ஒடிசா மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மறைந்த பிஜு பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி விளங்கி வருகிறது. அம்மாநில முதல்வராக - மறைந்த பிஜு பட்நாயக்கின் மகனும் பிஜு ஜனதா தளத்தின் தலைவருமான 77 வயதான நவீன் பட்நாயக் நீண்ட காலமாக கோலோச்சி வருகிறார்.
தற்போது நவீன் பட்நாயக்கின் உடல்நலப் பாதிப்பு மற்றும் முதுமை காரணமாக, ஒடிசா மாநில அரசியல் களத்தில் 'பிஜு ஜனதா தளக் கட்சியின் ஆளுமைமிக்க அடுத்த அரசியல் வாரிசு யார்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நவீன் பட்நாயக்கின் குடும்பத்தினர் அடுத்த அரசியல் வாரிசாக வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை!
எனினும், கடந்த சில ஆண்டுகளாக 'நவீன் பட்நாயக்கின் அடுத்த அரசியல் வாரிசு' என்ற விவாதத்தில், முதலிடம் பிடித்திருப்பவர் - மதுரை பூர்வீகத் தமிழரான வி.கே.பாண்டியன் என்ற ஐஏஎஸ் அதிகாரிதான்! கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒடிசா மாநில கேடரில் முதன்முறையாக துணை ஆட்சியராக பொறுப்பேற்றார் வி.கே.பாண்டியன்.
பின்னர் படிப்படியாக முன்னேறி, தற்போது 'ஒடிசா மாநிலத்தின் நிழல் முதல்வர்' என அனைவரும் பொறாமைப்படும் வகையில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக, பாண்டியன் ஐஏஎஸ் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இவரது மனைவி சுஜாதாவும் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரிதான்! இதனால் ஒடிசா மாநில நிர்வாகத்தில் மட்டுமல்ல, அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளக் கட்சியிலும் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியனின் ராஜ்யம் கோலோச்சி வருகிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பிரபல கட்சிகள் பிளவை சந்திக்காமல் இருந்ததில்லை. இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசா மக்களின் செல்வாக்கு மிக்க நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளமும் பிளவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது ஐஏஎஸ் அதிகாரி பாண்டியனின் மதிநுட்ப நடவடிக்கையால், அப்பிளவை முதல்வர் நவீன் பட்நாயக் வெற்றிகரமாக முறியடித்தார். இதனால் முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் விருப்ப ஓய்வுபெற்றிருக்கிறார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கேபினட் அமைச்சர் அந்தஸ்து பதவியைக் கொடுத்துள்ளார் நவீன் பட்நாயக். இதனால் ஒடிசா மாநில அமைச்சரவையில் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அடுத்தபடியாக ஐஏஎஸ் அதிகாரி மதுரை பாண்டியனின் அதிகாரம், செல்வாக்கு உயர்ந்தது.
இதன்மூலம் ஒடிசா மாநில அரசியல் மற்றும் அரசு நிர்வாக களத்தில் அசைக்க முடியாத சக்தியாக பாண்டியன் ஐஏஎஸ் தடம் பதித்துவிட்டார்! இந்த புதிய பதவி மூலம் தமது அடுத்த அரசியல் வாரிசு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மதுரை பாண்டியன் என்பதை முதல்வர் நவீன் பட்நாயக் சூசகமாக தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே பிஜு ஜனதா தளம் கட்சி பாண்டியனின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாண்டியன் தலைமையில் பிஜு ஜனதா தளம் மகத்தான வெற்றி பெறுவது மட்டுமே என்று அம்மாநில அரசியல் விமர்சகர்கள் உறுதியாக கூறுகின்றனர். முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில், பிஜு ஜனதா தளம் 114 இடங்களைப் பெற்றிருந்தது.
தற்போது ஒடிசா விஷன் என்ற பெயரில் மக்களுக்கு கல்வி, தொழில் முதலீடு உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் செயல்படுத்தி, மக்களிடையே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இதன்மூலம் ஒடிசா மாநில மக்கள் செல்வாக்குடன் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் பிஜு ஜனதா தளம் கட்சி வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யாலால்லா........
Leave a comment
Upload