தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

2023927194445485.jpg

40 வருடங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் ஒரு இளைஞர் பாப்கார்ன் விற்றுக் கொண்டிருப்பார். பாப்கார்ன் பாப்கார்ன் என்று கூறியபடியே சுறுசுறுப்பாக அவர் வியாபாரம் இருக்கும் மின்சார ரயில் பெரும்பாலும் பரிச்சயமான முகமாகத்தான் அவருக்கு பெரும்பாலும் இருப்பார்கள். அவருக்கென்று ரெகுலர் கஸ்டமர்கள் இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். நான் கூட சில சமயம் வாங்கி இருக்கேன். ரயில் பெட்டியில் ஓடி ஓடி பரபரப்பாக பாப்கார்ன் விற்பனை செய்வார். அடுத்த ரயில் நிலையம் வரும்போது ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கி அடுத்த பெட்டிக்கு ஓடுவார் இதை நான் கொஞ்சம் பயந்தபடி பார்ப்பேன். காரணம் அவருக்கு ஒரு கை முழுவதும் கிடையாது ஒற்றை கையிலேயே பாப்கார்ன் மூட்டையை சுமந்தபடி அவரது வியாபாரம் இருக்கும். அதே சமயம் அவர் தன் மீது அனுதாபப்பட்டு பாப்கார்ன் வாங்குவதையும் அவர் விரும்பியதில்லை அதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் ரயில் பயணிகளிடம் சினேகமாகத்தான் பழகுவார். ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்த போது அதே பெட்டியில் இந்த இளைஞர் ஏறினார் பாப்கார்ன் விற்பனையாளராக அல்ல ஒரு பயணியாக கூடவே ஒரு பெண்மணி ஏறினாரர். அந்தப் பெண்மணியின் கழுத்தில் இருந்த புது தாலி இருவரும் சமீபத்து திருமணமானவர்கள் என்று அடையாளம் காட்டியது. என்னை பார்த்து புன்முறுவல் செய்து "சினிமாவுக்கு போகிறோம் சார் "என்றார். அவரது உடை பாப்கான் விற்பவர் போல் இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தது.

இன்று ரயிலில் அவரை சந்தித்தேன் சக பயணியாக இப்போது கொஞ்சம் குண்டாக இருந்தார். அவரது முகம் நல்ல வசதியுடன் இருப்பார் போல் தெரிந்தது. அதை அவர் வைத்திருந்த செல்பேசி கழுத்தில் அணிந்திருந்த செயின் மோதிரம் கால் செருப்பு எல்லாம் உறுதிப்படுத்தியது. ஆனால் அவருக்கு என்னை நினைவில்லை. நான் அவருக்கு அந்த கால பாப்கார்ன் விற்பனை அனுபவங்களை எல்லாம் சுட்டிக்காட்டி உங்களை அப்போது நான் பார்த்திருக்கிறேன் அடிக்கடி நான் ட்ரெய்னில் பயணம் செய்பவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இப்போது எப்படி இருக்கிறீர்கள் இப்போது நீங்கள் பாப்கார்ன் விற்பனை செய்வது போல் தெரியவில்லையே என்று கேட்டேன் ."ஆமாம் சார் அதெல்லாம் விட்டு நான் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு இரண்டு மகன்கள் ஒருவர் டாக்டர் இன்னொருவர் ஆடிட்டர். இப்போது அவர்கள் இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள் நல்ல வசதியாக இருக்கிறேன். நீ உழைத்தது போதும் சும்மா உட்கார்ந்து இரு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ சந்தோஷமாக இரு நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் என்று சொல்லி என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்" என்றார். எனக்கு இதைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது.

நான் அவருடன் உரையாடலை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் இன்னும் செய்யவில்லையா என்று கேட்டேன் திருமணம் நடந்து விட்டது சார் ஒரு மருமகள் டாக்டர் இன்னொரு மருமகள் வழக்கறிஞர். அவர்களும் என்னிடமும் என் மனைவியிடம் அன்பாகத்தான் நடந்து கொள்கிறார்கள் சந்தோஷமாக சொன்னார்.

