தொடர்கள்
பொது
பார்த்துபோ …மாடு முட்டப்போகுது ! –ஆர்.ராஜேஷ் கன்னா

சென்னை நகருக்குள் 5000 பசு மாடுகள் வளர்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பசுக்கள் நகர வீதிகளில் நாள் முழுவதும் படுத்து ஓய்வு எடுத்து கொண்டு ஹாயாக உள்ளது.

சென்னை நகரில் இப்போது தெருக்களில் சுற்றி திரியும் பசு மாடுகள் 2100 என மாநகராட்சி கணக்கெடுத்து இதன் 226 பசு வளர்க்கும் உரிமையாளர்கள் மீது தங்கள் மாடுகளை உரிய பராமரிப்பு மற்றும் உரிய இடத்தில் கட்டி பராமரிக்கவில்லை என ரூ 75 லட்சம் பைன் வசூல் செய்துள்ளது.

2023927110753835.jpeg

சென்னை சாலைகளில் சுற்றி திரியும் பசுக்கள் சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் , சிமெண்ட் பேப்பர் பைகள் மற்றும் மார்க்கெட்டுக்களில் கொட்டப்படும் காய்கறி ,பழங்களின் கழிவுகள் , ஓட்டல்களில் மீந்துபோகும் உணவு பொருட்கள் என சாப்பிட்டு விட்டு பிரதான சாலைகளில் கும்பலாக தங்கள் சகாக்களுடன் நகர்வலம் வந்துகொண்டு இருக்கிறது.

2023927110822789.jpeg

சாலைகளில் சுற்றி திரியும் பசுக்கள் பால் கறக்கும் போது மட்டும் அதனை வளர்ப்பவர்கள் சாலைகளில் படுத்து இருக்கும் தங்கள் பசுக்களை குழந்தைகள் போல் அழைத்து சென்று பால் கறந்து கொண்டு மீண்டும் சாலைகளில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள் என்று மாநகராட்சி குற்றம் சாட்டுகிறது.

தெருக்களில் சுற்றி திரியும் பசுக்கள் மீது காளை மாடுகள் ரொமான்ஸ் செய்ய தனியாக புறப்பட்டு தனது காதலை சாலை ஓரங்களில் திரியும் பசுக்கள் மீது காட்டிக்கொண்டிருக்கும் . இந்த நேரத்தில் தனது காதலி பசுவை வேறொரு காளை மாடு வந்து ரொமான்ஸ் விட்டால் ஏற்கனவே தனது காதலை வெளிபடுத்தி கொண்டு நிற்கும் காளை மாடு இடையே சண்டை மூளும் . இப்போது சாலையில் செல்லும் நடைபாதை வாசிகள் முதல் பெரியவர்கள் வரை மிரண்டு ஓட வேண்டிய சூழ்நிலை தான் சென்னை நகரின் தற்போதைய வேதனை நிகழ்வு என்கின்றனர் சென்னை வாசிகள்.

2023927110853853.jpeg

சென்னை கோயம்பேடு மார்க்கெட் இருப்பதால் இங்கு தெருவில் எப்போதும் சுற்றி திரியும் பசுமாடுகள் 513 , திருவல்லிக்கேணி பகுதியில் முட்டு சந்துக்கள் அதாவது குறுகலான சாலைகள் நிறைய இருப்பதால் இங்கு 370 சாலையில் சுற்றி திரியும் பசுக்கள் இருக்கிறது.மைலாப்பூர் மற்றும் நங்கநல்லூர் ஏரியாக்களில் பசுக்கள் வீடுகளில் கட்டி வைத்து வளர்க்காமல் சாலைகளில் சுற்றி திரிய வைத்து அதன் உரிமையாளர்கள் இருக்கின்றனர்.

2023927110915187.jpeg

சில நாட்களுக்கு முன்பு திருவல்லிக்கேணி சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது பசு மாடு முட்டியதால் அவர் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட நபர் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் 10 நாட்களுக்கு மேலாக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..இதனை அடுத்து பணிக்கு சென்ற கட்டிட மேஸ்திரியை திருவல்லிக்கேணி சாலையில் மாடு முட்டி தூக்கி எறிந்ததால் அவரது கை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

சரஸ்வதி பூஜை முன்னிட்டு இந்த வருடம் திருவல்லிக்கேணியில் வைக்கப்பட்ட கொலுவிற்கு செல்ல நிறைய பேர் வந்தனர். அப்போது சாலையில் சுற்றி திரியும் பசுக்கள் தங்கள் குழுவினருடன் சாலைகள் நடந்து செல்பவர்களையும் , சாலைகளில் வாகனம் ஓட்டி சென்றவர்களையும் மிரட்டி துரத்தியது. இதனால் தங்கள் நண்பர்கள் வீட்டிலிருக்கும் கொலுவிற்கு வர முடியாமல் திரும்பி சென்றது நிறைய திருவல்லிகேணி வாசிகளுக்கு பெரும் வருத்தம் ஏற்பட்டது.

