ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவார்கள். இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு 'துலா(தராசு) மாதம் என்று பெயர்.
காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. காவிரியை, தட்சிண கங்கை என்றும் போற்றுகிறார்கள். இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில், அனைத்து புனித நதிகளும் ஐப்பசியில் சங்கமிப்பதாக ஐதீகம். இதைத்தவிர காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்குச் சமம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். மற்றும் அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.
‘ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்' என்கின்றன ஞான நூல்கள்.
ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அறுபத்தெட்டாயிரம் ரிஷிகளும், முனிவர்களும் காவேரியில் நீராடுவதாகக் காவேரி மஹாத்மிய புராணம் கூறுகிறது.
இந்த துலா ஸ்நானம் அழகு, ஆயுள், ஆரோக்கியம், கல்வி, செல்வ வளம், வலிமை, சந்தான பாக்கியம் ஆகியவற்றைத் தரும் என்பது ஐதீகம்.
துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.
துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் நம்முடைய பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். ஆசி வழங்குவார்கள். ஐப்பசி மாதத்தில் ஒருநாளாவது காவிரியில் நீராடி முன்னோர் கடன் செலுத்துவோம்.
துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும்.காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.துலா காவேரி ஸ்நானம் செய்யும்முன் தகுந்த புரோகிதர்களைக் கொண்டு ஸ்நான ஸங்கல்பம் செய்துகொள்வது சிறந்தது. முடியாதவர்கள்
“கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு”
மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி துலா ஸ்நானம் செய்வது சிறப்பானது.
தீராத நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல்.
துலா மாதத்தில் காவேரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் 'கடைமுகம்' என்று சொல்லப்படும் ஐப்பசி 30ம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், 'முடவன் முழுக்கு' என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இதனால் ஐப்பசி மாதத்தில் ஒரே ஒரு நாளாவது நீராடுவது சிறப்பாகும்.
முடவன் முழுக்கு:
ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறையில் காவேரி ஸ்நானம் செய்ய நினைத்து, மயூரத்திலிருந்து வெகுதூரம் இருக்கும் ஓர் ஊரிலிருந்து கிளம்பி வருகின்றான். அவன் தனது உடல் குறைபாட்டின் காரணமாக நிதானமாக வந்து மயூரத்தை அடையும் நாளானது ஐப்பசி 30 நாட்களும் முடிந்து கார்த்திகை ஆரம்பித்து விடுகிறது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று மயூரநாதரிடம் வருந்திப் பிரார்த்திக்கிறான். அப்போது சர்வேஸ்வரனான, மயூரநாதன் அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிறங்கி, "இன்று தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளுகிறார். அத்துடன் இல்லாது, கார்த்திகை முதல் நாள் யார் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு" என்ற பெயர் பெற்றது.
துலா ஸ்நானம் செய்யச் சிறந்த இடங்கள்:
தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருச்சி முக்கொம்பு, திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், பூம்புகார், பவானி, குணசீலம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராடச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்த துலா மாத ஸ்நானம் மாயவரத்தில் ஓடும் காவிரியில் அதிகம் கொண்டாடப்படுகின்றது. அதனால்தான் ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு வைபவம்' அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன்களைத் தரும்.
கங்கையின் பாபம் போக்கும் காவிரி:
மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கக் கங்கையில் நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு
ஸ்ரீமஹாவிஷ்ணு, "நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.
அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
புண்யக்ஷேத்ரே வினஸ்யதி.
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம்
வாராணஸ்யாம் விநஸ்யதி.
வாராணஸ்யாம் க்ருதம் பாபம்
கும்பகோணே விநஸ்யதி.
கும்பகோணே க்ருதம் பாபம்
காவேரி ஸ்னானே வினய்யதி.
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புராண இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.
துலா காவேரி மஹாத்மியம்:
ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத்திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேஸ்வரர் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்குப் பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈஸ்வரன், மேலும் கூறலானார்: கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும்,தரிசித்தாலும், அதனைப் பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம், தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்குச் சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்” என்றார்.அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை , முனிவர்கள் , பிராயச்சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள். பின் காவிரி உருவான பெருமையை கூறலானார்
காவிரி உருவான கதை:
கவேரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், “உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்” என்று கூறி, தன் மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது கணவர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்திய முனிவர் அருளினார்.
“கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி”
இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தைப் பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று, மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
Leave a comment
Upload