தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பெண்மணிகளின் பதில் - மரியா சிவானந்தம்.

20230203184915666.jpg

ஆறும் அது ஆழமில்லே

அது சேரும் கடல் ஆழமில்லே

ஆழம் அது ஐயா

அந்த பொம்பிளை மனசு தான்யா

என்று ஒரு பாடல் கேட்டு இருக்கிறோம். பெண் மனதின் ஆழத்தையும் அதன் ஆற்றலையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை.

ஒரு செய்தியைக் கேட்டதும், அதற்கு எதிர் வரும் கருத்துக்கள் ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கும் .ஆனால் பெண்கள் இடையே அதே செய்தியை சொல்லிப் பார்த்தால் வெவ்வேறு விதமாகவே பதில்கள் வரும். ஏனெனில் பெண்கள் தனித்துவம் மிக்கவர்கள்.

படைப்பின் அழகே அதுதான் . ஆண் முதலில் படைக்கப் பட்டதாகவும் ,பின்னரே பெண் படைக்கப்பட்டதாகவும் பைபிள் சொல்கிறது. ஆணிடம் இருந்த குறைகளை களைந்து , மேலும் அழகு, நுண்ணறிவு, திடம், அன்பு போன்ற குணங்களை அபரிமிதமாக பொழிந்து பெண்ணைப் படைத்ததாகவும் நான் கருதுகிறேன் .Man is a model ,Woman is a masterpiece என்று ஒரு சொற்றொடர் உண்டு .

மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் மாதம் பிறந்தாலே ,இப்போது நம்மூர்கள் அமளி துமளி படுகின்றன. உழைக்கும் மகளிருக்கு உரிமைகளை மீட்டுத்தர தொடங்கிய இந்த தினத்தை வணிக மயமாக்கி , பணமாக்கி கொள்ள நிறுவனங்கள் தவறுவதில்லை. பெண்களுக்கு சிறப்பு தள்ளுபடி தர எல்லாருமே முன் வருகிறார்கள். இந்த காலத்தில் ஊடகங்கள் , முக நூல் ,ட்விட்டர் என்று பெண்களை ஏகமாக புகழ்ந்து தள்ளுவதை காண முடியும் .

அன்னையாய் மகளாய் ,ஆசிரியையாய், வழிகாட்டியாக பெண்களை வருணித்து கொண்டாடி தீர்ப்பார்கள். கவிதை மழை அருவியாக கொட்டும் போது நாம் புகழ் மழையில் நனைந்து மெய் சிலிர்த்து நிற்கிறோம் .ஆகா , ஆண்கள் நம்மைப் பற்றி எத்தனை உயர்வாக நினைக்கிறார்கள் என்று புல்லரித்து போவோம்!.

வழக்கமான இந்த பழக்கத்தை மாற்றி , "நீங்கள் ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பார்வையில் ஆண் என்பவர் யார்?" என்ற ஒரு கேள்வியை பெண்களுக்கு வைத்தேன். இந்த கருத்து பரிமாற்றலில், இளம் பெண்கள் , ஐடி அலுவலர்கள் , மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என்று இளையவர் முதல் மூத்தவர் வரை கலந்துக் கொண்டனர் .

அவர்கள் பதில்கள் இதோ :

குணசுந்தரி : (எழுத்தாளர் )

ஆண் என்பவர் யார் என்றால் மகளுக்கு சிறந்த தந்தையாக, தாய்க்கு சிறந்த பிள்ளையாக, மனைவிக்கு சிறந்த கணவனாக, சகோதர சகோதரிகளுக்கு சிறந்த சகோதரனாக மொத்தத்தில் ஒரு சிறந்த ஆண் மகனான சிறந்த நாட்டின் குடிமகனாக , மனிதநேய மிக்கவராக இருக்கவேண்டும்.

சாந்தி : (அரசு அலுவலர் -ஓய்வு )

ஆண் பெண்ணின் சிறந்த துணை , நண்பர், வழிகாட்டி . சரியாக நெறிப்படுத்தப்பட்ட ஆண் ஒரு மாணிக்கம் .

கீதா கண்ணன்: (அரசு அலுவலர் -ஓய்வு )

நல்ல பாதுகாவலர். தந்தை, கணவர், சகோதரர், மகன், பேரன் என்று எந்த உறவாக இருந்தாலும் , அன்பையும் பாதுகாப்பையும் தருபவர்.

ஸ்தனிஸ்லாஸ் மேரி :(அரசு அலுவலர் -ஓய்வு )

கரடுமுரடானவனாய் கண்ணுக்குத் தெரிந்தாலும், உள்ளத்தின் ஆழத்தில் அன்பையும், ஆறுதலையும், அரவணைப்பையும், தியாகத்தையும், உழைப்பையும் தன்னைச்சார்ந்தவருக்காய் அர்பணித்து வாழும் அழகானவர்கள்.பத்துமாதம் வயிற்றில் சுமந்த தாய் உயர்வானவள் என்றால் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காய் வாழ்நாள் முழுவதும் சுகமான சுமைதாங்கிகளாய் சுற்றிவரும் தந்தையர்கள் மிக உயர்வானவர்கள்...

மகனாய், சகோதரனாய், தோழனாய், கணவனாய், தகப்பனாய், ஒரு குடும்பத்தின் ஆணிவேராய், குடும்பம் என்ற கோவிலுக்கு மூலைக்கல்லாய் திகழ்பவன்...

வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னால், தந்தையாய், சகோதரனாய், தோழனாய், கணவனாய் நிச்சயம் ஒரு ஆண் இருப்பார்.

நான் ராஜாமகள் :பதிப்பாளர் ,எழுத்தாளர்

ஆண்கள் செவ்வாய் கிரகத்திலும் பெண்கள் புதன் கிரகத்திலும் தனித்தனியாக வாழ்வதில்லை. இருவருமே பூமியில்தான் வாழ்கிறார்கள். அவர்களை பெண்கள் சக உயிராக பார்த்தாலே போதும். பெண்களை அவர்களும் அவ்வாறே மதித்தலே சிறப்பான சமுதாயம் மலரும் .

சாந்தி கிருஷ்ணன் :சமூக செயற்பாட்டாளர்

ஆண்

இயற்கையின் ஒரு அம்சம்

வாழ்க்கையில் ஒரு துணை -

அப்பாவாக

அண்ணனாக

உறவினராக

நண்பனாக

ஆசிரியராக

கணவராக

குரு / வழிகாட்டியாக என எல்லாமாகவும் இருப்பவர் .

லாவண்யா (மருத்துவர் )

ஆண் எப்போதும் "work in progress" தான். குறைபாடுகளும், பலவீனங்களும் கொண்டவர்தான் . அவர் வடுக்களால் மறைக்கப்பட்டவர்தான் .ஆனால் அவர் அன்பும், கரிசனையும் கொண்டவர் .அவரது கனவுகளை அமைதியான வழியில் துரத்துபவர், அதற்கான காரணத்தையும் அறிந்தவர் . ஆம், ஆண் என்பவர் இப்படித்தான் இருக்கிறார்

ஹேமலதா தியாகமூர்த்தி: (ஆசிரியர் )

என்னைப் பொறுத்தவரை அனைவரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் நடந்துக் கொண்டு ,யாரையும் தன் சொல்லாலும் செயலாலும் புண்படுத்தாதவரே மிகச் சிறந்த ஆண்

பாலம் :(அரசு அலுவலர் -ஓய்வு )

எப்போதும் பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பவர் ஆண்தான். வெற்றி பெற்ற ஒரு ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பாரென்றால் , வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் பின்னால் ஓர் ஆண் இருக்கிறார் .

சுப்புலக்ஷ்மி :(அரசு அலுவலர் -ஓய்வு )

நமது ஐந்தாம் வயது முதல் முப்பதாவது வயது வரை நம்மைக் கவரும் கடவுளின் படைப்பு..

முப்பது வயது முதல் ஐம்பது வயது வரை நமக்கு எரிச்சலோ அல்லது நட்பையோ வழங்கும் சக உயிர் .

ஐம்பது வயதுக்கு மேல் Gender என்பது நம் மனதிற்குள் செல்வதே இல்லை.

சுபா (மருத்துவர் )

என்னைப் பொறுத்தவரை , நல்ல ஆண் என்பவர் நல்ல வழக்கங்களும் குணநலன்களும் ,சிறந்த கொள்கைகளும் கொண்டவர் .அனைவரையும் மரியாதையாக நடத்தக்கூடியவர் .அனைவரையும் அன்பு செய்யும் அன்பானவர் . தன் குறைகளைத் தோல்விகளை ஒப்புக் கொள்பவர் . கனவுகளைத் துரத்துபவர் ,என் அப்பாவைப் போல ,என் கணவரைப் போல !

நித்யா சரண்:(ஐடி அலுவலர் )

அப்பாவாகிய ஆண் , அறிவு என்னும் கண்களைத் திறப்பவர் .

கணவன் என்னும் ஆண் .நாம் வலியோடு இருக்கும் போது வலிமை தருபவர்

மகன் என்னும் ஆண் , அன்பில் நம்மை மூழ்கடிப்பவர் .

மொத்தத்தில் ஆண் என்பவர் , என் உலகம்

தேன்மொழி:(ஐடி அலுவலர் )

ஆண் என்பவர் பெண்ணுக்கு உற்ற துணையாக இருப்பவன். உண்மையில் ஆண் என்பவன் உடலளவில் உறுதியாகவும், மனதளவில் மென்மையாகவும் இருப்பவன். பெண்ணோ அதற்கு மாறானவள். எனவே எதிரெதிர் துருவங்கள் ஈர்ப்பது போல் ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவே இவ்வுலகில் பிறப்பெடுக்கின்றனர்.

அழகான பதிலை அளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம் .

நாம் வினா எழுப்பிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னாலும் , அந்த விடைகளின் அடிநாதமாக இருப்பது " ஆண் பெண்ணுக்கு அன்பை ,நட்பை ,பாதுகாப்பை வழங்கும் நல்ல துணை . நல்ல தந்தை ,நல்ல சகோதரன், நல்ல கணவன் ,நல்ல மகன் என்பவரெல்லாம் இயற்கை வழங்கும் வரம் .அந்த வரம் அமையப் பெற்ற பெண்கள் பேறு பெற்றவர்கள் " என்பதே

பெண்கள் அன்பின் பிறப்பிடம் என்று காலம் காலமாக சொல்கிறார்கள். அன்பென்னும் ஆற்றலில் பெண்களை விஞ்சும் ஆண்கள் எக்காலத்திலும் வாழ்கிறார்கள் நம்மோடு ! அவர்களுக்கு நம் வந்தனம் !!

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்