ஆள்காட்டி விரலால் ஏதோ சுட்டிக் காட்டிக்கொண்டு வந்த நம்ம பரணீதரன் சட்டென சுட்டெழுத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
மேலே கொடுத்துள்ள பத்து படங்களை கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.
முதலில் இருப்பது நாம் பொதுவாக ஒரு மனிதரையோ அல்லது ஒரு பொருளையோ சுட்டுவதற்கு பயன்படுத்தும் சுட்டு விரல் என்ற ஆள்காட்டி விரல். அதற்கு அடுத்த படம் பரதநாட்டிய கலையில், ஊசியை காட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சுசி முத்திரையாகும். இதை நடனத்தில் ஒன்று, நூறு, கடவுள், சக்கரம், பானை செய்யும் சக்கரம், உலகம், சூரியன் போன்ற பலவகையான விஷயங்களை குறிக்கும் முத்திரையாகும். இதற்கு அடுத்து உள்ள முத்திரை வர்ம கலையில் உள்ள சக்கர முத்திரையாகும். இது எதிரிகள் இடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் முத்திரையாகும். அடுத்தாக உள்ள மூன்று படங்களில் உள்ள சிவ துவார பாலகர்களை பாருங்கள் இவர்கள் தங்களுடைய ஆள்காட்டி விரலை தூக்கி மிரட்டும் பாவத்தில் வைத்துள்ளனர் அதாவது கோவிலுக்கு வரும் பொழுது கடவுளுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதை காட்டுவதற்கான முத்தரையாகும் இதை சிற்பக்கலையில் தர்ஜனி ஹஸ்தம் என்று கூறுவர். அதற்கடுத்து உள்ள நான்கு படங்களில் உள்ள வைணவ துவார பாலக பாலகிகளை பாருங்கள். இவர்களுமே தங்களுடைய ஆள்காட்டி விரலை தூக்கி மிரட்டும் பாவத்திலேயே உள்ளனர் இதுவும் தர்ஜனி ஹஸ்தம் தான். இப்படியாக நடனம், சிற்பம், தற்காப்பு, பொது வாழ்க்கை என அனைத்து விதமான விஷயங்களுக்கும் ஆள்காட்டி விரல் ஆகிய சுட்டு விரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுட்டெழுத்து
‘அ’, ‘இ’, ‘உ’ ஆகிய மூன்று எழுத்துக்களும் சுட்டெழுத்துக்கள் ஆகும். ‘அ’ என்ற எழுத்து தூரத்தில் இருக்கும் ஒரு கண்ணிற்கு தெரியாத பொருளைக் குறிக்க பயன்படும் எழுத்து. 'இ' என்பது கிட்டே இருக்கும் ஒரு பொருளைக் குறிப்பது. 'உ' என்பது தூர மற்றும் கிட்டே இரண்டிற்கும் நடுவே இருக்கும் ஒரு பொருளையோ, மேலே உள்ள பொருளையோ, பின்னால் உள்ள பொருளையோ குறிப்பது. உதாரணம் அவன், இவன், உவன், அவள், இவள், உவள், அவர், இவர், உவர், அது, இது, உது, அவை, இவை, உவை, உம்பர், உப்பக்கம், உதுக்காண் போன்றவை.
அகச்சுட்டு மற்றும் புறச்சுட்டு என்று சுட்டெடுத்து இரண்டு வகைப்படும் என்றவர், தொடர்ந்து,
ஒரு சொல்லிற்குள்ளேயே சுட்டெழுத்துக்கள் சேர்ந்து பிரிக்க முடியாமல் இருப்பது அகச்சுட்டு ஆகும். எடுத்துக்காட்டாக ‘அ’வன், ‘இ’வள், ‘உ’வர். இந்த சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை பிரித்து விட்டால் இந்த சொல்லிற்கு பொருள் கிடையாது.
ஒரே சொல்லிற்குள்ளேயே சுட்டெழுத்துக்கள் சேர்ந்து இருந்து அதை பிரிக்க முடிந்தால் அது புறச்சுட்டு ஆகும். எடுத்துக்காட்டாக ‘அ’ப்பையன், ‘இ’வ்வூர், ‘உ’ப்பக்கம். இந்த சொற்களை நாம் பிரித்தோமானால் அ + பையன், இ + ஊர், உ + பக்கம் என்று பிரிக்கலாம். இப்படி பிரித்த பிறகு கூட அந்த பையன், இந்த ஊர், உள் பக்கம் என்று நம்மால் பொருள் கொள்ள முடியும்.
இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் சுட்டெழுத்துக்களை சற்று மாற்றி சுட்டுத் திரிபாக பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக அப்பையன் என்பது அந்தப் பையன் என்று மாறி உள்ளது. அதுபோல இவ்வீடு என்பது இந்த வீடு என்று மாறி உள்ளது.
சிறப்பு செய்தியென அவர் தருவது - நமது கைகளில் கூட சுட்டு விரல் என்கிற ஆள்காட்டி விரல் உள்ளது. அந்த விரலை நாம் ஒருவரையோ, ஒரு பொருளையோ சுட்டுவதற்கு பயன்படுத்துகிறோம்.
தமிழ் சினிமா பாடல்களில் கூட நமது அருகில் இல்லாமல் நம் கண்ணிற்கு தெரியாமல் இருக்கும் ஒருவரே குறிப்பதற்கு ‘அ’ என்ற எழுத்தையே பயன்படுத்தி உள்ளனர். எடுத்துக்காட்டாக :
“அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்”, “அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே”, “அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா”, “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்” போன்றவை.
நமது அருகில் உள்ள ஒருவரை குறிக்கும் பாடல்கள் : “அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான் கைகளிலே போட்டு விட்டான் இவனுக்கென்று எதை கொடுத்தான் எலும்புடனே சதை கொடுத்தான்”, “யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்”, “இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி”, “ஆரோ இவர் யாரோ-என்ன பேரோ அறியேன்” போன்றவை.
‘உ' சுட்டு தமிழ்நாட்டில் இப்போது வழக்கத்தில் இல்லை. பழந்தமிழில் உள்ளது. பக்தி இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் போன்ற இலக்கியங்களில் ‘உம்பர் கோனே’, ‘உம்பர் கோமானே’ போன்ற சொற்கள் பல இடங்களில் வரும். இதில் ‘உம்பர்’ என்ற சொல் தேவர்களை குறிக்கும். தேவர்கள் பொதுவாக மேல் லோகத்தில் இருப்பதால் அவர்களை ‘உ’ என்ற பதத்தை வைத்து அழைக்கிறார்கள். இலங்கைத் தமிழில் ‘உப்பக்கம்’ என்று ஒரு சொல் இன்றைக்கும் உள்ளது. அதனுடைய பொருள் பின்பக்கம் என்பது.
இந்த சுட்டு எழுத்துக்களைப் பற்றி இலக்கண ஆசிரியர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர் :
அ இ உ அம் மூன்றும் சுட்டு - தொல்காப்பியம்
அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே - நன்னூல்
இடையே, அவரிடம் என்னைத் துரத்திக்கொண்டிருந்த வினா ஒன்றைக் கேட்டேன்.
தமிழ் எழுத்துக்கள், தனித்தோ அல்லது இன்னொரு எழுத்துடன் சேர்ந்தோ நாம் பேசும் தமிழ் மொழி அனைத்து வார்த்தைகளும் பா(भा)வத்துடன் பேச முடிகிறது என்கிறீர்களா?, அதாவது முழுமையான எழுத்துக்கள் உள்ள மொழி என்கிறீர்களா?
உதாரணத்திற்கு சமஸ்கிருதத்தில் க, ச, ட,த ஆகியவை நான்கு ஒலி நிலைகளில் வருவதும், மேலும், ஸ, ஷ, ஶ, ஜ, போன்ற பிற எழுத்துக்களின் ஒலி நிலைகளும் தமிழில் இல்லையே?
இந்த ஒலி நிலைகளுக்கு தமிழ் மொழியில் இடமுள்ளதா?
அதாவது பா(भा)வம் மறுக்கப்படுகிறதா?
இதற்கென அவர் பொழிந்த பதில் இது தான்.
