வாடகை வீட்டை காலி செய்து விட்டு மனாஸ்கார்டனில் கட்டப்பட்டுள்ள
மகனின் சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம்.
தரைத்தளத்தில் மகன் மருமகள் பேரனுடன்.
முதல் தளத்தில் நானும் என் மனைவியும். தரைத்தளத்திலிருந்து முதல்
தளத்துக்கு செல்லும் படிக்கட்டுகள் ஏற சிரமமில்லாமல் காலுக்கு இதமாய்
வடிவமைக்கப்பட்டிருந்தன.
மொட்டைமாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு அருகே கணினி மேஜை
அமர்ந்திருந்தது. படுக்கையறையின் கணக்குப்பிள்ளை பேடில் கதை எழுதி
மனைவியிடம் கொடுத்து விடுவேன். மனைவி கணினியில் டிடிபி செய்வாள்.
மானிட்டர் திரையில் கதையை திருத்தி சம்பந்தபட்ட பத்திரிகைகளுக்கு மின்னஞ்சல்
பண்ணி விடுவோம்.
மனைவி வகிதா வீட்டு சமையலையும் கவனித்துக் கொண்டு மகன்மருமகள்
கிளினிக் போன நேரத்தில் பேரனை பாதுகாத்துக் கொண்டு நான் எழுதி கொடுக்கும்
கதைகளை டிடிபி செய்துகொண்டு வீட்டை நெருங்கியிருக்கும் பக்கத்து நகர்
வீட்டிலிருந்து நல்லதண்ணீர் எடுத்துக் கொண்டு புதுவீட்டை எலக்ட்ரீஷியன், பிளம்பர்,
கார்பென்டர் வைத்து சீரமைப்பு செய்துகொண்டு ஒரு அஷ்டவதானியாக
செயல்படுவாள்.
“எல்லாம் என்னால செய்யமுடியுது ஆனா சமையல் பாத்திரங்களை கழுவி
வீட்டை கூட்டி வீட்டை வாராவாரம் ஒரு தடவை கழுவி துடைக்க ஒரு பணிப்பெண்
தேவைப்படுகிறாள். கால்வலி இல்லேன்னா அந்த வேலைகளையும் நானே
பாத்திருவேன்!” என்றாள் வகிதா என்னிடம்.
எதிர்வீட்டு பெண்மணியிடம், நகரின் முகப்பு பெட்டிக்கடைகாரரிடம்,
பால்காரரிடம், தண்ணீர்கேன் போடுபவரிடம் “வீட்டு வேலை செய்ய ஒரு லேடி
இருந்தா சொல்லுங்க!” என்றாள். வகிதா.
மூன்றாவது நாள் மண்வாசனை ரேவதி உயரத்தில் ஒரு சுடிதார் பெண் வந்து
நின்றாள்.
“வீட்டு வேலை செய்ய ஆள் கேட்டீங்களாமே…”
“ஆமா..நீயார்?”
“என் பெயர் தீபா. உங்க நகருக்கு பக்கத்து தெருவுலதான் வசிக்கிறேன்.”
“உன் வீட்டுக்காரர் என்ன செய்ரார்?”
“கொத்தனார் வேலை!”
“எனக்கு பதினைஞ்சு வயசிலேயே கல்யாணமாய்ருச்சு. எனக்கு ரெண்டு
மகள்கள். என் அக்கா புருஷனோட சண்டை போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா.
அவளோட ரெண்டு மகள்களையும் நான்தான் வளர்க்கிறேன்!”
பேசும் தீபாவின் கண்களையும் உடல்மொழியையும் உன்னித்தாள் வகிதா
செய்யவேண்டிய வேலைகளை சொல்லி “மாதம் மூவாயிரம் தந்திடுரேன். நீ
வேலை செய்றப்ப காலைடிபனையும் டீயையும் தருகிறேன். திருட்டும் பொய்யும்
இல்லேன்னா உன்னை என் மகமாதிரி பாத்துப்பேன். ரம்ஜானுக்கு ரம்ஜான் உனக்கு
புதுட்ரஸ் வாங்கித்தருவேன்…”
“நாலாயிரம் கொடுங்க!”
“இல்லை மூவாயிரம்தான். மாசத்துக்கு ரெண்டு ஞாயிற்றுக்கிழமை நீ லீவு
எடுத்துக்கலாம்..”
தீபா தலையாட்டினாள். “சரி, நாளைலலிருந்து நான் வேலைக்கு வருகிறேன்!”
“மகிழ்ச்சி!”
“என்கிட்ட சிம் இருக்கு செல்போன் இல்லை. பழைய செல்போன் சார்ஜரோட
இருந்தா கொடுங்க. யூஸ் பண்ணிக்கிரேன். அய்நூறு ரூபா அட்வான்ஸ் குடுங்க
சம்பளத்ல கழிச்சிக்கலாம்!”
