தொடர்கள்
பொது
அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டம் -- சரளா ஜெயப்பிரகாஷ்

2023927154141913.jpg

Halloween பண்டிகை ஒவ்வொரு வருடமும் அக்டோபா் மாதம் 31ம் தேதி கொண்டாடப்படுகின்றது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் இப்போது குதூகலத்துக்காகவும், வியாபார நோக்கத்துடனும் கொண்டாடப்படுகிறதே தவிர, பலருக்கும் இதன் பாரம்பரியம் அறியாமல்தான் கொண்டாடுகிறாா்கள்.

2023927154252955.jpg

Halloween கொண்டாட்டம், ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலே இருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. பழங்கால ஐரோப்பிய மக்களால் 'Samhain' என்னும் விழாவாக ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழா அறுவடையை வரவேற்கும் விதமாகவும், புதிய வருடத்தின் துவக்கத்திற்கு முன்பு கொண்டாடும் விதமாகவும் இருந்தது மற்றும் சமய செயல்பாடாகவும் இருந்தது. இதில் அறுவடை கொண்டாட்டங்கள், கதை சொல்வது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, மாறுவேடமணிவது ஆகியவை இருந்தது மற்றும் bonfire (நெருப்பு) கொளுத்தப்பட்டது. 16ம் நூற்றாண்டில் வீடு வீடாகச் சென்று பாட்டு பாடுவாா்கள். வீட்டில் இருப்பவர்களிடமிருந்து பணம் பெற்று கொண்டாா்கள். உணவுகளும் பரிமாற்றப்பட்டது. இத்தினத்தில் இறந்தவா்களின் ஆத்மா பூமிக்குத் திரும்புவதாக நம்பினாா்கள். அந்த ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் பிசாசுகள் போல மாறுவேடமணிந்து கொண்டுபோனாா்கள். அவை வீடுகளில் நுழையாமலிருக்க, அதனை விரட்டுவதற்காக bonfire போட்டு கொளுத்தினாா்கள். இந்த நாளில் நல்ல ஆத்மா வீட்டிற்குள் நுழைந்து நல்லது செய்யும், சந்ததிகளை பாா்த்துவிட்டு போகும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்தது. இதற்கு bonfire கொளுத்தி, சிறப்பு சமய சடங்குகளை செய்வாா்கள். முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்வார்கள். உணவு உண்பது, மது அருந்துவது மற்றும் விளையாட்டுகள் என கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றாக அதிகரிக்க ஆரம்பித்தன. Halloween விளையாட்டுகளில் ஒருவரின் எதிர்காலத்தை கணித்துச் சொல்வதும் இருந்தது. இந்ததினத்தில் இறந்தவா்களுக்கு மெழுகுவர்த்தி ஏத்தி பிராா்த்தனை செய்யும் வழக்கமும் இருந்தது. 17ம் நூற்றாண்டில் அயர்லாந்து மக்கள் தீயசக்திகளை விரட்ட டர்னிப் (Turnip) அல்லது உருளைகிழங்கை வெட்டி, அதனுள் எரியும் நிலக்கரி அல்லது மெழுகுவர்த்தியை உபயோகப்படுத்தினாா்கள். 19ம் நூற்றாண்டில் அயா்லாந்து மக்கள் அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்தபோது காய்கறிகள் மூலம் தீயசக்திகளை விரட்டும் இந்த Halloween பாரம்பரியத்தை அமெரிக்காவிலும் பின்தொடர ஆரம்பித்தனர். இவர்கள் அமெரிக்கா வந்தபிறகு, அங்கு பூசணிக்காய் என்ற புதிய காயைப் பயிரிட்டு, இலையுதிர்காலத்தில் அறுவடை செய்தாா்கள். Jack-o-lantern க்கு சரியாக இருக்கும் என்று கருதி, பூசணிக்காயை Halloween-க்கு பயன்படுத்த ஆரம்பித்தாா்கள்.

