தொடர்கள்
பொது
கண்ணம்மாவின் முயல் குட்டி- மரியா சிவானந்தம்

2023927182153332.jpg

நம் பால்யத்தில் நாம் பாடி களித்த குழந்தைப் பாடல்கள் நினைவுக்கு வருகிறதா ?

எப்போதேனும் அவற்றை நம் வீட்டு மழலைகள் வாயிலாக கேட்க நேரும் போது ,நம் குழந்தை பருவத்து இனிமையை மீட்டுக் கொணர்வது போன்ற உணர்வை அவை ஏற்படுத்துகிறது .அது Twinkle twinkle little star போன்ற ஆங்கில ரைம்ஸ் என்றாலும் சரி, "பத்துக்காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்" போன்ற தமிழ்ப் பாடலானாலும் சரி, கேட்க கேட்க உள்ளம் துள்ளி குதிப்பதை நாம் உணர்வோம் .

இணைய பயன்பாடுகள் இந்த இருபது ஆண்டுகளில் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டது. அதிலும் இந்த பத்து ஆண்டுகளில் அனிமேஷன் துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது .யூட்யூப் கணக்கற்ற காணொலிகளை நமக்கு கொட்டிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான காணொலிகள் ஆயிரக்கணக்கில் இங்கு உள்ளன.

சரி, உலகத்திலேயே மிகச் சிரமமான காரியம் என்றால் எதைச் சொல்வீர்கள் ?

எனக்கு ஒரு இரண்டு வயது பேரனைக் கவனித்துக் கொள்வதுதான் . மூன்று மாதங்களாக பேரன் ரோஹனுடன் இருக்கிறேன். குட்டிச் செல்லத்தை தூக்கத்தில் இருந்து எழுப்ப தூங்க வைக்க , சாப்பிட வைக்க, ஆடம் பிடித்து அழுகையில் சமாதானப்படுத்த இவை எல்லாவற்றுக்கும் பெரிய பிரயத்தனம் தேவைப்படுகிறது . முன்பு போல, இடுப்பில் சுமந்துக் கொண்டு தெருவில் ,வேடிக்கை காட்டி, காக்கா குருவி காட்டி சமாதானப் படுத்த முடியாது. அந்த சமயங்களில் இந்த யூட்யூப் காணொலிகள் உதவிக்கு வருகின்றன. இந்த காணொலிகளைத் தேடி உள்ளே சென்றால் நாம் பார்ப்பது பிரமிப்பு தரும் வண்ணமயமான உலகம் விரிந்துக் கொண்டே போகிறது .

"Wheels on the bus go round and round," "Humpty dumpty sat on a wall"",Johnny Johnny yes papa", "Hickory Dickory dock"" Old M’c Donald had a farm., Mary had a little lamb" என்று நாம் ஒருகாலத்தில் கைதட்டி பாடி மகிழ்ந்த ஆங்கில பாடல்கள் , அழகாக அனிமேட் செய்யப்பட்டு காணொலி வடிவில் கிடைக்கிறது .

விரைவிலேயே சலிப்பூட்டும் இந்த பாடல்களை விடுத்து தேடிய போது கிடைத்த தமிழ் ரைம்ஸ் எனப்படும் குழந்தைப் பாடல்கள் ஆச்சர்யம் தருகிறது .

. "பத்துக்காசு விலையிலே பலூன் வாங்கிய" பாடலைப் போலவே ,காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு , பூனைக்கும் ,பூனைக்கும் கல்யாணமாம் , தோசை அம்மா தோசை கட கட கட என வண்டி வருகுது என்று நாம் பாடிய பாடல்கள் அனைத்தும் தமிழ் மண்ணின் பாரம்பரிய வடிவம் ,காட்சி அமைப்பு , உடை அலங்காரம் என்று அசத்தலான அனிமேசனுடன் இருக்கிறது .