நான்காயிரம் பெறுமானமுள்ள ஒரு பழைய கைபேசியையும் ஒரு ஐநூறு
ரூபாய் தாளையும் கொடுத்தாள் வகிதா.
மறுநாள் காலை தீபா வேலைக்கு வந்தாள். வேலை செய்யும் தீபாவின்
பின்னாடியே வகிதா நின்றிருந்தாள்.
கதை எழுதும் என்னை வெறித்து பார்த்தாள் தீபா. “பெரியவர் என்ன செய்ரார்?”
“கதை எழுதுரார்!”
என் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்.
வேலையை முடிக்கும் போது “அம்மா..உங்க வீட்ல எக்ஸ்ட்ரா குக்கர் கேஸ்
ஸ்டவ் இருந்தா கொடுங்க. எனக்கு அவசரமா தேவைப்படுது!”
“இருக்குதான்னு பாக்ரேன்!”’
“சரிம்மா.. நான் கிளம்புறேன்!” கிளம்பிப்போனாள் தீபா. வகிதாவின் முகத்தில்
தீவிரமான யோசனை படர்ந்தது.
மறுநாள் தீபா வேலைக்கு வரும்போது தன்னிரு மகள்களை கூட்டி வந்தாள்.
அந்த சிறுமிகள் ரிமோட்டை எடுத்துக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தனர்.
பேரனுக்கு டப்பாவில் வைத்திருந்த பிஸ்கெட்டுகளை யாரையும் கேட்காமல்
மொசுக்கினர். சிறுசிறு பொம்மைகளை எடுத்து கவுனின் பாக்கட்டில் சொருகிக்
கொண்டனர்.
எட்டு வயது சிறுமி எங்கள் ஒரு வயது பேரனை தூக்க முயற்சித்தாள். வகிதா
குறுக்கிட்டு தடுத்தாள். “வேண்டாம்மா உன்னால தூக்க முடியாது கை தவறி
போட்ருவ.. விட்டுரு!’
தீபா வேலைக்கு வந்து 15நாள் ஆகியிருந்தன.
வேலை செய்து முடித்து தீபா போன பத்தாவது நிமிடம் வகிதா முகம் கறுத்து
அமர்ந்திருந்தாள்.
“என்னப்பா.. ஒரு மாதிரி இருக்க?”
“ஒண்ணுமில்ல..”
“கால்வலி இன்னும் இருக்கா?”
“ஆமா.. குறையல..”
“சாந்தில காண்பிச்சம் சரியாகலேன்னா கோட்டக்கல் போய் ஆரிய வைத்ய
சாலால காட்டுவோம். நெட்ல போன் நம்பர் எடுத்து அப்பாயின்மென்ட் வாங்றேன்!”
இன்னும் சில நாட்கள் கழித்து..
தீபாவின் அக்கா குழந்தைகளும் தீபாவின் குழந்தைகளுடன் சேர்ந்து வந்தன.
அந்த நான்கு சிறுமிகளின் கண்களும் வீட்டுக்குள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன.
அந்த நான்கு சிறுமிகளுக்கும் பிரட்ஆம்லெட் கொடுத்தாள் வகிதா.
திரவசோப் கலந்த நீரை பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு முதல்தளம்
போனாள் தீபா. மாப் ஸ்டிக்கும் வைத்திருந்தாள்.
வகிதா மாடிக்கு ஓடயத்தளித்தாள்.
தீபா கத்தினாள். “யாரும் மாடிக்கு வராதிங்க. என் வாளிலயிருந்த லிக்குட்சோப்
படிக்கட்டுகள்ல கொட்டிருச்சு. யாரும் வந்தா வழுக்கும்!”
சிலபல நிமிடங்கள் சுணங்கி அமர்ந்திருந்த வகிதா பூனைபாதம் வைத்து
மாடிக்கு போனாள்.
தனது லேடீஸ்பேக்கை திறந்து பார்த்தாள்.
“வீட்டை முழுவதும் துடைச்சிட்டேன் நான் கிளம்புறேன்ம்மா..” தீபா
குழந்தைகளுடன் அவசர அவரசமாய் கிளம்பிப் போனாள்.
கீழே வந்தாள் வகிதா. அவளது கையில் லேடீஸ்பேக் இருந்தது.
“என்னப்பாச்சு?”
“நேத்து மாலைமதில இருந்து வந்த அய்யாயிரம் ரூபாயை ஏடிஎம்ல எடுத்து
வச்சிருந்தேன். தீபா வீட்டை துடைக்ற சாக்குல பணத்தை தூக்கிட்டு போய்ட்டா..”
“நல்லா பாத்தியா? பணத்தை வேற எங்கயாவது வச்சிருக்க போற..”
“பணத்தை எடுத்திட்டு படிக்கட்டுகள்ல லிக்குட் சோப்பை அவ கொட்டி
விட்டுட்டா..”
