புஷ்பராணி - பூவரசி வில்லியம்ஸ்
மனித உரிமை ஆர்வலர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விடிவெள்ளி.
திருமதி. புஷ்பராணி (பூவரசி) வில்லியம்ஸ் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் பேரவவயின் (FeTNA) 2021ஆம் ஆண்டுத் துணைத் தலைவராக இருந்தவர்.
எழில்மிகு இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இங்கு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். குறிப்பாக மனித உரிமை, அதிலும் தமிழர்களின் மனித உரிமை, தமிழர் நீதி ஆகியவற்றுக்காக குரல் கொடுப்பவர். மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்காவிலும் இலங்கையிலும் பணியாற்றுபவர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையில் எப்படி ஈடுபடத் தோன்றியது என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்.
என் இரண்டு குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அது தெரிய வந்தஉடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளின் என்னை முழுக்க முழுக்க இணைத்துக் கொண்டேன். என் குழந்தைகள் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்கும் மருத்துவ வசதிகள் மற்றும் பள்ளிகளில் சிறப்பு கல்வி சரியாக கிடைக்க வேண்டும். சட்டங்கள் அமைத்தால் மட்டும் போதாது அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று உணர்ந்து இதற்காக போராடத் துவங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
இருபது ஆண்டுகால போராட்டம் அது. வாஷிங்கட நகருக்கு பல முறை சென்று அரசியல்வாதிகளை சந்தித்து சட்ட திருத்தங்களுக்காகவும், நிதி ஒதுக்கீடுக்காகவும் போராடி அமைப்புகளின் சார்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகள் நல்வாழ்வுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன்.
மேரி கென்னடி
குடியேற்ற சட்டவியல் வல்லுனர்.
குடியேற்ற சட்டவியல் வல்லுநர். இல்லினாய்ஸ் மாநிலத்தில் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். இவர் இளம் கைம்பெண்களுக்கும், எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் சட்டவியல் ஆலோசனை மட்டுமல்லாமல், மனச்சோர்வினைப் போக்கும் வகையில் வார்த்தைகளைக் கோர்த்து மனதோடுப் பேசுகிறார்.
அமெரிக்காவில் சமீபத்தில் இளம் வயதில் பலர் இறக்க நேரிடுகிறது. அச்சமயத்தில் அந்த குடும்பத்தின் இளம் விதவைகள் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய விசா சட்டச் சிக்கல் முதல் பல இன்னல்கள். மேரி கென்னடி அவர்களை அரவணைக்கிறார்.
இந்த வகையில் பயனுறும் பெண்கள் புத்துணர்ச்சிப் பெற்று, மனச்சோர்வும், அவநம்பிக்கையும் நீங்கித் தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தின் சவால்களைச் சந்திக்கும் சாதனைப் பெண்களாகத் திகழ்கின்றனர். அவர்களும் மற்றப் பெண்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர்.
கவிதா ராமசாமி (கனவகத்தின் அன்னை)
சட்டவியல் வல்லுனர்.
இவரும் குடியேற்ற சட்டவியல் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் வசிக்கிறார் கவிதா ராமசாமி. இவருக்கு இரண்டு மகள்களும் 32 வளர்ப்பு மகள்களும் உள்ளனர். ஆமாம். 32 தான். ஆச்சரியம்! ஆனால் உண்மை! ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் இக்காலத்திலும் உலகம் போற்ற வேண்டிய அன்னை இவர். தன் கணவர் பாலாஜியுடன் இணைந்து 2017-ஆம் ஆண்டு கனவகம் இல்லத்தைத் தொடங்கி ஆதரவற்ற பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை பேணிப் போற்றி வருகின்றார்.
இந்த தம்பதி இணைந்து MITR எனும் அமைப்பை நிறுவி கடந்த 25 வருடங்களாக, முதலாம் தலைமுறை குடியேற்றப் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும் அவசரகால சூழ்நிலைகளிலும் கையாள உதவி புரிந்து வருகிறார்கள். இது ஏதோ சட்ட சம்பந்தமான விஷயம் என்று கடந்து போய் விட முடியாது. அமெரிக்காவில் இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இது ஒரு மகத்தான பணி என்பது புரியும்.
சுருக்கமாக அமெரிக்காவில் தீடீர் இன்னல்களுக்கு ஆளாக்கும் பெண்களுக்கு கவிதா இராமசாமி ஒரு கலங்கரை விளக்கம்.
தீபா கணேசன் (அமெரிக்காவின் தோட்டா தரணி.)