நாம் முன்பே பார்த்தது போல் தமிழ் மொழியில் மூச்சினை குறைவாக செலவிட்டு ஆயுளை கூட்டுவதற்காகவே சங்கம் வைத்து ஆராய்ச்சி செய்து தமிழ் எழுத்துக்களை உருவாக்கினர். அதனால் தமிழ் எழுத்துக்கள் பொதுவாகவே குறைந்த மூச்சுக்காற்று செலவிலேயே உச்சரிக்கப்படுகிறது. வடமொழியில் உள்ள ‘மஹா ப்ராணா’ எழுத்துக்கள் தமிழில் கிடையாது. அதனால் பந்தம்(Bandham) என்ற சொல்லை பந்தம்(Pantham) என்றே கூற வேண்டும். பாவம்(Bhaavam) என்று சொல்லை பாவம்(Paavam) என்றே கூற வேண்டும். அதுபோல ஸ்ரீராமன் என்ற சொல்லை சீராமன் என்றே கூற வேண்டும். சீர்காழி என்ற ஊரின் உடைய பழைய பெயர் வைணவ நூல்களில் காழிச் சீராம விண்ணகரம் என்றே உள்ளது. அதாவது ஊரின் உடைய பெயர் காழி. அதை வைணவர்கள் சீராம விண்ணகரம் (ஸ்ரீராம விஷ்ணு நகரம் (விண்ணு நகரம்)) என்று கூறுகிறார்கள். அதுபோல ஸ்ரீதேவியை சீதேவி என்றே கூறுவார்கள். ஸரஸ்வதி என்ற சொல்லை சரச்வதி என்று உச்சரிக்க வேண்டும். ‘ஸ’ என்ற எழுத்தை நீங்களே உச்சரித்து பாருங்கள். அப்பொழுது உங்களுடைய வாயிலிருந்து நிறைய காற்று வெளியே செல்லும். அதே ‘ச' என்று உச்சரித்துப் பாருங்கள். காற்று மிக குறைவாகவே வாயில் இருந்து செல்லும். அதுபோல ஜடை என்று சொல்லி சடை என்றே கூற வேண்டும். ஜடில வர்மன் அல்லது ஜடைய வர்ம பாண்டியன் என்பவரே சடையவர்ம பாண்டியன் என்று அழைக்கப்படுகிறார். இதனாலேயே ‘ஸ’, ‘ஶ’, ‘ஜ’ ஆகிய மூன்று எழுத்துகளுக்கும் ‘ச' எழுத்தையே நாம் பயன்படுத்துகிறோம். ‘ஷ’ என்ற எழுத்திற்கு ‘ச’ அல்லது ‘ட’ எழுத்தை பயன்படுத்துகிறோம். உதாரணமாக ஷண்முகன் என்று சொல்லை சண்முகன் என்றும் விஷம் என்ற சொல்லை விடம் என்றும் பயன்படுத்துகிறோம். ‘ஹ’ என்று எழுத்திற்கு இணையாக ‘க' அல்லது ‘அ’ எழுத்தை பயன்படுத்துகிறோம். உதாரணமாக அந்தஹாரம் என்று சொல்லை அந்தகாரம் என்று கூறுவோம். அதுபோல ஹாலகாலம் என்று சொல்லை ஆலகாலம் என்று கூறுவோம். அதனால் தமிழ் மொழியை நாம் பேசும் பொழுது சொல்லிற்கு முன்னாலும் சரி, சொல்லிற்கு இடையிலும் சரி, சொல்லிற்கு கடைசியிலும் சரி நாம் ஒரே மாதிரியான உச்சரிப்பையே பயன்படுத்த வேண்டும். இலக்கணம் புரியாதவர்களே தமிழ் உச்சரிப்புகள் சொல்லிற்கு தகுந்தார் போல் மாறும் என்று கதை கட்டிக் கொண்டுள்ளனர். இப்படி உச்சரிப்புகள் சொல்லிற்கு தகுந்தார் போல் மாறும் என்று சூத்திரங்களோ அல்லது இலக்கண விளக்கங்களோ எந்த விதமான தமிழ் இலக்கண நூல்களிலும் இல்லை. அதனால் எழுத்துக்கள் எந்த காலத்திலும் அதனுடைய உச்சரிப்பு விதிகளை மீறுவது கிடையாது. நாம் தான் சமஸ்கிருதத்தையும் தமிழையும் குழப்பிக்கொண்டு, இரண்டையும் ஒன்றாக வைத்துக்கொண்டு, அதற்கு புது விதமான இலக்கண நெறிகளை புகுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவரே தொடர்ந்து,"உதாரணமாக ஸரஸ்வதி என்ற சொல்லை சரச்வதி என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று கூறினேன் அல்லவா. அப்போது தமிழில் இந்த சொற்களை சரியாக உச்சரிக்க முடியாதா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதற்காகத்தான் தமிழில் கலைமகள் என்று பெயர் உள்ளது. கலைவாணி என்றும் நாம் அழைக்கிறோம். நம்மால் ஒருவேளை ஒரு சொல்லை வடமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு சரியாக மாற்ற முடியவில்லை என்றால் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை பயன்படுத்த வேண்டும். லக்ஷ்மி அலைமகள் என்றும் பார்வதி மலைமகள் என்றும் இதனால் தான் தமிழில் அழைக்கப்படுகிறது
இதனால் தமிழ் ஒரு முழுமையான மொழி என்பது நமக்கும் நன்றாகவே புலனாகும் என்கிறார் உறுதியாய்.
அடுத்த வாரம் வினாவோடு வருகிறேன் என்று சொல்கிறார். அதாவது, வினா எழுத்து.
Leave a comment
Upload