலைமைச் செயலகத்தில் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தவர் ராமநாதன்.

​இப்போது நரைத்தலை வேட்டியுடன் துக்ளக் படித்துக் கொண்டிருந்தார். நான் மெல்ல அவரிடம் 'நீங்கள் ராமநாதன் சார் தானே 'என்று கேட்டேன். அவர் என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு 'ஆமாம் உங்களுக்கு என்னை எப்படி தெரியும் 'என்று கேட்டார். நான் 90-களில் ரயில் பயணத்தின் போது உங்கள் நண்பர்கள் ராம்குமார் சுவாமிநாதன் சங்கரசுப்பிரமணியம் ஆகியோருடன் நானும் வருவேன் என்று சொன்னேன். ஓ அப்படியா என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒரு மோசடி வேலை. அந்தக் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் தான் .இப்போது நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் எதிர்த்து தான் போட்டி போடுவார்களாம் காங்கிரஸ். இன்னும் திருந்தவே இல்லை அது போனி ஆகாது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால்,பிரதமர் மோடி இல்லை யோகி ஆதித்யநாத் பிரதமர் பதவியேற்பார் என்றார். இதெல்லாம் ஆர் எஸ் எஸ் ஏற்பாடு என்று கூடுதலாகவும் தகவல் சொன்னார். அப்போது அவரை சுற்றி இருந்தவர்கள் அவர் பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் ஐயரே பாரதிய ஜனதாவை எல்லாம் போனியாகாது என்று சொன்னார். அவர் அதைக் கண்டு கொள்ளாமல் புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு என் பக்கத்தில் உட்கார்ந்தது ஒருவர் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பிரித்து சாப்பிட போனபோது ராமநாதன் ' பிஸ்கட் எல்லாம் சாப்பிடாதீர்கள் பிறகு காலையில் டாய்லெட் போக சிரமப்படுவீர்கள். அவ்வளவும் மைதா மாவு சுலபத்தில் ஜீரணம் ஆகாது பசித்தால் பழம் சாப்பிடுங்கள் மரவள்ளி கிழங்கு சாப்பிடுங்கள் இல்லையென்றால் கடலை பர்பி சாப்பிடுங்கள் உடம்பை கெடுக்காது' என்று சொல்ல அவர் அந்த பிஸ்கட்டை சாப்பிடாமல் அப்படியே எடுத்து பையில் வைத்து விட்டு தண்ணீர் குடித்தார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வராது என்று சொன்னவர் நீ சொல்றது கரெக்டு தான் ஐயரே என்றார். இப்போது. அதற்கும் ராமநாதன் எந்த பதிலும் சொல்லவில்லை.

​அவர் நிச்சயம் ஓய்வு பெற்று இருப்பார் என்பதை உறுதி செய்து கொண்டு எப்படி போகுது உங்கள் ரிட்டையர்டு லைஃப் என்று ஆரம்பித்தேன். நல்லா தான் சார் போகுது சீசன் டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன் வீட்ல உட்கார பிடிக்கல. அப்படியே பீச்சு வரை வருவேன். பெருங்களத்தூரில் இறங்குவேன் அங்கு என் நண்பர்கள் சிலர் அவர்களுடன் பேசுவேன். மூன்று நான்கு ரயிலை விட்டு விட்டு அதன் பிறகு வீடு திரும்ப வேண்டும் என்றார். ஆனால், அவர் பேச்சில் அவரது ரிட்டையர்டு லைப் மகிழ்ச்சியா, இல்லை என்பது போல் தெரிந்தது. அதற்கு மேல் அவரிடம் பேச விரும்பாமல் நான் அமைதி காத்தேன்.

​தாம்பரம் ரயில் நிலையத்தில் எனக்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் ஒரு பெண் வந்து அமர்ந்தார். அப்போது அவர் செல் பேசி சினுங்கியது .எடுத்துப் பேசியவர் முதலில் தொடர்ந்து சரி சரி சரி சரி என்று சொன்னவர் திடீரென குறிப்பிட்டு ' அம்மா உன் காலமெல்லாம் முடிந்து விட்டது உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் நான் செய்கிறேன், எனக்கு வேண்டியது நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கவலைப்படாதே ' என்றார்.