நான் உங்கள் உடல் குறையை சுட்டிக்காட்டி உங்களிடம் அனுதாபம் காட்டுவதை நீங்கள் பாப்கார்ன் விற்கும் போது அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களே என்பதை சுட்டிக் காட்டினேன். அதற்கு அவர் "இப்போதும் நான் அந்த அனுதாபத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதை எனது மகன்களிடமே சொன்னேன் இல்லை இல்லை அவர்களிடமே கேட்டேன் அதற்கு அவர்கள் சொன்னார்கள். எங்களை வளர்த்து ஆளாக்கி இந்த நிலைக்கு நாங்கள் வந்திருப்பதற்கு காரணம் உங்கள் கடுமையான உழைப்பு தான் நீங்கள் தந்தை என்ற முறையில் உங்கள் கடமையை செய்தீர்கள் இப்போது நாங்கள் மகன் என்ற முறையில் எங்கள் கடமைகளை செய்கிறோம் என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள் என்றார் அவர். இது எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. அப்போதும் அவர் இதை பெருமையாக நினைக்கவில்லை. "இது எல்லாமே என் மனைவிக்கு சேரும் அவர்களின் வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கியது என் மனைவி தான். காலையில் பாப்கார்ன் விற்க ஆறு மணிக்கு எல்லாம் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வந்து விடுவேன் மதியம் ஒரு மணிக்கு வீடு திரும்பி மீண்டும் நான்கு மணிக்கு தொழில் தொடங்கி இரவு 11 மணிக்கு தான் முடியும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளை கவனிக்க எனக்கு ஏது நேரம் எல்லாம் என் மனைவி தான்" என்றார்.

பின் அவரே தொடர்ந்து எனக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது சார் கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க விரும்புபவன் நான். ஆனால் எனக்கு இறைவன் கூடுதலாக சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறார். என் வீட்டில் இரண்டு சொகுசு கார்கள் இருக்கின்றன வீடு முழுக்க வசதிகள். ஆனாலும் நான் பழையதை மறந்ததில்லை. இப்போது கூட நான் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று என் ஆசையை சொன்னதும் என் இளைய மகன் என்னை காரில் அழைத்து வந்து முதல் வகுப்பு ரயில் டிக்கெட் தான் வாங்கித் தந்திருக்கிறார். ஆனால் நான் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்கிறேன். ரயிலில் பலதரப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதெல்லாம் எனது வாழ்க்கைக்கான பாடங்கள் அதைத்தான் மீண்டும் அனுபவிக்க பழைய நினைவுகளில் என்னை பின்னோக்கி செல்வதற்காக தான் எனது இந்த ரயில் பயணம். இப்போது கூட உங்களை எனக்கு சரியாக நினைவில்லை மன்னிக்கவும். ஆனால், உங்களுக்கு என்னை தெரிகிறது என்னுடைய ஏதோ ஒரு நடவடிக்கை எல்லோரும் கவனிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதை இப்போது நான் உணர்கிறேன்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நுழைந்தது. ரயில் நிலையத்தில் எனது முதல் மகன் எனக்காக காத்திருப்பார். என்னை காரில் அழைத்துச் செல்ல என்று சொல்லிப் புன்முறுவல் செய்தார். அந்த வெற்றியாளர். அது உண்மைதான் அவரது டாக்டர் மகன் அவரை ரயில் பெட்டி வாசலிலேயே கையைப் பிடித்து இறக்கி அழைத்துச் சென்றார். அவர் என்னைப் பார்த்து சிரித்தபடி கடந்து போனார். இந்த தலைமுறையிலும் பாசக்கார மகன்கள் இருக்கிறார்கள் தான் போலும்.

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பணக்கார தொழிலதிபரை ஒரு நண்பருக்காக சந்திக்கப் போனேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார் எங்களைப் பார்த்ததும் அவர் முகம் மாறிவிட்டது. தொழிலதிபர்" என்ன சங்கரா என்ன விஷயம் ?"என்று கேட்டார் அந்த நபர்" ஒன்னும் இல்லை சார் சும்மா தான் பார்க்க வந்தேன் "என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தார். அப்போது அந்த தொழிலதிபர் "ஒரு நிமிஷம் இரு இதோ வருகிறேன்" என்று சொல்லி உள்ளே போய் திரும்பி வந்தவர்" இந்தா வைத்துக்கொள்" என்று அவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் போனதும் உங்களைப் பார்த்ததும் அவர் என்னிடம் உதவி கேட்க கொஞ்சம் சங்கடப்பட்டு இருக்கிறார் அது அவர் முகத்தில் எனக்குத் தெரிந்தது அதுதான் என்றவர் அதேசமயம் "l will spent money, But i will not throw என்றார். அதாவது நான் யாருக்கும் தேவையில்லாமல் உதவி செய்ய மாட்டேன் என்கிறார் இதுவும் சரிதானே.