சாதனைப் பெண்களை தொடர்ந்து சந்திப்பது சந்தோஷமான ஒன்று. ஆனால் சாதனைப் பெண்களை நாம் எங்கே சந்திப்போம் என்பது நம்மால் சொல்ல முடியாத ஒன்று. அப்படித்தான் இந்த சாதனைப் பெண்ணை ஓவியச் சந்தையில் பார்க்க நேரிட்டது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவில் இந்த ஓவிய கண்காட்சி/ ஓவியச் சந்தை நடைபெறும். சாமானியர்களும் கலை படைப்புகளை பார்த்து ரசித்து வாங்கி மகிழ வேண்டும் பேசி பழக வேண்டும் என்ற நோக்கத்தில் மயிலாப்பூர் டைம்ஸ் நாளிதழ் நிறுவனர் வின்சென்ட் டிசோசா இதனை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த முறை நடந்த போது ஓவியங்களையும் ஓவியங்களையும் பார்வையிட சென்று இருந்தோம். அப்போதுதான் ஜெயஸ்ரீ என்கிற இனியாளை சந்தித்தோம். இவர் சென்னை ஓஎம்ஆர் பகுதியைச் சார்ந்தவர் ஓவியத்தின் மேல் ஆர்வம் உடையவர் தன்னுடைய ஓவியக்கலையை வெளிப்படுத்த சரியான வழியினை யோசித்துக் கொண்டிருந்தவர், நிறைய குழந்தைகளுக்கும் ஓவியங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டு வந்தவர். பலருக்கும் இலவசமாக அவர்கள் கேட்கும் வண்ண ஓவியங்களையும் டிசைன்களையும் வரைந்து தந்து கொண்டிருந்தவர்.
ஒரு முறை வெளிநாட்டில் இருந்து வந்த தன் உறவினருடைய பையன் அவருக்கு பிரிட்ஜ் மேல் ஓட்டும் ஒரு காந்தத்தில் ஆன கலை படைப்பை பரிசாக தந்திருக்கிறார். அதை ஆசையோடு வாங்கியவர் அதில் ஒரு வெளிநாட்டு முக்கிய இடம் சிறிய சிற்பமாய் வடிக்கப்பட்டு இருந்ததை பார்த்தார். அவர் மனதில் அப்போது தோன்றிய யோசனை ஏன் நம்முடைய கலாச்சார அடையாளங்களை இது போல் செய்யக்கூடாது? பிரிட்ஜ் மேல் ஓட்டும் காந்த பொம்மைகள் எதனால் வெளிநாட்டில் இருந்தே மட்டும் வர வேண்டும்? என்று யோசித்தவர் தனக்கு அருகில் தான் தினமும் பார்த்து பழகிய மகாபலிபுரம் கடற்கரை கோயில்களை ஒரு சிறிய சிற்பம் ஆக்கி அதன் காந்தம் வைத்து அதை ஓட்டும் படி செய்ய முயற்சி எடுத்தார். சாதாரண களிமண்ணில் செய்யும் போது அது அவ்வளவு சரியாக வரவில்லை பலவித பொருள்களை உபயோகித்து இதை செய்து பார்த்து இறுதியில் ரெசின் எனப்படும் கோந்து போன்ற இன்னும் சரியாக சொன்னால் அரக்கு, அதனோடு சில பொருட்களை கலந்து அவர் இதற்காக பயன்படுத்த முடிவு செய்து அதை செயல்படுத்தினார். முடிவு அற்புதமான வடிவங்கள் அவருக்கு கிடைத்தன.
இதில் அவரின் தனித்தன்மை அவர் இதை மூன்று விதமான பொம்மைகளாக வடிவமைப்பதில் இருந்தது ஒன்று கலை படைப்புகள் கலாச்சார சின்னங்கள் உதாரணமாக கடற்கரை கோயில், பெருவுடையார் கோயில் போன்றவை இரண்டாவது பாரம்பரிய சின்னங்களான ஜல்லிக்கட்டு, அரச மர பிள்ளையார் போன்றவை மூன்றாவது குழந்தைகளுக்கு விலங்குகளின் சிரிக்கும் முகங்கள் மற்றும் கார்ட்டூன் கேரக்டர்கள்.
இந்த மூன்றிலும் அவருடைய ஓவியத் திறமை அவரது வண்ணம் தீட்டுவதில் வெளிப்பட்டது. கிட்டத்தட்ட எல்லா படைப்புகளும் அவர் கையாலயே வண்ணம் தீட்டப்படுகின்றன ஆனால் என்னால் அவற்றுக்குள் ஒரு சீரான ஒற்றுமையை கண்டு உணர முடிந்தது. இதை எப்படி கொண்டு வருகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது,. ஒவ்வொரு பொருளையும் தனிப்பட்ட ஒரு ஓவியமாகவே நான் பார்க்கிறேன் அதில் என்னுடைய முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இவ்வளவு பொருட்கள் இங்கே பார்த்தாலும் இவை எல்லாம் ஒன்று ஒன்றாக நான் செய்தவை தான் என்று அவர் சொன்ன போது, ஓவியத்திலும் தான் எடுத்துக் கொண்ட செயலிலும் அவருடைய அர்ப்பணிப்பு தன்மை வெளிப்பட்டது. இந்த முறை தான் முதல் தடவையாக தனது படைப்புகளை காட்சிப்படுத்தியிருப்பதாக சொன்னார். அந்த ஓவியச் சந்தையில் அவருடைய காந்த கலை படைப்புகள் நன்றாக விற்பனை ஆயின. நாமும் அவரை பாராட்டி இன்னும் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்களை சொல்லி அடுத்த ஆண்டு இன்னும் நிறைய கலை படைப்புகளோடு ஓவியச் சந்தையில் சந்திப்போம் என்று அவருக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.
சந்தித்து உரையாடிய காணொளி இதோ வாசகர்கள் பார்வைக்கு...
Leave a comment
Upload