தொடர்கள்
அனுபவம்
பெண்ணென்றால் பாம்பும் நடுங்கும் - புதுமொழி - பாம்பு பிடிக்கும் அலமேலுவுடன் சிறப்பு பேட்டி - ப.ஒப்பிலி.

20230204093039525.jpg

எச்சூர் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் வீட்டிலிருந்து காலை ஆறு மணிக்கு துவங்குகிறது அவரது அன்றாட வாழ்க்கை.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி, ஆனால் முப்பத்தியெட்டு வயதாகும் கா அலமேலுவுக்கு அப்படியொரு பயம்இருப்பதாக தெரியவில்லை. சிறுவயது முதலே விஷப் பாம்புகளை பிடிக்க பழகியதால் அவருக்கு பாம்பை கண்டால் பயம் என்ற பேச்சுக்கேஇடமில்லை.

இருளர் சமூகத்தைச் சார்ந்த இரண்டாம் தலைமுறை பாம்பு பிடிக்கும் அலமேலுவின் தொழில் ஒரு வித்தியாசமான மற்றும் ஆபத்துகள்நிறைந்த ஒன்று. "என் தந்தை மற்றும் தாய் இருவரும் இந்த தொழிலில் இருந்து விட்டு பிறகு பணி மூப்பின் காரணமாக பாம்பு பிடிக்கும்வேலையே விட்டு விலகினர். அதற்குப்பின் என் தம்பி மற்றும் நான் இந்த தொழிலில் ஈடுபட்டுவருகிறோம்.

மாறிவரும் சூழலுக்கேற்ப பாம்பு பிடிக்கும் முறைகளும் மாறியுள்ளதாக கூறுகிறார் அலமேலு. தன் தாய் தந்தையர் காலத்தில் பின்பற்றப்பட்டசில நுட்பங்கள் இப்போது உள்ள பாம்பு பிடிப்பவர்கள் கடைபிடிப்பதில்லை. உதாரணமாக, எனது தந்தை கையில் ஒருதொடைப்பக்குச்சியுடன்தான் பாம்பு பிடிக்க கிளம்புவார். வயல் வெளிகளில் உள்ள பொந்துகளில் அந்த குச்சியை நுழைத்து பாம்புஇருக்கிறதா என்று பார்ப்பார். பாம்பு இருந்தால் குச்சியில் சிறு அசைவு தெரியும், அதை உணர்ந்து கையை பொந்துக்குள் விட்டு லாவகமாகபாம்பின் வாலை பிடித்து வெளியே இழுத்து விடுவார்.

20230204092733187.jpeg

இப்போது பாம்பு பிடிப்பவர்கள் குச்சிகளை எல்லாம் எடுத்து சென்று பாம்புகளை பிடிப்பதில்லை. பாம்பு உடம்பின் படிமங்கள் மண்ணில்தெரியும். அதை வைத்து பாம்புகளின் தடத்தை அறிந்து அவற்றை பிடிப்போம், என்கிறார் அலமேலு.

அதே போல முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் சில மருத்துவ குணங்கள் கொண்ட பச்சிலைகளை அரைத்து சிறிய உருண்டைகளாகவாயில் அடக்கிக் கொள்வார்கள். இந்த மூலிகைகள் விஷ முறிவு தன்மை கொண்டவை. அதனால், விஷப் பாம்புகள் கடித்தால் அவர்களுக்குஉடனடியாக அந்த விஷத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தாது. இப்போது இந்த மூலிகை உருண்டைகளை யாரும் செய்ததும் இல்லைபயன்படுத்துவதும் இல்லை, என்கிறார் அவர்.

வயல்வெளிகளில் அருகில் விஷப்பாம்புகளின் நடமாட்டம் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும். குறிப்பாக வெயில் காலங்களில்பொந்துகளில் இருந்து பாம்புகள் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மட்டுமே வெளியே வரும். எனவே அலமேலுவின் பனி காலை ஆறு மணிக்கு ஆரம்பித்துவிடும். பாம்புகளை பிடித்து பைகளில் விட்ட பின்பு அவைகளை உடனடியாக இருளர் கூட்டுறவு சங்கத்தில் கொண்டுகொடுத்து விடுவார். அதிக நேரம் பாம்புகளை வெயிலில் வைத்திருந்தால் அவைகள் சூடு தாங்காமல் இறந்து விட வாய்ப்புண்டு, என்கிறார் அவர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு விதமான விஷ பாம்புகள் உள்ளன. நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டைவிரியன் மற்றும் கட்டு விரியன். இந்த நான்கு விதமான பாம்புகள் பிடிக்க நான்கு பைகள் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் ஒரு பாம்பினம்மற்றொரு பாம்பு இனத்துடன் இணக்கமாக இருக்காது. அவைகள் ஒன்றை ஒன்று கொத்தி கொன்று விடும். எனவேதான் ஒவ்வொரு பாம்புஇனத்திற்கும் தனி தனியாக பைகளை எடுத்து செல்வோம் என்றார்.

கட்டு விரியனும் நல்ல பாம்பும் கடித்தால் அது மனிதர்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மற்ற இரண்டு - கண்ணாடி விரியன் மற்றும்சுருட்டை விரியனின் விஷம் மனித உடலின் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இந்த நான்கு விஷ பாம்புகளில் கட்டு விரியன் பாம்பின் விஷம் மனிதஉடம்பில் வேகமாக பரவி ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த பாம்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் விஷ முறிவு சிகிச்சைமேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் அலமேலு.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கட்டு விரியன் பாம்பினால் பாதிக்க பட்டவர்கள் அதிகம், ஏனெனில்இந்த பாம்புகள் இரவினில் வெளியே வந்து இறை தேடக் கூடியவை. வயல் வெளிகளில் சிறு நீர் கழிக்கவோ அல்லது வேறு இயற்கைஉபாதைகளை முடிக்க செல்லும் பலர் இந்த பாம்பால் தீண்டப்பட்டு, உரிய நேரத்திற்கு சிகிச்சை பெறாமல், இறந்து விட்டதாக அவர் கூறினார்.

தனது பத்து வருட பணிக் காலத்தில் ஆயிரக் கணக்கான பாம்புகள் பிடித்துள்ளார் அலமேலு. "சிறு வயது முதலே பாம்புகளை பார்த்து என் தாய்தந்தையாருடன் அவற்றை கையாண்டதால், பாம்புகள் பற்றிய பயமே எனக்கு இருந்ததில்லை. மேலும் இந்த பத்து வருட பணியில் இது வரைஒரு முறை கூட என்னை பாம்புகள் தீண்டியதில்லை. அதற்கு காரணம் வெகு லாவகமாக பாம்புகளை பிடிப்பது. இந்த நுணுக்கம் எனதுபெற்றோரிடமிருந்து நான் கற்றது," என்கிறார் அலமேலு.

இப்பொழுது மூன்றாம் தலைமுறையாக எனது இரண்டாவது மகள் சந்தியா என்னுடனும் என் கணவர் காளியுடனும் பாம்பு பிடிக்க வருகிறார்.பள்ளி படிப்பில் நாட்டம் அதிகம் இல்லை என்பதால் இந்த தொழிலில் சேர விருப்பம் தெரிவித்தார் எனது மகள். நானும் எனது கணவரும் மகிழ்ச்சியோடு எனது மகளை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வருகிறோம் என்று பெருமிதம் பொங்க கூறுகிறார் அலமேலு.

20230204092840879.jpeg

(படம் எடுக்கும் போது படம் எடுக்க தில்லு வேணும்)