வாழ்க்கை என்பது ஒரு பயணம் ..
இந்த வாழ்க்கைப் பயணத்தில் இனிமையும் அழகும் சேர்ப்பது சுற்றுப் பயணங்களே. இயந்திரமயமாகி விட்ட நம் அனுதின வாழ்க்கையில் இப்பயணங்கள் தரும் அனுபவம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. நாம் பயணம் செய்யம் போது, நாம் வாழும் ஊரின், நகரத்தின், மாவட்டத்தின், மாநிலத்தின் எல்லைகளை எல்லைகளைப் பாதங்களால் அழித்து இம்மாபெரும் நாட்டின் பரப்பை மேலும் விரிவாக்குகிறோம். எந்த நூலும் தர முடியாத அறிவின் பொக்கிஷங்களை பயணங்கள் திறந்து காட்டுகின்றன. நினைவுப் படிமங்களில் பயணங்கள் நீங்காத இடத்தைப் பிடித்து ,மீண்டும் மீண்டும் நினைக்க வைத்து ,ஆனந்தத்தில் நம்மை நனைய வைக்கின்றன.
பயணம் என்றால் என்னவென்று நாம் சுற்றுலா தலங்களில் காணும் வட இந்திய முகங்கள் நமக்கு உணர்த்தி விடுகின்றன. அதற்கு பணம் ஒரு தடை அல்ல என்பதை நாம் சுற்றுலா தலங்களில் பார்க்க முடியும். வட இந்தியர்கள் ஒரு கட்டு சப்பாத்திகளும் ஒரு பாட்டில் ஊறுகாயும் எடுத்துக் கொண்டு இந்தியாவையே சுற்றி விடுகிறார்கள் . ரயில் நிலையங்களில் தங்கி கொண்டும், பொது கழிவறைகளை உபயோகித்துக் கொண்டும், சின்னச் சின்ன குழந்தைகளுடனும், வயதான பெற்றோருடனும் உறவினர் சகிதம் புறப்பட்டு விடுகிறார்கள். எல்லா சுற்றுலா தலங்களிலும் சக்கர நாற்காலியில் தன் அம்மாவை அல்லது பாட்டியை, தாத்தாவை அழைத்து வந்து குடும்பமாக சுற்றுலா சுகத்தை அனுபவிப்பவர்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்கள்
நாம் சுற்றுலாவை திட்டமிடும் போதே விமானம், ஏசி ரயில், கார், நட்சத்திர விடுதி என்று பெரிய பட்ஜெட் ஒன்றை திட்டமிட்டு, செலவுத் தொகையை நினைத்து பயணத் திட்டத்தை கை விடுகிறோம். தஞ்சாவூரில் ஒரு வட இந்தியரை சந்தித்து பேசிக் கொண்டு இருக்கும் போது, அவர் "இந்தப் பயணத்துக்காக நான் வருடம் முழுவதும் சேமிக்கிறேன்" என்றார். அவர் பெரிய வியாபாரியோ , உயர் பதவியில் இருப்பவரோ அல்லர் .ஆயினும் ஊர் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் அவர் இரத்தத்தில் ஊறி இருக்கிறது .
வெளிநாட்டுப் பயணிகளின் கதைகளும் அவ்வாறே . இந்திய நாட்டின் ஆன்மிகம், கலையழகு, தொன்மை இவற்றைப் பற்றி படிக்கும் மாணவரும், சுற்றுலா பிரியர்களும் இந்நாட்டை தேடி வருகிறார்கள் .இதற்காக சேமித்தும் , பகுதி நேர வேலை செய்தும் பணத்தைச் சேகரித்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் .வடக்கே தாஜ்மகால், தெற்கே தஞ்சை கோவில் என்று இந்தியா முழுக்க தேடித்தேடி பயணம் செய்கிறார்கள் .
இயற்கை எழில் சிந்தும் மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள், பண்டைய அழகை தாங்கி இருக்கும் வரலாறு பேசும் சரித்திர புகழ் பெற்ற இடங்கள், புண்ணியத்தலஙகள், கோவில்கள், கடற்கரை பகுதிகள், நதி தீரங்கள் என்று எல்லாவிதமான அழகையும் அணிந்துக் கொண்ட நாடு நம் நாடு. தென் குமரி முதல் தொடங்கி பனி சிந்தும் இமயம் வரை நாம் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து முடிக்க நம் வாழ்நாள் போதாது . அவரவர் விருப்பத்துக்கும் ,ஆர்வத்துக்கும் ஏற்ப பயண திட்டங்களை நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம் . ஒருமுறை ஆன்மிக சுற்றுலா சென்றால் அடுத்த முறை கோடைக்கால மலை வாசஸ்தலங்களுக்கு திட்டமிடலாம் .