2023927154941218.jpg 202392715502495.jpg

அமெரிக்காவில் Jack-o'-lantern அநேகமாக அனைவரின் வீட்டு முகப்பிலும் Halloween விழாகாலத்தில் கண்டிப்பாக இடம்பெறும். Jack-o'-lantern என்ற வாா்த்தையும் அயர்லாந்திலிருந்து வந்ததுதான். தீயசக்தி வீட்டிற்குள் வரவிடாமல் விரட்ட, கொள்ளிவாய் பிசாசு முகம் போல கண், மூக்கு மற்றும் வாய் பகுதியில் வெட்டி எடுத்து, அதற்குள் தற்போது பேட்டரியால் (Battery) இயங்கும் விளக்கை ஒளிரச்செய்து, பாா்க்கவே பயமுறுத்தும் வகையில் வைக்கப்படும். இதுதான் Jack-o'-lantern என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் பெயர் எப்படி வந்தது என்றால், Jack என்பவன் இறந்தபிறகு நரகத்திற்குப் போகாமல் இருக்க, Devil-ஐ தந்திரமாக ஏமாற்றிய கதையிலிருந்து வந்ததாக பழங்கதைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, Jack of the lantern என்பது தான் Jack-o'-lantern ஆனது.

2023927155417415.jpg2023927155545163.jpg

Jack-o'-lantern-காக வாங்கப்படும் பூசணிக்காய் நல்ல ஆரஞ்சு வண்ணத்தில் பெரியதாக உறுதியாக மற்றும் மென்மையாக இருக்கும்படி பாா்த்து வாங்குவாா்கள். மே மாதம் கடைசியில் பூசணிக்காய் விதை விதைக்கப்படும். இது வளர 90 லிருந்து 120 நாட்கள் வரையாகும். பூசணிக்காய் நல்ல ஆரஞ்சுநிறம் வந்தவுடன் தான் எடுப்பாா்கள். வீட்டின் முகப்பில், முன்புறம் உள்ள தோட்டத்தில், ஜன்னலுக்கு உட்புறம் மற்றும் வீட்டிற்கு வெளியே இருந்துப் பாா்க்கும்போது தெரியும் வகையில் இருக்கும் இடங்களில் எல்லாம் இந்த Jack-o'-lantern-ஐ வைக்கிறாா்கள். பூசணிக்காய்களும் மற்றும் சாமந்திப்பூக்கள் நிறைந்த செடிகளும் தோட்டத்தில் அலங்காரமாக காணப்படும்.

2023927155621787.jpg 2023927155723443.jpg

2023927155816485.jpg 2023927155913349.jpg

மக்கள் இந்த விழாகாலத்திற்கு தேவையானவற்றை வாங்குவதில் மிகுந்த ஆா்வம் காட்டுகிறாா்கள். இந்த காலத்தில் வீட்டிற்கு முன்புறம் உள்ள தோட்டத்தில் Halloween சம்பந்தமான அனைத்து பொருட்களையும் வைத்து அலங்கரிப்பாா்கள். Jack-o'-lantern, பூசணிக்காயில் மற்ற வடிவங்கள், வெளவால், பாழடைந்த பேய் பங்களா, ஒட்டடை, மண்டைஓடு எலும்புகூடு, கல்லறை போன்றப் பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பாா்கள். இந்த விழாவை குழந்தைகள் குதூகலமாக கொண்டாடுகிறாா்கள். மாறுவேடமணிய ஆடைகளையும், உபகரணங்களையும் தேர்வு செய்வதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகிறாா்கள்.

2023927160012451.jpg 2023927160107675.jpg

கடைகளில் சாக்லேட்டுகளும் மிட்டாய்களும் அமோகமாக விற்பனையாகும். இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்தபடியாக Halloween கொண்டாட்டத்தில்தான் அதிகமான அளவில் சாக்லேட்டுகள் விற்பனையாகின்றன. இங்கு பெரிய கடைகளில் கணிசமான ஒரு பகுதியை மட்டும் பிரித்து, தனிகடையாக Halloween பொருட்களை மட்டும் விற்பனைக்கு வைக்கிறாா்கள். இதில் மாறுவேடமணிய மற்றும் வீட்டை அலங்காரம் செய்ய அனைத்துப்பொருட்களும் விற்பனைக்கு இருக்கும். கடைகளில் இலையுதிர் காலத்தில் அறுவடையாகும் காய்கறிகள், பழங்கள், மஞ்சள் மற்றும் இதர வண்ணங்களிலும் பூசணிக்காய்களை வைத்திருப்பாா்கள். மண்டைஓடு அல்லது வேறு ஏதாவது வடிவங்களில் தொட்டி வைத்து, அதனுள் அலங்கார செடிகள் விற்கப்படுகின்றன.

