தொடர்கள்
கதை
சக்தி- சத்யபாமா ஒப்பிலி

2023020112220048.jpg

தட்டுத்தடுமாறி நடந்து கீழே விழப்போன தன் பேத்தியை வேகமாக தூக்கச் சென்றார் மாணிக்கம்.

"விடுங்கப்பா அவளே எழுந்திருப்பா" என்று கண்டிப்பாக சொன்ன தன் மகளைத் திரும்பி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

எதற்கெடுத்தாலும் பயந்து தன்னிடம் வந்து புலம்பும் சக்தியா இது!

"குழந்தை அடிகிடி பட்டுக்க போகுது"

"பரவாயில்ல. சமாளிச்சுப்பா"

சரி என்று தலையை ஆட்டிக் கொண்டே வாசலுக்கு சென்றார் மாணிக்கம்.

சாய்ந்து நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார். கிட்டத்தட்ட ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் வரை, சக்திக்கு அப்பா தான் எல்லாம். பள்ளியோ, கல்லூரியோ, வேலையோ நாள் தவறாமல் அவர் தான் கொண்டு போய் விடுவார்.

"அவளைத் தனியாத்தான் போக விடுங்களேன் ஏழு கழுதை வயசாச்சு இன்னும் எப்ப பார்த்தாலும் கூடவே போயிட்டு இருப்பீங்களா? அவளும் பழகிக்கட்டுமே!"

மனைவி தினமும் கடிந்து கொள்வாள்.

"சும்மா இரும்மா எல்லாம் பாத்துக்கலாம். அப்பா கூட வந்தா பாதி விஷயத்துக்கு நான் கவலைப்பட வேண்டாம்",

சொல்லிவிட்டு வேகமாக தன் தந்தையின் பின் போய் வண்டியில் அமர்வாள்.

சக்தி சிறுவயதிலிருந்தே அப்படித்தான். அவள் குடும்பத்தில் ஒரே பெண். மாணிக்கத்தின் சகோதரருக்கும் இரண்டு மகன்கள்; சகோதரிக்கும் ஒரு மகன். அவர் மனைவி பார்வதியின் வீட்டிலும் எல்லாருக்குமே ஆண் வாரிசு தான். அதனால் சக்தி குடும்பமே கொண்டாடும் ஒரு பெண். எதையுமே தனியாக செய்ததில்லை அவள். அவளுக்கு அந்த அவசியமும் தேவைப்படவில்லை. தன் காலில் சிறு முள்ளு குத்தி விட்டால் கூட ஊரையே கூட்டும் ஒரு பெண். எப்பொழுதுமே தன்னை இளவரசியாக பாவிக்கும் ஒரு பெண்.

அவருக்கே அறியாமல் ஒரு பெருமூச்சு விட்டார்.

சக்தி இப்போது சற்று இறுகி விட்டாள் போல அவருக்குத் தோன்றியது. குழந்தை வளர்ப்பில் தன்னை சற்று விலக்கி வைப்பது போல் இருந்தது.

தான் வளர்த்த முறையில் எதனால் தன் மகளுக்கும் நம்பிக்கை போனது? நல்ல படிப்பு, நல்ல கணவன். இருவரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். அழகான ஒரு பெண் குழந்தை எல்லாவற்றுடனும் ஒரு இறுக்கமும் வந்திருந்தது.

"அழுதால் அழட்டும் அப்பா. அவளுக்கு இல்லை என்பது பழகணும்."

இது முன்தினம் எதன் தொடர்பாகவோ நடந்த ஒரு உரையாடல்.

"ஒரு வயசு குழந்தைக்கா! ரொம்ப ஓவரா போற சக்தி"

மறுப்பு எதுவும் சொல்லவில்லை சக்தி. அவள் தன் கணவனுடன் மும்பையில் இருக்கிறாள். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகின்றன. மேல்படிப்பும் சென்னையிலேயே படித்து, அலுவலகமும் சென்னையிலேயே இருந்து திருமணம் ஆனபின் வேறு வேலை கிடைத்து. கணவனுடன் மும்பை சென்றாள். இரண்டு வருடங்கள். அவள் தலைகீழாக மாறிப் போனாள்.