2023927110944536.jpg

பத்து மாடுகள் தினமும் பால் கறந்தால் தினமும் அதன் உரிமையாளர்க்கு ரு2500 வருமானம் வருகிறது.பசு மாடு வளர்ப்பவர்கள் தங்கள் வீட்டில் ஒரு பசுவிற்கு 36 சதுர அடி இடத்தில் ஷெட் போட்டு பராமரிக்க வேண்டும் .ஆனால் பலர் தற்போது பசு வளர்த்து வந்த இடத்தில் புதியதாக வீடுகள் கட்டி வாடகை விட்டு விட்டனர். இதனால் பசு மாடுகள் நகர வீதிகளில் உலா வந்து கொண்டிருக்கிறது என்கிறார் சென்னை வாசி.

2023927111014400.jpeg

சென்னை தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் குறித்து மாநகராட்சிக்கு புகார் தெரிவிப்பவர்களை அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்து புகார் தருபவர்களை மிரட்டி செல்வது வாடிக்கையாகிவிட்டது. சென்னை மாநகர காவல்துறை மாடுகளை சாலைகளில் சுற்றி திரிவது பற்றி புகார் தந்தால் கூட எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று பொதுமக்களின் புலம்பலாக உள்ளது.

திருவல்லிக்கேணி மற்றும் மைலாப்பூர் கோயில் அருகே சாலை ஓரங்களில் கீரை கடைகள் நிறைய இருக்கிறது. தோஷ நிவர்த்திக்காக பசு மாடுகளுக்கு கீரை கொடுத்தால் நல்லது என்று பக்தர்கள் கீரை வாங்கி பசுக்களுக்கு கொடுக்கின்றனர். அப்போது பசு மாடுகள் கீரையை வேகமாக வந்து வாயில் கவ்விகொண்டு தலையை ஆட்டும் போது அதன் கொம்புகள் சாலை நடைபாதை வாசிகள் அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மாடு முட்டுகிறது என்று பக்தர் ஒருவர் தெரிவித்தார்.

2023927111122123.jpg

சென்னை மாநகராட்சி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து சென்றாலும் மாநகராட்சி ஊழியர்கள் மாடுகளை பிடிக்க வரும் போது அடுத்து இருக்கும் முட்டு சந்துக்களில் குறுகலான சாலைகளில் தங்களின் பசு மாடுகளை அனுப்பி விடுகின்றனர். இதனால் மாநகராட்சி வண்டி செல்ல முடியாமல் மாடுகளை பிடிக்க முடியாமல் சென்றுவிடும் காட்சி தினம் தோறும் நடக்கிறது.

2023927111150234.jpg

சாலையில் சுற்றி திரியும் பசுக்கள் முலம் கறந்து விற்கப்படும் பாலை உரிய தர பரிசோதனை செய்து அதன் பின் அருந்துங்கள் என்று மாநகர மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது.

2023927111222801.jpg

சென்னை நகர எல்லைக்குள் இனிமாடுகள் வளர்க்க கூடாது என்று கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது .இதில் ஏதேனும்சட்ட சிக்கல்கள் வருமா என்று ஏற்கனவே வந்துள்ள நீதிமன்ற தீர்ப்புகளை ஆராய்ந்து அதற்கான நல்ல முடிவை மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் என்று கிரேட்டர் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2023927111352317.jpeg

திருவல்லிக்கேணி நமது நண்பர் வீட்டிற்கு செல்லும் முன் நிறைய பசுக்கள் தெருவில் சுகமாக சுற்றிகொண்டு இருந்தது. நம்மை பார்த்த மாமா ஒருவர் பார்த்து போ …மாடு முட்டப்போவுது என்று நமக்கு எச்சரிக்கை மணி அடித்தார்.

என்ன தான் சட்ட திட்டம் வந்தாலும், மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகள் கட்டி வைக்காமல் தெருவில் திரிய விடுவதால் சென்னையில் நடைபாதை வாசிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தினமும் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்வது தான் நிஜம்!