நாணமோ இன்னும் நாணமோ (ஆயிரத்தில் ஒருவன்)
பெண்மையின் மேன்மை எங்கேயிருக்கிறது தெரியுமா?
அது மென்மையான உணர்வுகளின் ஊற்றுக்கண்..
அழகினைச் சுமந்துவரும் ஆரணங்கின் அங்கங்கள் ஆங்காங்கே வசீகரித்தாலும் ஒரு ஆடவன் நாடுவது எது?
விழியிமையிரண்டும் படபடக்க.. விடைகளைச் சொல்வது எது?
பெண்மை – தனக்குள் தானே கரைபுரண்டு தயக்கத்தைத் தாண்டுகிறதே – அது!
மயக்கத்தில் மெளனம் தலைமை தாங்கும்போதும் ஆடவன் நுனிவிரல்தனில் படும்போதும் கலக்கம் அடைவது எது?
அது களங்கமில்லாதது! ஒரு துளி கர்வமில்லாதது!
வார்த்தைகளுக்குள் சிக்கிவிடாமல் வளைந்து தெளிவது அது!
பெண்மை வாரிக்கொடுப்பது அது!
பூமுகமதுவும் புன்னகை தவழ புதுமையில் நனைவது அது!
அங்கே பூரணமாவது அது!
‘நாணத்தில் நலம் பாடும் பெண்மைக்கு நாயகன் தரும் பாராட்டுப் பாத்திரங்கள் – முத்தங்கள்’ என்றொரு முறை நான் எழுதிய வரிகள் இங்கு நினைவு கூறத்தக்கவை.
நாணம் என்கிற ஒற்றைச் சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள் .. அதை எப்படி விளக்கம் தரலாம்? அது எப்போதெல்லாம் வரும் என்று கண்ணதானிடம் கேளுங்கள்.. ஒரு பட்டியலிட்டுப் பாடலாய்த் தருகிறார் – ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக எழுதிய இந்தப் பாடலில் உள்ள சுகம் ஓராயிரம்..
என்று கேள்விகளைத் தொடுத்து பதில்களையும் வழங்கி அசத்தியிருக்கிறார்.
திரைப்பாடல் என்று மட்டும் கேட்டுச் சுவைப்பதோடு பாடுபொருள் பற்றித் தேடுபொருள் எத்தனையோ வைத்துக் கவிதையியற்றிய பாவலனே.. உன்னிலிருந்தே பிறந்த ஒவ்வொரு எழுத்தும் மென்மை என்பதில்தான் எத்தனை உண்மை?
கவியரசர் வெட்கத்திற்கும் நாணத்திற்கும் மற்றொரு பாடலில் மிகச் சரியாக விளக்கம் தந்திருப்பார்.. வெட்கம் என்றால் என்ன? நாணம் என்றால் என்ன?
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்...
இந்தப் பாடலில்...
{ தோட்டத்துப் பூவினில் இல்லாதது ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது }
என்றைய வரியில்.. தோட்டத்துப் பூவினில் இல்லாதது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.. ஆனால் ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? இலக்கியங்களில்.. அகத்துறைப் பாடல்களில் .. கலித்தொகையில்.. இன்னபிற செய்யுள்களில் நாணத்தை வரையறுக்கவில்லையா?
எப்படி வரையறுக்கப்பட்டாலும்.. விளக்கங்கள் தந்தாலும்.. நாணத்தை எப்படி எழுத்தில் வடிக்க முடியும்? சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்கிற விதம் அமைகின்ற பொருள் இதுவல்லவா? பூக்களை எத்தனை முறை பெண்ணுக்கு உவமைப்படுத்தினாலும் பெண்மைக்கு நிகர் பெண்மைதான் என்பதைப்போல.. நாணத்தை வேறெங்கும் காண முடியாது.. அது ஏட்டிலும் கிடைக்காது.. எழுத்திலும் கிடைக்காது.. பெண்மையின் பூரணத்தில்தான் நாணம் காட்சிதரும் என்பதைத்தான் கவியரசர் திறம்பட எளிய வரிகளில் இனிய விளக்கம் தருகிறார்... இன்னும்.. உள்ள வரிகளில் எல்லாம் இத்தகு இன்பம் கொட்டிக்கிடக்க.. நாணத்திற்கு இப்பாடலைவிட எந்தப்பாடல் இத்தனை விளக்கம் தந்திட முடியும்?
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ
ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ
{ தோட்டத்துப்
பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும்
சொல்லாதது } (2)
ஆடையில்
ஆடுது வாடையில்
வாடுது ஆனந்த
வெள்ளத்தில் நீராடுது
அது எது
{ ஆடவர் கண்களில்
காணாதது அது காலங்கள்
மாறினும் மாறாதது } (2)
காதலன்
பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை
மூடுவது அது எது
நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ
{ மாலையில்
காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே
மலர்ச்செண்டாவது } (2)
காலையில்
நீரினில் ஆடிடும்
வேளையில் காதலி
எண்ணத்தில் தேனாவது
அது எது
{ உண்டால்
மயக்கும் கல்லாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு
முள்ளாவது } (2)
நாளுக்கு நாள்
மனம் நாடுவது
ஞானியின் கண்களும்
தேடுவது அது எது
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன நாணமோ
நாணமோ
ஓஓ… நாணமோ
இன்னும் நாணமோ
தன்னை நாடும் காதலன்
முன்னே திருநாளை தேடிடும்
பெண்மை நாணுமோ நாணுமோ...
பயணம் தொடரும்...
Leave a comment
Upload