ஏதோ ஒரு கவசம் அணிந்து கொண்டது போல் தோன்றியது மாணிக்கத்திற்கு.

அம்மாவிடம் குழந்தையை கொடுத்து விட்டு தன் தந்தையின் அருகே வந்து அமர்ந்தாள் சக்தி.

"என்னாச்சுப்பா அமைதியா ஆயிட்டீங்க?"

"ஒன்னும் இல்லையே மா"!

"உங்க கிட்ட கொஞ்சம் கடினமா பேசுற மாதிரி தோணுதாப்பா?"

"ஏதோ என்கிட்ட நீ சொல்ல நினைக்கிற மாதிரி தோணுது கொஞ்சம் யோசித்துப் பார்த்தா, நான் வளர்த்த முறையையே ஏதோ கேள்வி கேக்கற மாதிரி இருக்கு."

" நீங்க சொல்றது பாதி சரிதான். நீங்க என்ன வளர்த்த முறையை நான் எந்த கேள்வியும் கேட்கல. நான் பார்த்து வளர்ந்தது உங்களால் அனுமதிக்கப்பட்ட உலகத்தை மட்டும் தான்.

ஆனா அந்த நீர்க்குமிழிலிருந்து வெளியில வந்து பார்க்கும்போது நிறைய அதிர்ச்சி இருக்கதான் செஞ்சுது அப்பா!. "

அதிர்ந்து போய் பார்த்தார் மாணிக்கம்.

"பயப்படாதீங்க அப்படி ஒன்னும் பெருசா நடக்கல. சின்ன சின்ன விஷயங்களுமே பெரிய பாடம் சொல்லிச்சுபா. உங்க கால்லயே நின்னு, உங்க கண்ணாலே உலகத்தை பார்த்து, நல்லவங்க மட்டுமே சுத்தி நிக்க நான் வளர்ந்தாச்சுப்பா. என் பொண்ணுக்கு அது கிடைக்குமான்னு தெரியல. அவளுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு. அவள நல்லா படிக்க வைக்கணும்னா ரெண்டு பேரும் வேலைக்கு போகணும். அவ தனியா இருக்கக்கூடிய சந்தர்ப்பம் நிறைய வரும் . தெளிவாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருக்குப்பா.

" அது சரிதாம்மா! ஆனா இப்போலிருந்தே வா?"

"ஆமாப்பா இப்ப நான் என்ன வளர்த்துட்டு இருக்கேன் அவள சரியா வளக்க!"

" ரொம்ப பயமுறுத்தற

மும்பை ரொம்ப மோசமா? "இல்லப்பா மும்பை மட்டும் மோசம் இல்லை"

"நல்லவங்களே உலகத்தில் இல்லை என்கிறாயாமா?"

"இருக்காங்கப்பா ஆனா எப்போதும் அவர்களுடைய இருப்போமா என்று உத்தரவாதம் இல்ல. நீங்களும் அம்மாவும் எனக்கு சொல்லனும்னு கூட நினைக்காத ஒரு விஷயம் இப்போ பள்ளிக்கூடத்திலேயே இருக்குப்பா.

என்னது என்பது போல் பார்த்தார்.

ரெண்டு வயசு குழந்தைக்கு உன்னை யாரெல்லாம் தொடலாம் எங்கெல்லாம் தொடலாம்னு சொல்லி தரோம்பா.

அவளை உலகம் எப்படி எல்லாம் பார்க்கும்ன்னு அவளுக்கு தெரியணும் எல்லாரையும் ஒரு அணு அளவு சந்தேகமாவது படணும்கிறது ஒரு பால பாடமாவே இருக்கு.