ஒருமுறை அலுவலக பயிற்சிக்காக கேரள சென்றேன். அந்த முதல் வகுப்பு அறையில் தனியாக பயணிப்பது பயமாகவே இருந்தது. இடையில் ஒரு பயணி வந்தார் . என்னைப் பார்த்ததும் நட்புடன் புன்னகைத்தவர் , "முதல் முறையாக கேரளா வருகிறீர்களா?" என்றார். "ஆமாம் ", என்றதும் "Welcome to God’s own country ,Enjoy your stay here" என்றார் . பிறகு கேரளவைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டே வந்தார். அம்மாநிலத்து மக்களின் அரசியல் நிலைப்பாடு, கல்வியறிவு , பார்க்க வேண்டிய இடங்கள் என்று பலவற்றையும் பற்றி பேசிக் கொண்டே வந்தார். சக பயணிகளிடம் காட்டும் இது போன்ற அக்கறையை எல்லா மாநில மக்களும் பின்பற்ற வேண்டும் .
தமிழ்நாடு, மேற்கு வங்கம் , மகாராஷ்ட்ரா , உ.பி , கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்கள் சுற்றுலா துறையில் நல்ல வருவாயை ஈட்டும் மாநிலங்கள் .இந்தியாவின் ஜிடிபி யில் 5.8% சுற்றுலா துறையில் கிடைக்கிறது . லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளையே நம்பி இருக்கிறது .அந்தமான் போன்ற பரப்பளவில் மிகச் சிறிய இடத்தில் முக்கிய தொழிலே சுற்றுலா தான் .கொரோனா ஊரடங்கில் அதிகம் பாதிக்கப்பட்டது சுற்றுலா தொழிலே. 2021க்கு பிறகு மீண்டும் இத்துறை வளர துவங்கி உள்ளது .
உலகில் அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்லும் நாடுகளில் இந்தியா 22வது இடத்தையும் ,ஆசியாவில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது. நீங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளரா ?இயற்கை ஆர்வலரா? பறவைகளை நேசிப்பவரா ? ஆன்மிகம் விரும்புவாரா ?சாகசங்களை நேசிப்பவரா ? மலை எற விரும்புகிறவரா ?பண்டைய கலைகளை நேசிப்பவரா ? உங்கள் ஒவ்வொருவரும் பார்க்க ,களிக்க ,ரசிக்க இந்தியா எங்கும் இடங்கள் நிறைந்து இருக்கின்றன .
அயல்நாட்டு பயணிகளை வரவேற்க சுற்றுலா துறை நல்ல திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் பல மாநிலங்களில் அதற்கான சாதகமான சூழ்நிலை நிலவவில்லை என்பதே நிஜம் .நல்ல சாலை வசதி, சுகாதரமான உணவகங்கள், தரமான தங்கும் இடங்கள் , சுற்றுலா தலங்களின் பராமரிப்பு இவற்றை சுற்றுலா துறையும் ,மாநில அரசுகளும் உறுதி செய்வதில்லை.
குடும்பத்துடனோ, தனியாகவோ பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுகிறது . பல இடங்களில் வழிப்பறி, திருட்டு என்று பணத்தையும், பொருளையும் இழந்து தவிக்கும் பயணிகளின் நிலைமை பரிதாபமானது. மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, எல்லா இடங்களிலும் மக்களிடம் பணத்தை பறிக்கும் நிலைமை நிலவுகிறது. சுத்தமான கழிவறைகளை கட்டி பராமரித்தல் சுற்றுலா வளர்ச்சியின் முதற்படி . இந்த ஒரு காரணத்தால் பெண்கள் பயணத்தை அனுபவிக்க முடியாமல் அல்லல் படுகிறார்கள் .
சுற்றுப்பயணம் செல்வது, நமது பார்வைகளை விசாலமாக்குகிறது, இதயத்தின் இறுக்கத்தைக் குறைக்கிறது. உறவுகளுடன் நெருங்கி வாழ உதவுகிறது . அடிக்கடி வெளியில் செல்ல வாய்ப்போ, வசதியோ இல்லை என்றாலும் வீட்டில் உள்ள குழந்தைகள் ,பெரியவர்களை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கோ, அருகிலுள்ள தோப்புக்கோ, வயல்வேலிக்கோ அழைத்துச் சென்று மாலை திரும்பி வரலாம். மறக்காமல் இட்லி ,புளிசாதம் ,உருளைக்கிழங்கு வறுவலும் கட்டி எடுத்துக் கொண்டு போனால் , செலவும் குறைவு, வயிற்றுக்கும் தொந்தரவில்லை .
வெளியில் செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். வழிவகைகள் தானே பிறக்கும் . வீடு என்னும் கூடுகளில் மட்டுமே வாழ நாம் கூண்டுக்கிளிகள் அல்ல. வானத்தை எல்லையைக் கடக்கும் பறவைகளாக நம் கூண்டைத் திறந்து சிறகசைப்போம். பிறப்பின் இனிமையை அனுபவிப்போம் .
Leave a comment
Upload