சென்ற வாரம் எழுத்துக்களைப்பற்றிய சந்தேகங்களைத் தீர்ப்பதாக சொல்லியிருந்தாரல்லவா?
அந்த வகையில் எனது முதல் சந்தேகம் இதோ என்றேன்.
தமிழ் மொழியில் சமஸ்கிருதம் போல் மந்திர எழுத்துக்கள் மற்றும் மந்திர சொற்கள் உள்ளனவா ?
பரணீதரன் சொல்ல ஆரம்பிக்கின்றார்.
தமிழ் மொழியிலும் சமஸ்கிருத மொழியை போல மந்திர எழுத்துக்கள் மற்றும் மந்திர சொற்கள் உள்ளது. அருணகிரிநாதர் அவருடைய கந்தர் அந்தாதியில் 54 வது செய்யுளை தகர வரிசையில் மட்டுமே உருவாக்கியுள்ளார். தகர வரிசைக்கு மூலமாக எழுத்து ‘த' ஆகும். இந்த எழுத்து தமிழ் கடவுளான முருகப்பெருமானின் மந்திர எழுத்தாகும். அதனாலேயே தமிழ் என்ற சொல்லில் உள்ள முதல் எழுத்து கூட ‘த’வில் ஆரம்பிக்கிறது.
ஒருமுறை வில்லிபுத்தூராருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒரு புலமை போட்டி நடந்தது. அருணகிரிநாதர் ஒரு பாடலைப் பாட அதற்கு வில்லிபுத்தூரார் விளக்கத்தை கொடுக்க வேண்டும். பிறகு வில்லிபுத்தூரார் பாட அருணகிரிநாதர் அதற்கு விளக்கத்தை கொடுக்க வேண்டும். இப்படியாக இருவருக்கும் போட்டி நடந்து கொண்டிருந்தது. அருணகிரிநாதர் 53 செய்யுள்களை இயற்றினார். அவை அனைத்திற்கும் வில்லிபுத்தூரார் விளக்கத்தை சரியாக கூறிவிட்டார். இதனால் அருணகிரிநாதர் முருகனை வேண்ட, முருகப்பெருமான் அவரிடம் தன்னுடைய எழுத்தான தகர வர்க்கத்தை மட்டுமே வைத்து ஒரு செய்யுளை இயற்றுமாறு கூறுகிறார். அப்படியே அருணகிரிநாதரும் ஒரு செய்யுளை இயற்ற அதற்கு வில்லிபுத்தூராரால் விளக்கம் கொடுக்க முடியாமல் தோற்றுப் போகிறார். இப்படி தகர வர்க்கத்தை மட்டுமே வைத்து இயற்றப்பட்ட செய்யுளை கீழே பாருங்கள் :
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
இந்த செய்யுளுக்கான விளக்கம் என்னவென்றால் :
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
இதேபோல் கந்த சஷ்டி கவசம் பாடலிலும் பல்வேறு விதமான மந்திர வார்த்தைகளை பாலதேவராய ஸ்வாமிகள் உள் புகுத்தி உள்ளார். பாமர மக்களால் மந்திரங்களை துல்லியமாக தெரிந்து கொண்டு கூற முடியாது என்பதால் கந்த சஷ்டி கவசத்திற்கு உள்ளேயே அவர் பல்வேறு விதமான மந்திர உச்சாடனங்களை மறைத்து வைத்துள்ளார். அதில் ஒரு குறிப்பிட்ட செயல்களை மட்டுமே கீழே பார்ப்போம் :
ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை பல்வேறு விதமாக மாற்றி (ரஹணபவச, ரிஹணபவச, விநபவசர, பவசரஹண, வசரவணப) அதற்கு சக்தி கொடுக்கக்கூடிய மந்திர உச்சாடணத்தையும் கொடுத்துள்ளார் (ரரரரரரர, ரிரிரிரிரிரிரி, வீராநமோநம, நிறநிறநிறென). இந்த மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை தகுந்த குரு மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அதேபோல்,
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் - ஐம், க்லிம் சௌ: (சௌஹு)
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் - சௌ: (சௌஹு) ஐம் (உயிர் எழுத்தாகிய ஐ) க்லிம்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் - க்லிம் சௌம் ஐம்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் - சண்முகா ஓம்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக - மேலே உள்ள மந்திர எழுத்துக்களையும் சரியாக இணைத்து உருவாக்கப்பட்ட மந்திரத்தை கூறும்பொழுது குண்டலினி யோகம் சிவபெருமானின் மைந்தன் ஆகிய குகன் அதாவது முருகப்பெருமான் மூலமாக சித்திக்கும். இந்த மந்திரத்தை எப்படி கூற வேண்டும் என்பதை ஒரு தகுந்த குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
மேலே உள்ளதும் ஒரு வகையான மந்திரம் தான். எப்படி நமது மொபைல் போன் மொபைல் டவரில் இருந்து எலக்ட்ரோ மேக்னெட்டிக் ஃபோர்ஸ் என்கிற மின்காந்த அலைகளை இழுக்கிறதோ அதுபோல மேலே உள்ள இந்த மந்திர எழுத்துக்கள் நமது உடம்பிற்குள் ஒரு வகையான அதிர்வு அலைகளை எழுப்பி நம்மை இந்த அண்டத்துடன் இணைத்து முருகனுடைய அருளையும் கொடுக்கிறது. ஆனால் இதற்கு பொருள் கூறுவோர் முருகப்பெருமானின் சிலம்பு ஒலி எப்படி இருந்ததாக கூறுவார்கள். இந்த மந்திரத்தையும் தகுந்த குருவின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் முன்பே பார்த்தது போல குறில் எழுத்துக்கள் நமது உயிரினை வளர்க்கும். நெடில் எழுத்துக்கள் மகாபிரணா என்பதால் காற்றினை அதிகமாக வெளியேற்றும். இதனால்தான் தமிழில் பொதுவாக அனைத்து மந்திரங்களும் குறில் எழுத்துக்களிலேயே இருக்கும். காக்கும் கவசங்கள் அனைத்தும் குறில் எழுத்துக்களிலும், அழிக்கும் மாரக மந்திரங்கள் நெடில் எழுத்துக்களிலும் இருக்கும்.
