இராமானுஜர் ஆயிரம் என்ற தலைப்பில் விசிஷ்டாத்வைதத்தை, படைத்த ப்ரம்மத்துடன் ஜீவன் சரணடைந்து சேர்வதை உணர்த்திய, உலகோர் உய்ய, முக்தி பெற, நாராயணன் நாமத்தை பிறர்க்கு உபதேசம் செய்யின் தமக்கு நரகமே கிட்டும் எனும் குருவின் சாபம் இருந்தும் உலகோரை உய்விக்க வந்த சீர்திருத்தவாதி இராமனுஜரின் 1006 ஆம் ஜெயந்தியில் குருஜீ கோபாலவல்லீதாசரின் ஆனந்தவேத கொண்டாட்டம் இங்கு.
ஆயிரம் தலை,
ஈராயிரம் கண்களுடைய, ஆதிசேஷனான,
இளையாழ்வார் ராமானுஜருக்கு ஆயிரம்...
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம்
கைங்கரியங்கள் செய்த
லக்ஷ்மணனான
உடையவர் ராமானுஜருக்கு ஆயிரம்...
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரமான
கண்ணனைக் கண்ட
பலராமனான,
திருப்பாவை ஜீயர் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
நாலாயிரம் ஆண்டுக்கு
முன்னமே, நம்மாழ்வார்
கொண்டாடி மகிழ்ந்த
பவிஷ்யதாசார்யன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி
நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம்
பக்தர்களுக்கு ஆசை ஆசையாய்
உபதேசித்த,
எம்பெருமானார் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம்
மைல்களை அக்கறையோடு
நடந்து வைணவத்தை வளர்த்த,
சடகோபன் பொன்னடி ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு,
ஆயிரம் ஆயிரம் சாகை
வேதத்தை விட ஏற்றம் தந்த
நம் கோயில் அண்ணன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம்
சாத்தாத முதலிகளை
உலகிற்குத் தந்த,
ஜகதாசார்யன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம் அடிகளுக்கு
அப்பால் சென்று
காஷ்மீரத்தில் சரஸ்வதியின் துக்கம் தீர்த்த
ஸ்ரீபாஷ்யகாரர் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பல கோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் மைல்கள்
ஆசையாய் நடந்து,
சம்பத்குமாரனை மீட்ட,
யதிராஜர் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம் இன்னல்களுக்கு
நடுவிலும், ஆயிரம் ஆயிரம் பகவத் கைங்கர்யங்கள் செய்த
லக்ஷ்மண முனி ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆண்டுகள் ஆனபின் வந்த எமக்கும்
ஆயிரம் ஆயிரமாய் அருள் செய்யும் தேசிகேந்திரன் ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரம் ஆயிரம்
ஆண்டுக்கு பின் வரப்போகும்
எம் வம்சத்தார்க்கும்,
ஆயிரம் ஆயிரமாய் நன்மை செய்யப்போகும்,
காரேய் கருணை ராமானுஜருக்கு ஆயிரம் !
ராமானுஜா ! இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டு இரும் !
ஆயிரமாவாது திருநக்ஷத்திரம் காணும்
அற்புதன் ராமானுஜருக்கு,
ஆயிரம் ஆயிரம் கோடி வந்தனங்கள் !!!
http://vedhaththamizh.blogspot.in/2017/04/blog-post_29.html?m=1
*©குருஜீ கோபாலவல்லிதாசர்*
ஆனந்தவேதம்
Leave a comment
Upload