தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் - 78-- ஆர் . ரங்கராஜ்

20230231170544292.jpg

பல்லவர் காலத்தில் அன்னையிடம் தோற்கும் அரக்கன் மகிஷன், நாயக்கர்காலத்தில் தெய்வநிலைக்கு உயர்கிறான்.
மல்லையின் மகிஷன் முதல் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில் வரை மகிஷன் -- எருமையன், எருமைத் தலையை உடையவன். இன்றைய மைசூர் எனிபது மகிஷ ஊர் எனற பொருளுடையதாகும். எருமையை குலச்சின்னமாக உடைய கூட்டத்தின் தலைவனாக மகிஷனை நாம் கொள்ள வேண்டும்.

எருமைத்தலையனுடன் போரிட்டு வென்ற சிங்க வாகனமுடைய அன்னைதெய்வத்தின் வழிபாடு நம் நாட்டில் தொன்மைவாய்ந்ததாகும்.

பல்லவர் கால கலைவடிவங்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களின் மகிஷாசுரமர்த்தினி உருவ அமைதி. பல்லவர் தம் எழில்கொஞ்சும் மல்லையில் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' எனும் பாணியில் அப்போர்த்தெய்வும் கலைத்தெய்வமாய் கல்லில் தெரிகிறது. அன்னையுடன் போரிடும் மகிஷன் எனும் எருமைத்தலையையுடைய அரக்கனின் உருவ அமைதியும் அன்னையவளுக்குச் சற்றும் சளைத்ததல்ல. வெற்றி மகளுடன் தைரியமுடன் போரிடும் இந்த எருமையாக்கனின் வீரம் போற்றுப்படுகிறது.

"இச்சிற்பத் தொகுதியில் அன்னைக்கும் அரக்கனுக்கும் தலைக்குமேல் கொற்றக்குடை அமைக்கப்பட்டிருப்பது இருவரின் சமதையான தகுதியைக் காட்டுவதாக உள்ளது. அதனால்தான் அன்னை தெய்வ வழிப்பாட்டினைக் குலதெய்வ வழிபாடாகக் கொண்டு விளங்கும் இத்தென்பகுதி மக்களிடையே காலந்தோறும் தவறாது நிகழும் வழிபாட்டு வளர்ச்சி நிலையில் பல்லவர்காலத்தில் அன்னையுடன் இரு கைகைளுடன் போரிடும் மகிஷன், நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நான்கு கைகள் பெற்றுத் தெய்வநிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறான்," என்று தெரிவிக்கிறார் கோ.சசிகலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு.

20230231170615189.jpg

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பெருங்கற்க நினைவிடத்தில் எருமைத்தலை மேல் நிற்கும் பெண்தெய்வத்தின் சுடுமண் பொம்மை உருவம் இதற்குச் சான்று. மேலும் இப்பகுதியில் எருமைத்தலைக்கொண்ட தெய்வமொன்றை மக்கள் மாஷோபா என்ற பெயரில் வழிபட்டு வருவதாக டி.டி. கோசாம்பி அவர்கள் தம் ஆய்வில் குறிப்பிடுகிறார்.

எருமைத்தலையையுடைய மகிஷனும் எருமைக்கூட்டத்தினைச் சார்ந்தவனாவான். மேலும் அக்கூட்டத்தின் தலைவனுமாதலால் அவன் தம்குடியோடு முரண்பட்ட பெண்தெய்வ வழிபாட்டுடைய ஒரு குடியோடு போரிட நேர்ந்ததை மகிஷமர்த்தினி சிற்ப அமைதி காட்டும் சமூகம் பின்னணியின் முதல்நிலையாக நாம் கொள்ளவேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பிராமிக் கல்வெட்டொன்று 'எருமிநாடு குமிழ்ஊர் பிறந்த காவுடி தென்கு சிறுபொசில் இளையர் செய்த அதிட்டஅனம்' என அங்குள்ள படுக்கைக்குரியவர் எருமை நாட்டினை அதாவது மைசூரைச் சார்ந்தவர் என்பதனைச் சுட்டி நிற்கிறது. இச்சான்றுகளின் காலத்தொன்மையை நோக்குங்கால் சங்கஇலக்கியங்களிலும் கொற்றவை என்னும் போர்த்தெய்வம் குறிப்பிடப்படுவதும், இததெய்வத்தின் வளர்ச்சி நிலை தெரிகிறது.