'சுட்டி கண்ணம்மா" என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் பெண் குழந்தை நம் மண்ணுக்குரிய ஆடை, அணி அலங்காரங்களுடன் உலா வருகிறாள். உயிர் உள்ள குழந்தை போலவே உணர்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக வடிவமைத்து இருக்கிறார்கள் . அழகாக நடனமாடுகிறாள் .அவளுடன் கோபு, பாபு , அம்மா ,அப்பா, தாத்தா ,பாட்டி ,மாமா ,அத்தை கரடி மாமா , கியாங் குருவி, குரங்கு மாமா , பூனை , யானை என்று பல கதாபாத்திரங்கள் தமிழ் பேசி நடிக்கின்றனர் ,நடனமாடுகிறார்கள் .

பல ஆங்கில பாடல்கள் ட்யூன்கள் தமிழ் வடிவம் பெற்று காணொலியாக வலம் வருகின்றன .

Mary had a little lamb" கண்ணம்மாவின் முயல்குட்டியாகி அவள் போகும் இடமெல்லாம் பின் தொடர்கிறது."Hickory Dickory dock ,உயர்ந்த பெரிய கடிகாரம் ஆகி அசத்துகிறது .'Johnny Johnny yes papa" ."சுட்டி ,சுட்டி என்னம்மா ? மிட்டாய் சாப்பிடுறாயா சொல்லம்மா என்று மொழி மாறி அசத்துகிறது . Old M’c Donald had a farm.என்ற பாடல்தான் "எந்தன் தாத்தா பண்ணை இது " என்ற பாடல் வடிவம் பெற்று இருக்கிறது.இப்படி நிறைய பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம் .

இந்த காணொலிகள் பொழுது போக்குக்காக மட்டும் இன்றி ,குழந்தைகளுக்கு நல்ல படிப்பினை கற்பிக்கவும் செய்கிறது. "கொக்கும் நண்டும் "கதை படித்த நினைவுக்கு வருகிறதா ?.


அடர்ந்த அந்த காட்டில் உண்டு ,அங்கே ஓர் குளம் ," என்று தொடங்கும் அப்பாடலில் கொக்கு செய்யும் சூழ்ச்சியும் ,நண்டின் சாதுரியம் கூறி ,ஒற்றுமையாக வாழவேண்டும் என்று முடியும் .ஒரு காட்டின் அமைப்பு, பறவைகள் ,குரங்குகள் , கொக்கு, நண்டு , குளத்தில் துள்ளும் மீன்கள் எல்லாமே மிக அழகாக உருவாக்கி இருப்பார்கள் .

அதே போல 'கியாங் கியாங் குருவி 'பாடல் ஆபத்தில் உதவிட கற்றுத் தருகிறது. இந்த காணொளிகளில் ஓடி விளையாடு பாப்பா பாடல் போன்ற பாரதி பாடலும் இனிய இசையடன் மயக்குகிறது .

“உருளைக்கிழங்கு செல்லக்குட்டி” என்ற ஒரு பாத்திரம் அழகோ அழகு. மிகச் சிறந்த கற்பனை வளத்துடன் உருவாக்கப்பட்ட கார்ட்டூன் பாத்திரம் என்றே சொல்லலாம் .

. நல்ல இசை ,வண்ணமயமான படப்பிடிப்பு ,மனதை கொள்ளை கொள்ளும் அனிமேஷன் பாத்திரங்கள் , கொஞ்சும் தமிழ் என்று குழந்தைகளை கவர்ந்திழுக்கும் இந்த காணொளிகளை மொபைல் போனில் பார்ப்பதை விட , இப்பாடல்களை பெரிய டி .வி திரையில் குழந்தைகளுடன் ரசித்து பார்ப்பது சிறப்பு . மீண்டும் நாம் குழந்தையாகும் அந்த மணித்துளிகள் நம் துன்பங்களை மறந்து நம்மை சிரிக்க வைக்கும் , ரசிக்க வைக்கும் .