தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு – 6

20230203161625116.jpg

உயிரளபெடையின் மற்ற வகைகளைப் பற்றி பகிரும் முகமாய் பரணீதரன் தொடர்கிறார்.

எப்படி ஒரு குதிரையானது முதலில் தாவி பின் கீழிறங்குமோ அது போல் நெடில் எழுத்தில் ஆரம்பித்து குறில் எழுத்தில் முடிவது உயிரளபெடை.

சொல்லிசை அளபெடை

ஒரு பெயர் எச்சத்தை வினையெச்சமாக மாற்றி அளபெடுத்து வந்தால்‌ அது சொல்லிசை அளபெடை. ஒரு சொல்லிற்கு நல்ல அழகான ஓசையை கொடுப்பதும் இந்த அளபெடை தான்.

எச்சம் என்றால் முடியாத(முற்றுப்பெறாத) ஒரு சொல் என்று அர்த்தம். பெயரெச்சம் என்றால் அந்த சொல்லிற்கு பின்னால் ஒரு பெயர்ச்சொல் வந்தே ஆகவேண்டும்.

உதாரணமாக படித்த என்கிற வார்த்தைக்கு பின்னால் மாணவன் என்றோ மாணவி என்றோ குமரன் என்றோ ஒரு பெயர் தான் வரமுடியும். அதே போல் நடந்த, எழுந்த, சென்ற, எழுதிய போன்ற சொற்களுக்கு பின்னாலும் ஒரு பெயர்தான் வர முடியும். அதனால்தான் இதற்கு பெயரெச்சம் என்று பெயர்.

அதேபோல் வினையெச்சம் என்றால் அந்த சொல்லிற்கு பின்னால் ஒரு வினைச்சொல் (தொழில் அல்லது வேலை) வந்தே ஆகவேண்டும்.

உதாரணமாக படித்து என்கிற வார்த்தைக்கு பின்னால் வந்தான் என்றோ சென்றான் என்று ஒரு தொழிலைக் குறிக்கும் வார்த்தை தான் வரும். அப்படி வந்தால் தான் அது வினை எச்சம் ஆகும். அதே போல் நடந்து, எழுந்து, சென்று, எழுதி போன்ற சொற்களுக்கு பின்னாலும் ஒரு வினை தான் வர முடியும். அதனால்தான் இதற்கு வினையெச்சம் என்ற பெயர்.

இப்பொழுது கீழே உள்ள திருக்குறளை அலசுகிறார்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

இப்பொழுது இந்த அளபெடை ஒரு பெயர் எச்சத்தை வினையெச்சமாக மாற்றியிருக்கிறது. ‘தழுவு’ என்கின்ற வார்த்தையை ‘தழுவி’ என்று மாற்றி அதன் பிறகு அழகிற்காக ‘தழீஇ’ என்று மாறியுள்ளது. இதில் தழுவு என்பது தழுவிய என்கின்ற பெயரெச்சம். அதை தழுவி என்கின்ற வினையெச்சம் ஆக மாற்றி பின்னர் நல்ல ஓசைக்காக தழீஇ என்று மாறியுள்ளது. இதுவே சொல்லிசை அளபெடை.

இதேபோல் வளை (வளைத்த) என்ற பெயரெச்ச சொல் வளைஇ (வளைத்து) என்ற வினையெச்ச சொல்லாக வருவதும் சொல்லிசை அளபெடையே.

செய்யுளிசை அளபெடை

செய்யுளிசை அளபெடை என்னும் இசைநிறை அளபெடை ஒரு செய்யுளில் சொற்குற்றம் (திருவிளையாடல் படத்தில் கூறுவார்களே அதேதான்) ஏற்படும்பொழுது அதை சரி செய்வதற்காக வரும்.

இந்த அளவடியை பற்றி நாம் யாப்பிலக்கணத்தில் இன்னும் விரிவாகக் காணலாம் என்றார் தொடர்ந்து.