என் பாட்டி காலத்துல படிக்கிறதுக்கு போராடுனாங்க அம்மா காலத்துல படிச்சிட்டு வேலை பாக்குறதுக்கு சண்டை போட்டு இருப்பாங்க என் காலத்துல படிப்பு வேலை எண்ணம் போல் திருமணம் என்று போராட்ட களம் இன்னும் விரிஞ்சுட்டு போகுது. என் பொண்ணுக்கு இத தவிர வேறு சில காலங்களும் இருக்குப்பா போராட. அதுக்கு நான் அவளை தயார் படுத்தனும் இல்ல?

கவலையுடன் தன் மகளைப் பார்த்தார். " நீ பேசாம உன் பொண்ண என்கிட்ட விட்டுட்டு போயிடேன். நாங்க வளத்துக்கறோம்"

ஒரு புன்னகையுடன் அவரைப்பார்த்து,

"அப்பா நான் சொன்னதை நீங்க புரிஞ்சுக்கல பிரச்சனை மும்பைல மட்டும் இல்ல எல்லா இடத்திலும் இருக்கு. தப்பிக்க முடியாதுப்பா தயார் படுத்திக்கணும்.

"பயமா இருக்குமா" மறுபடியும் அதே சொன்னார். கண்கள் கலங்கியது.

சக்தி, அவர் கைகளை பற்றிக்கொண்டு, "அப்பா நீங்க எதுக்கு எனக்கு சக்தி என்று பெயர் வைத்தீர்கள்?"

பாரதி கொடுத்தாம்மா! "அன்பு கனிந்த கனிவே சக்தி! ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி!"

தைரியமான பொண்ணாத் தான் வளக்கணும்னு நினைச்சேன் அப்புறம் எது மாத்திச்சேன்னு தெரியல."

எல்லா தைரியத்தையும் அந்த பேருக்குள்ள வைச்சுருந்தீங்கப்பா!அந்தப் பேருதான் எனக்கு அடையாளமே! நிதானமா ஒரு தடவை ஒரு நாளைக்கு என் பேர நான் யோசிச்சேன்னா எப்படியோ தைரியம் வந்துரும். அதுதான் என் பலமும் கூட. என் பொண்ணுக்கு நான் துர்கா ன்னு பெரு வைச்சதே அதுக்காகத்தான்.

‘துர்கானா என்னன்னு சொல்லி சொல்லி வளர்ப்பேன்பா’.

இது முடியாத ஒரு உரையாடலாக போய்க் கொண்டிருந்தது. மாணிக்கம் கண்களை மூடி அமர்ந்திருந்தார். மனம் சஞ்சலமாகவே இருந்தது. எழுந்து பூஜை அறைக்கு சென்றார், பராசக்தி முழு உருவப் படமாய் சுவரில் இருந்தாள். மிகப்பெரிய படம். அந்த உருவம் வீடெல்லாம் பரவி இருப்பது போல் அவருக்கு எப்போதுமே தோன்றும். கண்கள் மூடி முன்னே கை கூப்பி நின்றார்.

நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும்,

நிறைந்த சுடர்மணிப்பூண்!.

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்

இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ! ..

வஞ்சனையின்றிப் பகையின்றி சூதின்றி

வையக மாந்தரெலாம்

தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்

சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!

வாய் முணுமுணுத்தது.

சக்தி, "இதையும் சேர்த்து சொல்லுங்கப்பா" என்று அருகில் வந்து நின்று அமைதியாய் சொன்னாள்.

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி

மாநிலம் காக்கும் வழியே சக்தி

தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி

சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி

வீழ்வு தடுக்கும் விறலே சக்தி

விண்ணை அளக்கும் விரிவே சக்தி

ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி

உள்ளத்து ஒளிரும் விளக்கே சக்தி

கைகூப்பி தந்தையும் மகளும் வேண்டிக் கொண்டிருக்க துர்கா தட்டுத் தடுமாறி நடந்து பூஜை அறையில் நிலைப்படியில் கைவைத்து மெதுவாகத் தாண்டி, இருவருக்கும் நடுவில் வந்து, அவர்களைப்போலவே கை கூப்பி நின்றது.