தொடர்கள்
ஆன்மீகம்
பட்டினி கிட ! யேசுவைப் பார்க்கலாம். !! கென்யாவில் காவு வாங்கிய மூடநம்பிக்கை - மாலா ஶ்ரீ

20230328152801121.jpg

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலை ஒட்டிய மாலிண்டி என்ற சிறிய கடற்கரை நகரம் அமைந்துள்ளது. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ உள்ளது. இதன் தலைமை பாதிரியார் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் கடந்த வாரம் ஒருசில உடல் மெலிந்த நிலையில், மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பண்ணையில் கென்யா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலீசாரின் சோதனையில், பூமிக்கு அடியில் 4 பேரின் பிணமும், 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

20230329083006525.jpg

அவர்களை போலீசார் மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தன்னை பின்பற்றும் மக்களிடம் ‘உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை காணலாம்’ என பாதிரியார் பால் மெக்கன்சி போதித்துள்ளார். இதை நம்பி 100க்கும் மேற்பட்டவர்கள் கடவுளை காண கடும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இதில் பலர் பசியினால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து பாதிரியாருக்கு சொந்தமான பண்ணையில் சோதனையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

அங்குள்ள நிலத்தின் பல்வேறு இடங்களில் பள்ளங்களை தோண்டியபோது, பட்டினி கிடந்து உயிரிழந்த ஏராளமான மக்களின் பிணங்கள் கிடைத்து வருகின்றன. பாதிரியார் பால் மெக்கன்சியின் பண்ணையில் இருந்து இதுவரை 90 சடலங்கள் மீட்கப்பட்டதாக கென்யா போலீசார் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி கூறுகையில், ‘‘800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாதிரியாரின் பண்ணை முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி, பிணங்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது…’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இன்னும் கொடுமை என்னவெனில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களில் சிலர், போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து, அருகிலுள்ள காட்டுப் பகுதிகளில் உள்ள புதர்களுக்குள் மறைந்துவிட்டனர். அவர்களை போலீசார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. உயிருடன் மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மிக மோசமான சூழலில் இருப்பதால், அவர்கள் உணவு கொடுத்தாலும் சாப்பிட மறுக்கின்றனர்.

மேலும், முதலுதவி சிகிச்சை பெறவும் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் மாலிண்டி நகரில் இதுவரை 213 பேரை காணவில்லை என கென்யா செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.