இசைநிறை என்பதற்கான அர்த்தம் என்னவென்றால் இசையில் ஓசை குறையும் பொழுது அதை சரி செய்வதற்காக வருவது. குறைந்த ஓசையை நிறைவு செய்வதற்காக வருவது அதனால் இதற்கு இசைநிறை அளபெடை என்றும் பெயர். கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளை அதை விவரிக்கிறார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

இதில் தொழாஅர் என்பதை தொழார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி தொழார் என்று எடுத்துக் கொண்டால் யாப்பிலக்கணத்தில் திருக்குறளுக்கு உரிய வெண்பா இலக்கணம் சரியாக வராது. அதனால் அந்த வெண்பா இலக்கணத்தை சரி செய்வதற்காக தொழார் என்று சொல்லை தொழாஅர் என்று திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

தொழார் - தொ ழா ர் - குறில் நெடில் மெய் எழுத்து - இதை நிரை என்று கூறுவோம். இப்படி நிரை என்பது திருக்குறளில் கடைசி சொல்லாக மட்டுமே வர வேண்டும். அதை சரி செய்வதற்காக

தொழாஅர் - தொ ழா அ ர் - குறில் நெடில் குறில் மெய் எழுத்து - இதை நிரை நேர் என்று கூறுவோம். இப்படி வந்தால் அது வெண்பாவிற்குரிய இலக்கணத்திற்குள் வந்து சேரும்.

சிறப்புச் செய்தி - வெண்பா என்பதை சமஸ்கிருதத்தில் காயத்ரி சந்தஸ் என்று கூறுவர். நம் அனைவருக்கும் தெரிந்த காயத்ரி மந்திரம் இந்த வெண்பாவிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை அளபெடை

இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர். இதை பொதுவாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. அதனால் தான் இதை அளபெடை வகையில் கூறவில்லை.

ஆடூஉ, மகடூஉ, குழூஉ, மரூஉ, ஒரூஉ, குழூஉக்குறி, குரீஇ போன்ற சொற்கள் இயல்பாக மற்றும் இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன.

ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்துக்கள் ஆகிய மெய் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது. அனைத்து மெய்யெழுத்துக்களும் அளபெடுக்காது. மெல்லின எழுத்துக்களான ‘ங்’, ‘ஞ்’, ‘ண்’, ‘ந்’, ‘ம்’, ‘ன்’ மற்றும் இடையின எழுத்துக்களான ‘ய்’, ‘ல்’, ‘வ்’, ‘ள்’ மற்றும் ஆய்த எழுத்தான ‘ஃ’ ஆகியவையே அளபெடுக்கும். இது சொல்லின் நடுவிலோ அல்லது கடைசியிலோ அளபெடுக்கும். ஒரு குறில் எழுத்திற்கு பின்னாலோ அல்லது இரண்டு குறில் எழுத்திற்கு பின்னாலோ அளபெடுக்கும். இதற்கு எடுத்துக்காட்டுகள் திருக்குறளில் இல்லை.

அவரே எடுத்துக்காட்டு கொடுக்கிறார்:

இலங்ங்கு வெண்பிறைகு டீசனடி யார்க்குக்

கலங்ங்கு நெஞ்சமிலை காண்.

இங்கே இலங்கு என்று வரவேண்டிய சொல் இலங்ங்கு என்று வந்துள்ளது. இது வெண்பா இலக்கணத்தை சரி செய்வதற்காக இவ்வாறு வந்துள்ளது. இதில் இ ல என்ற இரண்டு குறில் எழுத்துக்களுக்கு பின்னால் சொல்லின் நடுவில் ங் என்கிற எழுத்து அளபெடுத்து உள்ளது.