“வேற எதுவும் அவ திருடலையே?”
“போன வாரம் தினமலர்லயிருந்து வந்த 3500ரூபாய் திருடிட்டு போய்ட்டா.
நான்தான் சொல்லாம மறைச்சிட்டேன்!”
“ போலீஸ்ல புகார் பண்ணலாமா?”
“வேண்டாம் வேண்டாம். நாளைக்கு காலைல அவ வருவா. வேலைக்கு
வேணாம்னு சொல்லிட்டு கணக்கை செட்டில் பண்ணி திருப்பி அனுப்ச்சிருவம்!”
“எடுத்த பணத்தை திருப்பி கொடுக்க சொல்வோம். குடுத்திட்டான்னா
வார்னிங்கோட அவளை வேலைல கன்டினியூ பண்ணுவோம்!”
“என்னை என்ன வெறும் ஒரு 60 வயது கிழவின்னு நினைச்சிட்டீங்களா? நான்
ஒரு பத்துதலை உள்ள காவல்தேவதை. ஒரு தலையால மக குடும்பத்தை, ஒரு
தலையால மகன் குடும்பத்தை, ஒரு தலையால புருஷனை, ஒரு தலையால உங்க
ரத்த உறவுகளை, ஒரு தலையால என் ரத்த உறவுகளை, ஒரு தலையால உங்க
எழுத்து பணிகளை பாத்துப்பேன் பாதுகாப்பேன். தீபா பல்வேறு ஆடம்பர கனவுகள்
உள்ள மீன்கொத்தி. கொஞ்சம் அசந்தா நீங்க அவகிட்ட தவறா நடக்க முயற்சி
பண்ணீங்கன்னு கூட லட்சக்கணக்ல நஷ்டஈடு கேட்பா. நம்ம பேரனின்
நகைகளுக்காக அவனை காயப்படுத்த துணிவா. புருஷன் குடிச்சிட்டு குடிச்சிட்டு
வீட்ல படுத்து கிடக்கான். தன்னுடைய தேவைகளுக்காக தீபா திருடுரா. திருட்டை
அவ பிறப்புரிமையா கருதுறா. திருட அவ பிள்ளைகளுக்கும் கத்துக் கொடுத்திருக்கா
பெரிய அசம்பாவிதத்தை தீபா நிகழ்த்தும் முன் நான் இந்த வீட்டை பாதுகாக்கனும்…”
“வேலைக்காரி இல்லேன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவியே?”
“பரவாயில்லை. கால்வலியோட கால்வலியா எச்சில் பாத்திரங்களை கழுவி
வீட்டை கூட்டிட்டு போறேன்… நாம வாடகை வீட்ல இருந்தப்ப ரஷிதான்னு ஒரு
லேடி வேலை பாத்துச்சுல்ல. அந்த லேடிய கான்டாக்ட் பண்றேன்!”
-அடுத்த நாள் காலை தீபாவின் கணக்கை செட்டில் பண்ணினாள் வகிதா.
“எங்கிருந்தாலும் நல்லா இரு!”
தான் திருடவே இல்லை என்கிற சாதிப்பு அழுகையுடன் கிளம்பிப் போனாள்
தீபா.
-நான்கு நாட்களுக்கு பிறகு.
தீபாவின் இருமகள்கள் கதவை தட்டினர்.
“என்ன?”
“அம்மா கொஞ்சம் குழம்பு இருந்தா வாங்கிட்டு வர சொல்லுது!”
பதினைந்து கிலோ ரேஷன் அரசியும் பத்துகிலோ கோதுமையும் ஒரு
எவர்சில்வர் டப்பாவில் கறிக்குழம்பும் கொடுத்து வகிதா “பத்ரமா எடுத்திட்டு போ..”
“ஒரு திருடி குடும்பத்துக்கு எதுக்கு உதவி பண்ற?”
“நம்ம குடும்பத்து பாதுகாப்புக்காகதான் அவளை வேலையை விட்டு
நிறுத்தினேன். அவளின் திருட்டுக்கு சிக்காமல் அவள் குடும்பத்துக்கு மனிதாபிமான
முறைல உதவுவது தப்பே இல்லை.. என்னுடைய பத்தாவது தலையில் பிறர்
துன்பத்தை தன் துன்பமாக பாவிக்கும் ‘எம்பதி’ நிறைய இருக்கு. எனக்கு சிலபல
விஷயங்களில் ஆன்ட்டி ஹீரோயின் தீபாவ ரொம்ப பிடிக்கும். வீட்டுக்குள் புக
முயன்ற பாம்பை காட்டுக்குள் படமெடுக்க விட்டு ரசிப்பது தவறில்லையே-” என்றாள்
வகிதா. அவளின் பத்து தலைகளும் கண் சிமிட்டின.
Leave a comment
Upload