இந்தக் காலத்தில், மக்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் அனைத்துப்பொருட்களிலும் பூசணிக்காய், விவசாயம் மற்றும் இந்த நேரத்தில் அறுவடையாகி வரும் உணவுப்பொருட்களின் படம் இருக்குமாறு பாா்த்து கொள்கிறாா்கள். பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் அனைத்திலும் பூசணிக்காய் வடிவம் மற்றும் சுவை இருக்கும்படி செய்வாா்கள். பேய் சம்பந்தமான பொருட்களின் வடிவமும் இருக்கும். Halloween கொண்டாட்டத்திற்கு ஆரஞ்சு மற்றும் கருமை நிறங்கள் தொடர்பு உடையதாக இருப்பதால், அந்த வண்ணங்களை உபயோகப்படுத்துவார்கள்.

2023927160514622.jpg

Halloween விழா கொண்டாட்டத்தில் பேய், பிசாசு போல பயமுறுத்தக்கூடிய வகையிலுள்ள உடைகள் மற்றும் தனித்துவமான பாத்திரங்களைப் (Characters) போன்ற உடைகளை குழந்தைகள் மற்றும் சில பெற்றோா்களும் அணிந்து கொள்வாா்கள். செல்ல பிராணிகளுக்கும் மாறுவேடம் போட்டு அழைத்துப்போவாா்கள்.

2023927160725915.jpg

Halloween அன்று சூரியன் மறைந்தப்பிறகு இருட்டியதும் சிறுவர்சிறுமிகள் மாறுவேடமணிந்து அனைவரும் கும்பலாக கையில் ஒரு பிளாஸ்டிக் கூடையுடன் வீடு வீடாகச் சென்று, கதவினைத்தட்டி Trick or Treat (பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா) எனக் கேட்பாா்கள். மக்கள் அவர்கள் கொண்டு வரும் கூடையில் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை போடுவாா்கள். பிள்ளைகள் அனைவரும் அந்த கூடை எப்போது நிரம்பும் என்பதிலே ஆர்வமாக இருப்பாா்கள். இந்தக் காலத்தில் பேய் பிசாசு பற்றிய கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லிகொள்வாா்கள். பேய் பங்களா சுற்றுபயணம் (Haunted House Tour) போவாா்கள். பயமுறுத்தக்கூடிய பேய்படங்களை மக்கள் பாா்ப்பாா்கள். குழந்தைகளின் பள்ளிகளில் மட்டுமல்லாமல் இங்கு நிறுவனங்களிலும் Halloween கொண்டாடப்படுகின்றது. நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் மாறுவேடமணிந்துச்சென்று விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மகிழ்கிறாா்கள். மக்கள் இந்த விழாவை வீட்டிலும் வெளியிடங்களிலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து கொண்டாடுகிறாா்கள். இதில் விளையாட்டுகள், இலையுதிர்கால உணவுகள், உடைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாா்கள்.

2023927160814833.jpg

நம் ஊரில் நவராத்திரி இப்போது தான் முடிந்திருக்கிறது. இங்கு Halloween கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றது. நவராத்திரிக்கும் Halloween பண்டிகைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். இரண்டும் அநேகமாக ஒருமாத இடைவெளிக்குள் வரும். நாம் வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைப்பதுபோல Halloween-க்கு மக்கள் வீட்டில் பேய் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தையும் வைத்து அலங்கரிக்கிறாா்கள். நாம் கொலுவில் பூங்கா அமைக்க, நம் கற்பனைத்திறனை உபயோகித்து எப்படி உருவாக்குவோமோ அதுபோல இங்கு Halloween-க்கு செய்வாா்கள். சிறுவயதில் நவராத்திரிக்கு நாம் வீடு வீடாகப்போய் சுண்டல் வாங்கி வருவதுபோல, இங்கு பிள்ளைகள் சாக்லேட்டுகள் வாங்கி வருகிறாா்கள். நாம் தீயசக்திகளை விரட்ட வெண்பூசணிக்காயை பயன்படுத்துவோம். இங்கு மஞ்சள் பூசணிக்காயை உபயோகப்படுத்துகிறாா்கள். இரண்டிலுமே தீயசக்திகளை விரட்டி, நல்சக்தி நம் வீட்டிற்கும் குடும்பத்திற்கும் கிடைக்க முயலுகிறார்கள். மக்கள் பாரம்பரியமாக நிறைய விஷயங்களை இங்கும் பின்பற்றுகிறாா்கள் என்பதனை நான் அமெரிக்கா வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.