ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம். அங்கங்கே சிறு சிறு நிகழ்வுகள் இதனை தொடர்ந்து நடந்தாலும், மகளிர் தினம், காதலர் தினம், அன்னையர் தினம் போல இன்னும் பிரபலமாகவில்லை உலக புத்தக தினம்.
யுனெஸ்கோவுடன் சேர்ந்து, சர்வதேச பதிப்பாளர் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்புகள் 1995ல் துடங்கியது தான் உலக புத்த மற்றும் பதிப்பாளர்கள் தினம். இந்த தினத்திற்கு மேலும் உயிரூட்ட 2023 உலக புத்தக தினத்தை, யுனெஸ்கோ, சுதேசி மொழிகள்என்னும் கருவை மையமாக்கி இருக்கிறது. இது அழிந்து வரும் சுதேசி மொழிகளை காக்க வேண்டும் என்னும் ஒரு விழுப்புணர்ச்சி ஊட்டுவதற்கான ஒரு முயற்சி. இந்தியாவில் சுமார் 127மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றனவாம். மொழிகள் அழிந்தால் கலாச்சாரமும் அழிந்துவிடும் என்பது வருந்தத்தக்க உண்மை. தரமான புத்தகங்கள் உலகத்தை பார்க்கும் கண்ணாடியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இரண்டாம் உலகப்போரின் போது மாற்றுக்கருத்தை போதிக்கும் புத்தகங்கள் ஏராளமாக எரிக்கப்பட்டன. வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் புத்தகம் எரிப்பது என்பது அரசாங்கத்தின் அடக்குமுறையின் சாதனமாகவே இருந்திருக்கிறது. சிந்தனைகள் பரப்பப்பட்டால், மக்கள் விழித்துக்கொள்வார்கள், அது எந்த சர்வாதிகார ஆட்சியையும் விரும்பாத ஒன்று.
குட் ரீட்ஸ் (Good Reads ) என்னும் இணையதளத்தில் நாம் கட்டாயமாக படிக்கவேண்டிய புத்தகங்களை பட்டியல் இட்டிருக்கிறார்கள். அதில் முதல் பத்து இங்கே:
பொன்னியின் செல்வன், சிலநேரங்களில் சில மனிதர்கள், கள்ளிக்காட்டு இதிகாசம், ஒரு புளியமரத்தின் கதை, அம்மா வந்தாள், கி,மு, கி.பி, வந்தார்கள் வென்றார்கள், அறம், ஸ்ரீரங்கத்து தேவதைகள் மற்றும் கருவாச்சி காவியம். இந்த பட்டியல் மிகவும் நீளமானது. நான் கொடுத்திருப்பது முதல் பத்து. இதில் நாலேனும் படித்திருந்தீர்களானால் முதுகில் ஒரு தட்டு தட்டி கொள்ளுங்கள்.
புத்தகம் என்னும் சாதனம் தற்போது வேறு சில அவதாரங்களும் எடுத்துக்கொண்டிருக்கிறது. கிண்டில், ஆடியோ புக், பிடிஎப் இன்னும் பல்வேறுபரிமாணங்களில் இருக்கிறது. இருப்பினும் இந்த டிஜிட்டல் காலத்திற்கு முன் பிறந்தவர்கள் பெரும்பாலும் புத்தகத்திற்கும் அதன் வாசனைக்கும் அடிமைகள் என்பதை சந்தேகப்படாமல் சொல்லலாம். படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வது நம்மின் முக்கியமான கடமை ஆகும். இதுவரை ஆரம்பிக்கவில்லை என்றால், இனிமேல் ஆரம்பிக்கலாம். காலத்தால் அழிக்கமுடியாத இலக்கியங்கள் எந்த காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கின்றன. அதனால் படித்ததை பகிர்வதை எப்பொழுது வேண்டுமானாலும் தொடரலாம். படிப்போம் பகிர்வோம்..
இந்த காலத்து குழந்தைகளுக்கும் படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அவர்களை இப்போது கவர்ந்திருப்பது fan fiction. அதைப்பற்றி சுவாரசியமான சில தகவல்களை அடுத்த இதழில் கூறுகிறேன்.
Leave a comment
Upload