தொடர்ந்து அடுத்த எடுத்துக்காட்டை முன் வைக்கிறார்:

எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயா

னெங்ங் கெனத்திரிவா ரின்

அங்ங் கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து நங்ங் களங்கறுப்பா தாம்

இதில் எங்ங் மற்றும் அங்ங் ஆகிய எழுத்துக்களில் அ என்கிற குறில் எழுத்திற்கு பின்னால் சொல்லின் கடைசியில் ங் என்ற எழுத்து அளபெடுத்து உள்ளது.

அடுத்த எடுத்துக்காட்டாய் :

விலஃஃகி வீங்கிருளோட்டுமே மாத ரிலஃஃகு முத்தி னினம்

இங்கே வி ல என்கிற இரண்டு குறில் எழுத்துக்களுக்கு பின்னால் சொல்லின் நடுவில் ஃ அளபெடுத்து உள்ளது.

இன்னுமொரு எடுத்துக்காட்டைக் காட்டுகிறார்:

எஃஃகிலங்கிய கையரா யின்னுயிர்

வெஃஃகு வார்க்கில்லை வீடு.

இங்கு எ என்ற குறில் எழுத்திற்கு பின்னால் சொல்லின் நடுவில் ஃ அளபெடுத்து உள்ளது.

இவையே ஒற்றளபெடை எனப்படும்.

இந்த அளபெடைக்குரிய இலக்கணத்தை நன்னூலார் இவ்வாறு விவரிக்கிறார் :

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்

அளபு எழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே - உயிரளபெடை

, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள, ஆய்தம்

அளபு ஆம், குறில் இணை, குறில் கீழ், இடை, கடை

மிகலே அவற்றின் குறி ஆம் வேறே - ஒற்றளபெடை

குற்றியலிகரம்

குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம். இன்று நாம் பொதுவாக ‘துணைக்கு யார்’ என்று சொல்லை ‘தொனக்கியாரு' என்பது போல் கூறுகிறோம். இதுவே குற்றியலிகரமாகும். அதேபோல் நூத்தி அறுபது (நூற்று அறுபது - 160) என்று நாம் கூறுவதும் குற்றியலிகரமே.

இரண்டு சொற்களில் முதல் சொல் குற்றியலுகரம் ஆக வந்து அடுத்த சொல்லில் முதல் எழுத்து உயரமாக இருந்தால் குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆக மாறும். அதேபோல் ஒரு சொல்லில் மியா என்கிற சொல் இரண்டாவது சொல்லாக வந்தால் அந்த மி என்கிற எழுத்தின் மாத்திரை குறைந்து ஒலிக்கும். ‘மியா’ என்ற சொல்லை நாம் இன்று அதிகமாக பயன்படுத்துவதில்லை. அதனால் இதற்கு இன்றைய தேதிக்கு எந்த உதாரணமும் இல்லை. நீங்கள் உடனே சேமியா என்று சொல் இருக்கிறதே என்று கேட்பீர்கள். சேமியா என்ற சொல் தமிழ் சொல் கிடையாது. அது மராட்டிய சொல். அதை தமிழில் சேவை என்றே கூறுவோம்.

இப்பொழுது செய்யுள்களில் உள்ள குற்றியலுகரத்தைப் பற்றி கூறுகையில்,

நாடு(ட்+உ) + யாது = நாடியாது(ட்+இ)

களிற்று(ற்+உ) + யானை = களிற்றியானை (ற்+இ)

கொக்கு(க்+உ) + யாது = கொக்கியாது(க்+இ)

குரங்கு(க்+உ) + யாது = குரங்கியாது(க்+இ)

கேள் + மியா = கேண்மியா

கண்டேன் + யான் = கண்டேனியான்

செள் + மியா = சென்மியா

இந்த குற்றியலிகரத்திற்குரிய இலக்கணத்தை நன்னூலார் விளக்கத்தைக் கொடுக்கிறார்:

யகரம் வரக் குறள் உத் திரி இகரமும்

அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய

மீண்டும் அடுத்த வாரம் தொடர்வோம் என்று விடையிறுக்கிறார்.