கொற்றவை, துர்க்கை, மகிஷமர்த்தினி எனப் பலவாறாக அறியப்படும் அன்னை தெய்வத்தோடு போரிடும் மகிஷன் எனும் அரக்கனும் பல புராணங்களின் வழியே அறியப்படுகிறாம்.

மாமல்லையில் மகிஷமர்த்தினி

மாமல்லையில் மகிஷமர்த்தினி குகைச்சுவரில் மிகப்பெரிய புடைப்புச் சிற்பமாகக் காணப்படும் மகிஷமர்த்தினி சிற்பத்தின் போர்க்காட்சியில் அன்னை பல கைகளுடன் ஆயுதந்தாங்கி அரக்கனுடன் போரிடுகிறாள். அரக்கனோ இரண்டு கைகள் மட்டுமே பெற்றுள்ளான். இச்சிற்பமானது வெற்றி பெறும் தெய்வத்தின் வலிமையையும், தோற்றோடும் மகிஷனின் குரைத்த சக்தியையும் நமக்கு உணர்த்துகிறது. பல கைகளும், அவற்றில் பல்வகை ஆயுதங்களும் தெய்வங்களுக்குக் காட்டுவது அவற்றின் வலிமையை உணர்த்தும்.

மேலும் மாமல்லை கடற்கரைக் கோயிலில் வடக்குப் பக்கம் கவிழ்ந்து குப்புற விழுந்த நிலையில் பெரிய மகிஷன் உருவம் தனிச்சிற்பமாகப் பாறையில் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவமும் இரண்டு கைகளுடனேயே வடிக்கப்பட்டுள்ளது. உடலமைப்பில் நீண்ட நெடிய, ஆஜானுபாகுவான, வீரம் மிகுந்த வலிமையான தேக வடிவலைப்பையே சிற்பத்தில் அசுரனுக்குக் காட்டுகின்றனர். ஆயினும் அவன் இரண்டு கைகளுடன் மட்டும் உருள்தண்டம் தாங்கிக் காட்டப்படுதல் அவன் சக்தியை அளவிடும் நோக்கமாகத் தெரிகின்ற இயல்பான நிலையைக் காட்டி நிற்கிறது.

கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயிலில் நான்கு கைகளுடன் மகிஷன்

இவ்வாறு பல்லவர் காலத்தில் இயல்பான நிலையில் காட்டப்படும் மகிஷன், நாயக்கர் கால கலைப்பாணியாக சென்னையில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள பிற்காலச்சோழர் கலைப்பாணியில் விளங்கும் கற்றளியான குறுங்காலீசுவரர் கோயிலில் உள்ள நாயக்கர் காலத்துப் பணியாகக் காணக்கிடக்கும் பதினாறுகால் மண்டபம் ஒன்றில் தூண் சிற்பமாக நான்கு கைகளுடன் வலிமை பெற்றவனாக விளங்குவது இங்கு இச்சிற்பத்தின் ஆய்வில் சமூகப்பின்னணி காட்டும் இரண்டாம் நிலையாகும்.

முன்னதில் இரண்டு கைகளில் உருளைத்தண்டம் மட்டுமே ஆயுதமாக கொண்ட மகிஷனின் பின்னதில் நின்ற நிலையில் கைகளில் வாள், கேடயம், வில், அம்பு முதலியன பெற்றவனாக நான்கு பெருவீரனாகக் காட்டப்படுகிறான்.

இந்த இரண்டாம்நிலை சமூகப் பின்னணி யாதெனில், பல்லவர் காலத்தில் சிவன், விஷ்ணு, முருகன், கணபதி, அன்னை தெய்வம் போன்ற பெருந்தெய்வங்களே
வலிமையுடையனவாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால் விசயநகரகாலத்தில் இரண்டாம் நிலையில் புராணங்கள் காட்டும் அனுமன், கருடன், சக்கரத்தாழ்வார், நந்தி, வீரபத்ரர், மகிஷன் முதலிய தெய்வங்கள் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

