தொடர்கள்
ஆரோகியம்
விரல்களில் விந்தை-  5. பிருத்வி முத்ரா - ரஜனி  சுப்பிரமணியம் 

20230327204953201.jpg

பாரத நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் யோகக்கலையின் ஒரு பகுதியே, யோக முத்திரைகளாகும். விரல்களைப் பயன்படுத்தி பல்வேறு முத்திரைகளை செய்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ள இவை உதவுகின்றன என்றால், அது மிகையாகாது. யோகாசனம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய இயலாதவர்கள்முத்திரைகள் செய்து பயன் பெறலாம்.

இம்முத்திரைகளை, பொதுவாக உணவிற்கு முன் காலையிலும், மாலையிலும் தரையில் விரிப்பின் மீது அமர்ந்தபடியோ அல்லது கால்பாதங்களை தரையில் பதித்தவாறு நாற்காலியில் அமர்ந்தோ பயிற்சி செய்யலாம். இரு கைகளையும் மடியின் மீது உள்ளங்கை மேல்நோக்கியபடி தேவையான முத்திரையுடன் வைத்து, மன ஒருமைப்பாட்டோடு அமைதியாகவும், நம்பிக்கையுடனும் பயிற்சி செய்வது பூரண நலம் பயக்கும்.

எந்த முத்திரையாக இருப்பினும், அதன் பலனை முழுமையாக அனுபவித்த பிறகு விட்டு விடலாம்.

இப்போது, நில முத்திரை, மண் முத்திரை, மூலாதார முத்திரை என்றெல்லாம் அழைக்கப் படுகின்ற பிருத்வி முத்ராவைப் எப்படி செய்வது என்று பார்ப்போம். மோதிர விரல் நுனியை, கட்டை விரல் நுனியுடன் இலேசான அழுத்தத்துடன் தொடுமாறு படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ள வேண்டும். சுண்டு விரல், நடு விரல், மற்றும் சுட்டு விரல்களை நீட்டியபடி வைத்துக் கொள்ள வேண்டும்.

பெயருக்கேற்ப, பூமித்தாய் தனது பல்வேறு விளை பொருள்களால் நம்மை காப்பது போல இம்முத்திரை, உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கும். இம்முத்திரையைச் செய்வதால், உடலிலுள்ள திசுக்கள் பலம் பெறுகின்றன. இது உடலில் உயிரோட்டத்தை மேம்படுத்தி மண்தன்மையையுடைய உடலின் தசைகளையும், எலும்புகளையும், நரம்புகளையும், தோலையும் வலுப்பெறச் செய்கிறது.

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, இருப்பவர்களும், சரியான சத்து இன்றி ஒல்லியாக இருப்பவர்களும் இம்முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால் எடை கூடும். இதை தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ செய்தால் அதன் பலன்கள் கண்கூடாக புலப்படும்.

தியானம் செய்பவர்கள், இந்த முத்திரையுடன் தியானம் செய்யும்போது மன ஒருமைப்பாடு அதிகரித்து ஆழமாகச் செல்லலாம். அமைதி என்றாலே நமது நினைவுக்கு வரும் புத்த பிரான் சில படங்களில் இந்த முத்திரையுடன் தோற்றமளிப்பதைக் காணலாம். இது பிராண சக்தியை அதிகரித்து நல்ல நேர்மறையான சிந்தனைகளை வலுப்பெறச் செய்கிறது. குழப்பம், மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றை நீக்கி மனதை அமைதிப் படுத்துகிறது.

வைட்டமின் குறைபாடு, மற்ற ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள், இதைத் தொடர்ந்து செய்து வந்தால் சத்து மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சத்துக் குறைப்பாட்டினால் ஏற்படும் தோல் வறட்சி, இள நரை, முடி உதிர்தல் போன்றவை நீங்கும். வயதானவர்கள் வெகுவாக அவதிப்படும் காரணமற்ற உடல் வலி, குத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலைப் பெறலாம். ஹார்மோன் குறைபாடுகள் தீரும். தைராய்டு பிரச்சனை தீரும்.

கழுத்து எலும்பு, முதுகு எலும்பு, மூட்டு எலும்பு ஆகியவை வலுப்பெறுவதால், அவற்றைச் சார்ந்த வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இது அல்சர், உடல் எரிச்சல், மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தி நம்மை வியப்புக்குள்ளாக்கும்.

எதிலும் மன நாட்டமின்மையும் அக்கறையின்மையும் கொண்டவர்களும், உடல் சோர்வாக உணர்பவர்களும் இந்த முத்திரையை 15 நிமிடங்கள் செய்தவுடனேயே உடல் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாவதைக் காணலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இந்த முத்திரையை தவிர்ப்பது நல்லது.

பலவித நன்மைகளை அளிக்கும் பிருத்வி முத்ராவைச் செய்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, ஆனந்தமாக வாழ்வோம்.

-தொடரும்