இராஜராஜ சோழன் கட்டிய பிருகதீஸ்வரர் ஆலயம் அல்லது தஞ்சை பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு உயர்ந்த ஒரு எடுத்துக்காட்டு. அது நமக்கெல்லாம் தெரிந்த சங்கதி. ஆனால் 2018-ஆம் ஆண்டு நடந்த தமிழ் சங்கப் பேரவைக்காக ( Fetna ) அமெரிக்கவில் தத்ரூபமாக இக்கோயிலை வடிவமைத்தவர் இவர். தமிழ் பெண்மணி தீபா கணேசன் TNF தமிழ்நாடு பவுண்டேஷனற்காக மாமல்லபுரத்து சிற்பக் கலைக்கூடங்களையும் சிறப்பாக வடிவமைத்தவர். இவ்விரண்டு அற்புதப் படைப்புக்களையும் உரிய நோக்கக் கரணங்களுக்காகத், தன்னலம் பாராது வழங்கி உள்ளார்.
இந்த கலை பெண்மணியைப் பார்த்தால் கையெல்லாம் கலை என்ற சொலவடை நினைவுக்க்கு வராமல் இருக்காது.
இதோ ஒரு டைம்லாப்ஸ் சாம்பிள்.....
பிரதிபா பேட்லீ
( நாட்டிய பேரொளி , கெண்டகி மாநிலத்தில் பேராசிரியர்)
பிரதிபா நடேசன் பேட்லீ அமெரிக்காவில் லூயீவில்லில் வசித்து வருகிறார். மூன்று முறை தேசிய அளவில் பரதநாட்டிய விருது பெற்றவர். இயக்கம் நடன நிறுவனம் மூலம் சாதி மதம் பெண்ணடிமைத்தனம் சாரா பரதநாட்டியத்தை வடிவமைத்து வருகிறார். இதற்காக Dance/USA fellowship பெற்ற முதல் தமிழர் இவர். புள்ளியியல் பேராசிரியரான இவர் லூயீவில் பல்கலைக்கழகத்தில் இணைத்தலைவராக பணிபுரிகிறார்
பேராசிரியருக்கும் நடனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கையில் அவரது பன்முகத் தன்மை வெளிப்படுகிறது.
சுதா மோஹன்
(பாரதி கண்ட புதுமைப் பெண் போல இவர் பசுமைப் பெண்)
கலிபோர்னிய மாநிலத்தில் வசித்து வரும் சாதனைப் பெண்ணான சேலத்துப் பெண். இவரது சாதனை பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
இவர் இல்லத்தரசியாக இருந்த போது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் அணையாடைகளை ( Sanitary pads ) இயற்கையில் மக்கும் தன்மை கொண்ட தீங்கு விளைவிக்காத Aura என்னும் அணையாடைகளைத் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தி, WALMART வரை எடுத்து சென்றவர்.
மற்ற பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர்.
இந்தப் பெண்மணிகளைப் பற்றி ஒவ்வொரு வாரமும் ஒரு கவர் ஸ்டோரி செய்யும் அளவிற்கு ஏராள விஷயங்கள் இருக்கிறது. இந்த சின்ன அறிமுகம் ஒரு துவக்கம் தான்.
அமெரிக்க சாதனைப் பெண்களைப் பற்றி பேசத்துவங்கினாலே எனக்கு இந்த கவிதை தான் தோன்றுகிறது......
நெடுந்தூரம் பறப்பார்கள்
ஆனால், பருந்தல்ல.
புதைந்தாலும் துளிர்ப்பவர்கள்.
ஆனால், விதையும் அல்ல.
வெட்டினாலும் கிளைப்பார்கள்.
ஆனால், செடியும் அல்ல.
மடிந்தாலும் உயிர்ப்பார்கள்.
ஆனால், கடவுளும் அல்ல.
சூறாவளிக் காற்றில் நிற்பவர்கள்.
காட்டாற்று வெள்ளத்தில் மிதப்பவர்கள்.
இடிச்சத்தத்தில் முழுங்குவார்கள்.
மின்னல் வெளிச்சத்தில் மிளிர்வார்கள்.
கொட்டும் மழையில் சிலிர்ப்பவர்கள்.
இவர்கள் தாம் நம்மூர் பீனிக்ஸ் பறவைகள்.
நாமும் இவர்களைப் போல் பறவைகளாக மாறுவோம்...
கட்டுரையாளர் - கவிதா. அ. கோ.
நன்றி அமெரிக்க செய்திகளுக்கு உறுதுணையாக இருக்கும்
பிரவீணா வரதராஜன். (பெயர்லயே வீணை இருக்கு ! 😀)
Leave a comment
Upload