"விசயநகரகாலத்தின் கலைப்பாணியிலும், அதனைத் தொடர்ந்த நாயக்கர் பாணியிலும் புராணக்கதைத் தொடர்பான சிற்பங்கள் மண்டபத்தூண்களில் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட தூண்களின் சிற்பங்கள் மக்களின் வழிபாட்டுக்குரியவையாக ஆயின. கருவறை நோக்கிச் செல்லவியலாத அக்காலச் சமூகத்தின் வருணநிலையில் இவ்வாறு கோயில் மண்டபங்களில் தெய்வச்சிற்பங்களை வடிவமைத்து அதனை வழிபடச்செய்தலை விசயநகர, நாயக்கர் கலைப்பாணி செய்வித்தது எனவும் கருத இடமுண்டு. மேலும் மேற்கண்ட அரசுகளின் காலமானது விளிம்பு நிலை மக்களின் கலை, சமயம், பண்பாட்டு நிலையினைச் சீர்தூக்கி நின்றன. சிற்றிலக்கியங்களின் உருவாக்கமே இதற்குத் தகுந்த சான்றாகும்", என்று கூறுகிறார் கோ.சசிகலா.

இறைவனை மக்களின் தலைவனாகவும், குடிகளின் தலைவனை அம்மக்களுக்கு இறைவனாகவும் காட்டும் இந்நிலை அச்சமூகத்தில் தழைக்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் தூண்களில் அமைக்கப்பட்ட புராணக்கதைச் சிற்பங்கள் பலவும் மக்களின் வழிபாட்டு நம்பிக்கைக்குரியனவாக வலிமைமிக்க தோற்றத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளன.

குறுங்காலீசுவர் கோயில் மண்டபத்தூண்கள் சான்று

மேலும் இத்தூண் சிற்பங்கள் பல பாமரமக்களின் பூசையினை நித்தம் ஏற்றுக்கொள்வனவாக இன்றும் காணக்கிடக்கின்றன. இதற்குக் குறுங்காலீசுவர் கோயில் பதினாறுகால் மண்டபத்தூண்களில் உள்ள சிற்பங்களுக்கு இன்றும் நடைபெறும் ஆராதனைகளே சான்றாகும்.

இக்குறுங்காலீசுவரர் கோயிலின் மகிஷன் அமைந்துள்ள அதே மண்டபத்தின் மற்றொருதூணில் இராவணன் பத்துத்தலைகளுடன் தசமுகனாக ஆற்றல் பொருந்தியவனாகக் காட்டப்பட்டுள்ளதும் இங்கு ஒப்பிடத்தகுந்ததே.

பல்லவர் காலத்தில் அன்னையிடம் தோற்கும் இயல்பான அரக்கன் பின்னால் நாயக்கர்காலத்தில் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறான்.

20230231170637136.jpg
கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுவரை கால்நடைவளர்ப்புச் சமூகமே முல்லை நிலப்பகுதியான தொண்டைமண்டலப்பகுதியில் நிறைந்திருந்ததை இங்குப் பரவலாகக் கிடைக்கும் நடுகற்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் காடு கொன்று நாடாக்கும் காடவன்கோன்களின் ஆட்சிபெற்றிருந்த நிலப்பகுதியும் இதுவேயாகும். ஆக, இத்தொன்மையான கால்நடை சமூகத்தினரிடையே எருமையைத் தலைமையாகக் கொண்ட ஒரு குடிக்கும், வேளாண் சமூகக் குடித்தெய்வமான தாய்த்தெய்வத் திற்கும் இப்பகுதியில் நடந்த ஒரு பூசலைக் காட்டுவதாகவே பல்லவர்கால மகிஷமர்த்தினி சிற்பங்கள் அமைந்துள்ளன.

எனவே பல்லவர்காலத்தில் அமைந்து சோழர் மற்றும் விசயநகர நாயக்கர்களின் பிற்காலச் சீரமைப்பு கலைப்பாணிகளைப் பெற்று விளங்கும் குறுங்காலீசுவரர் கோயிலின் தூண் சிற்பமான மகிஷஉருவம் பல்லவர் மல்லையின் மகிஷனின் சிற்பமைதியிலும் மேன்மை பெற்று விளங்குவதை காட்டுகிறது. இதற்கு அச்சிற்பங்கள் உணர்த்தும் சமூகப் பின்னணி காரணமாகவும் அமைந்துள்ளது.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)