அடுத்ததாக பஞ்சாட்சரம் என்று சொல்லப்படுகிற நமசிவய என்ற ஐந்து எழுத்துக்கள் பற்றி பார்ப்போம். இந்த எழுத்துக்களைப் பற்றி ஔவையார், திருமூலர், அருணகிரிநாதர் மற்றும் பல்வேறு சித்தர்கள் தமிழ் மொழியில் பல்வேறு விதமான செய்யுள்களை இயற்றியுள்ளனர். வாசியோகம் மற்றும் குண்டலினி யோகம் போன்ற அனைத்து விதமான யோக கலைகளுக்கும் இந்த ஐந்து எழுத்துக்களை வைத்து பல்வேறு விதமான கிரியைகளை செய்வார்கள்.
ஔவையார் தன்னுடைய விநாயகர் அகவல் பாடலில் இந்த ஐந்து எழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் முறையை பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
மேலே உள்ள செய்யுளின் சரியான பதத்தினை பிரித்தால் இவ்வாறு வருகிறது :
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாக பொருந்தவே வந்து என் உள்ளம் தனில் புகுந்து
அந்த அனைத்து செயல்களுக்கும் சாரமானது கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஆகும். இந்த மந்திரத்தையும் ஒரு நல்ல குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக ஔவையார் அவர்கள் விநாயகர் அகவலில் :
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து என்ற வரியில் ஆரம்பித்து
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி என்ற வரியில் முடியும் மொத்த செய்யுளும் குண்டலினி யோகத்தை பற்றிய மந்திர வித்தை, தந்திர வித்தை போன்ற அனைத்தும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் மிகவும் பெரியதாக இருப்பதால் இதை முழுமையாக இங்கு கொடுக்கவில்லை.
சித்தர் இலக்கியங்களில் உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் மகரத்துடன் சேர்த்து பீஜ மந்திரங்களை உருவாக்கும் கலையினை கையாண்டுள்ளனர். உதாரணமாக உயிர் எழுத்துக்களான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ உடன் ம் சேர்த்து அம், ஆம், இம், ஈம், உம், ஊம், எம், ஏம், ஐம், ஒம், ஓம், ஔம் என்று பீஜங்களை உருவாக்கி அதன் மூலமாக சித்தர்களை அடைந்துள்ளனர். இதே போல் மெய் எழுத்துக்களிலும் ம் சேர்த்து பீஜங்களை உருவாக்கியுள்ளனர். இவைகள் சித்திக்கான பீஜ மந்திரங்கள். இதுவே முக்தி கிடைக்க வேண்டுமென்றால் ‘ம்'க்கு பதிலாக ‘ங்’ பயன்படுத்த வேண்டும்.
இசை தமிழில் உள்ள ஏழு ஸ்வரங்களை வைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு விதமான ராகங்களிலும் இப்படியான மந்திர சக்திகள் உள்ளது. அதனால் தான் பண்டைய தமிழ் செய்யுள்களில் அவை பாடப்பட வேண்டிய பண்ணையும் (ராகத்தையும்), தாளத்தையும், பாட வேண்டிய நேரத்தையும், காலத்தையும் கொடுத்து இருப்பார்கள். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ராகத்தோடு ஒரு குறிப்பிட்ட தாளத்தோடும் அந்தப் பண்ணிற்குரிய பெரும்பொழுது மற்றும் சிறு பொழுதில் நாம் பாடும் பொழுது நமது உடம்பிற்குள் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்கள் மற்றும் அதிர்வுகள் நமது உடல் மற்றும் நமது ஆத்மாவிற்கு நன்மை செய்யும்.
அடுத்த வாரம் அடுத்த கேள்வி என்று விடை பெறுகிறார் பரணீதரன்.
Leave a comment
Upload